காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-23
ஓம் எனும் பிரணவத்தின் பொருள் கேட்டு பிரம்மனை சோதித்து தண்டித்து விளையாடினர் அப்பனும் மகனும். அதன் பயனாய் சுவாமிமலையில் தகப்பன்சாமியாய் வீற்றிருந்தான் கண்ணுதற் கடவுள்.
ஓம் என்ற பிரணவம் சிவபெருமான் எழுந்தருளும் பீடம், மற்றவர் தோன்றும் இடம்,எல்லா எழுத்துக்களுக்கும் வேதங்களுக்கும் ஆதியானது.காசியில் மரணம் அடைபவருக்கு சிவபெருமானால் செவியில் ஓதப்படும் தாரக மந்திரம். அகாரம் உகாரம் மகாரம் இணைந்த பிரணவ மந்திரம்.
எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும்
பிரமனுக்கும் ஈசன் என்னத்
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன் ஓம்
எனவேதம் சாற்றும் அல்லால்
முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணியன்
ஓம்எனவம் முக்காற் கூறும்
இக்கருத்தை அறியானை எவ்வாறு
விடுவிப்ப தியம்பு மின்னோ
காஞ்சிப்புராணம்
பிரணவத்தின் பொருள் என்பது சுப்ரமண்யோம் என்று சொன்னபடி நீயும்,சதாசிவோம் என்று கூறியபடி நானும், நாம் இருவருமே அதன் பொருளாகின்றோம் ,என்றும் இதில் சந்தேகமில்லை எனவும் முருகப்பெருமான் உபதேசித்ததை கேட்ட சிவபெருமான் கூறுவதாக வடமொழி ஸ்கந்தபுரானத்தில் வருகிறது. அதனை தழுவியே மாதவ சிவஞான சுவாமிகள் காஞ்சி புராணத்தில் மேற்கண்ட பதிகத்தை இயற்றி உள்ளார்.
ஓம் சரவணபவ எனும் மந்திரத்தில் நம் ராஜராஜேஸ்வரியின் மைந்தன் சக்திவேலும் மகிழ்ந்திடுவார் எனும் போது அந்த சக்தி உமை பாலகர் மகிழாது இருப்பாரோ.ஓம் எனும் மந்திரம் சொல்லி ஓராயிரம் நாமங்கள் செப்பி நாதாந்தமுடிவேலை வணங்கி நிற்க அக்கணமே வந்து அருளுவான் அங்கையற்கண் தாய் மைந்தன்.அகரம் முதலாய் அனைத்து உயிர்களிலும் உடன் நின்று ஆட்டிவைக்கும் முருகப்பெருமான் பக்தி வழியில் செல்லும் அடியார்க்கு முக்தி நிலையும் அருளிடுவான்.
கருப்பன் சன்னதி விட்டு கடைவீதி வழியாக பிரதானசாலை அடையும் முன்னே ராமருக்கு வாய்த்த லெட்சுமனனாய் பாட்டனுக்கு வாய்த்த தனையன் ரயில் தாத்தா என்ற அடைமொழியுடன் நம்மில் பரிச்சயமான எஸ் ஏ என் இல்லம் முன் நின்று காவடி தன் மரியாதை ஏற்றுக் கொண்டு பாசமுடன் நேச நெஞ்சங்களுக்கு வாழ்த்தும் கூறி முன்னேறியது காவடி.குலதெய்வ கோவில் பூசாரிகள் முன்னே குங்குமம் தோய்ந்த வெட்டிய எலுமிச்சையை நாற்புறமும் எறிந்து கருப்பன் பெயரால் காவல் காத்துவர கடந்தது காவடி பிரதான சாலையை.
கொட்டும் மேளம் இடியென முழங்க நாதமெனும் இசை நயமாய் கந்தனது மந்திரத்தை ஒலிக்க முன்னேறியது காவடி பாட்டன் குடி கொண்டிருக்கும் தோட்டம் நோக்கி.தார் சாலை கடந்து ஓடை கடந்து தாய் மடி தேடும் பிள்ளைபோல் குலம் காத்து பக்தி மார்க்கம் காட்டி,அனைவரையும் ஒன்றிணைத்து வாழையடி வ்ழையாய் இந்த குடும்பம் தழைக்க அமர்ந்து அருள்புரியும் முருகா தாத்தாவின் குடில் நாடி அவர் தம் வாரிசுகள் வரிசை வரிசையாய் சாரை,சாரையாய் தன் பொந்து நோக்கி ஊர்ந்து செல்லும் எறும்பினை போல் ஓடி சென்றனர்.
காவடி திரு விழா கொண்டாட எம் சொந்தம் மட்டும் ஆவல் கொண்டிருக்கவில்லை அந்த தோட்டமும் ஆவல் கொண்டிருந்தது.ரோஜா மலர்களை மலர்வித்து நித்தமும் பூஜைக்கு என தன் பங்காய் வள்ளி மனாளருக்கு சேவை செய்தது.காவடி பூஜை என கொண்ட நாள் முதலாய் அதன் சிரம் ஏறி அர்ச்சித்து தான் மலர்ந்த பாக்கியம் கொண்டன அந்த ரோஜா மலர்கள்.





























