காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-16
திருவிளையாடற் புராணம் செய்த பரஞ்சோதி மாமுனிவர் ஆற்று சிறப்பை சொல்லும் போது ஒரு பாடல் வரும்
ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
இறைவியே இந்த இயற்கையாய் அமைந்தவள்.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களை சிவனாரின் கிரியா சக்தியாய் நின்று புரிபவள்.அது போலே அவளே,ஆறு,குளம்,கிணறு,அருவி,கடல் என பெயர் கொண்டு இந்த பயிர்களை எல்லாம் வளர்ப்பதும் அவளே என்பார்.
மேற் கூறிய இந்த நீர் நிலைகள் எல்லாம் அன்னையின் சொருபம் எனில் அதிலும் சிறப்பு கொண்ட புண்ணிய நதி தீர்த்தங்களில் இருந்து வந்து சேர்ந்தது தீர்த்தங்கள் நிரனின் தீர்த்த காவடிக்கு.
ஆம் அதில் சேர்க்கப்பட்ட தீர்த்தங்கள்... அருவியாய் அன்னை உருவாகும் சுருளி தீர்த்தம்.ஆறாக அவள் பிரவாகிக்கும் கொடுமுடி காவிரி தீர்த்தம்,மானசொரோவரில் இருந்து உலகின் எல்லா பாவத்தையும் போக்க புறப்பட்ட கங்கை தீர்த்தம். அழகர் மலியானும்,அவன் மருகன் முருகப் பெருமானும் குடிகொண்ட அழகர் மலை கிணற்று தீர்த்தம்,சைவ,வைணவ ஒற்றுமையை உலகினுக்கு பறை சாற்றி,பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாய் பகவான் ராமரால்,அமைக்கப்பட்ட லிங்கமாய் எம் அப்பன் வீற்று இருக்கும் இராமேஸ்வரம் கடல் தீர்த்தம்.அதையும் தாண்டி வாசுதேவ குடும்பானாம் என்ற சமஸ்க்ரித்த சொல்லுக்கு பொருளாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்று முகமதிய நாட்டில் இருந்து வந்து சேர்ந்த மெக்கா புனித நீர் என்று ஐவகை தீர்த்தங்களும் அம்சமாய் இடம் பிடித்தது, அருமை பாலகன் என் சகோதரி நித்யா பெற்ற செல்வன் நிரனின் காவடியில்.
பழநியம்பதி வாழ் சிவகுமரனுக்காய் எடுத்து செல்லும் இந்த காவடியை சுமக்கும் சிவகுமாரின் பெயரனுக்காய் அந்த காவடியை
உருவாக்கியது அவன் தாத்தாக்கள். இடும்பன் சுமந்த காவடி போல் ஒரு கம்பில் இருபுறமும் துலாபாரம் போல் சொம்பை கட்டி
உருவாக்கினார்கள். நிரனின் தீர்த்த காவடி எடுக்கும் முடிவு பின்னரே உருவானது, ஆகவே அவருக்கான செம்பினை வாங்க நானும் என்னவரும் அந்த வியாழன் அன்று சென்றோம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு.அன்று மீனாட்சியை வழிபட்ட பின்னர்,புதுமண்டபம் சென்று இதை வாங்கிய பின்னே,பைரவரை காண பேராவல் பிறக்க,எழுகடல் தெருவில் உள்ள பைரவரை வணங்க சென்றோம். அங்கே அது ஒரு அஷ்டமி தினம் ஆகையால் பூஜை புனஷ்காரம் என்று எல்லாவற்றையும் ஏற்று திருப்தியாய் தரிசனம் தந்தார் பைரவர். அதன் பின் வடக்கு கோபுர வாசல் வழியே நடந்து வந்தால் அங்கே மொட்ட கோபுரம் முன்னே முனீஸ்வரர் வழிபாடு முடித்து திரும்பினோம் .
ஒரு தெய்வீக நிகழ்வு நடக்கும் தருவாய் ஒரு மிகப்பெரிய குடும்பமே கூடவேண்டும் எனும் போது ,எத்தனை விஷயங்கள் கணக்கில் எடுக்க வேண்டியது உள்ளது.ஊர் கூடினால் தேர் இழுக்கலாம். குடும்பம் கூடினால் சாத்தியமற்ற செயல்களும் சாத்தியப்படும்.அதுவும் நமக்கு முன்னே செல்ல நமது முன்னோரும்,குலதெய்வமும் துணை நிற்கையில் கந்தன் காவடியும் அவன் பாதம் சேர்ந்தது தங்கு தடையின்றி.
அடுத்து பால் காவடிக்கு பால் வேண்டும்.அதுவும் பாலமுருகன் தானே அருள வேண்டும்.சனி கிழமையும் வந்து விட்டது எங்கே அவன் அனுப்பும் செய்தி ,அதற்க்கு முன்னே எடுத்த காவடிக்கு கனவில் வந்து செய்தி சொன்ன கந்தன் இன்னும் வழிவகை காட்ட வில்லையே என ஏங்கி நிற்கையில், மூர்த்தி சித்தப்பா தன சிந்தையில் தோன்றி கந்தன் தந்த செய்தி என முத்து என்ற பெயர் கொண்டு யாரேனும் பசு வைத்திருந்தால் அந்த பசு இதற்க்கு ஏற்றது என உரைக்க. அம்மைநகரை அடுத்த செட்டியப்பட்டியில் இருந்தது அந்த பசு. செல்வராஜ் மாமா சென்று விசாரிக்கையில் முத்து என்ற பெண்மணியிடம் ஒரு மாடு இருப்பதாக வந்தது தகவல். அதிலும் ஒரு விசேசம், இன்று முருகன் இல்லம் குடிகொண்டு இருக்கும் இடத்தில் தான் முன்னே அந்த பசு மேய்ந்து கொண்டு இருக்குமாம். முத்துகுமரனின் முடியை குளிர்விக்க நாம் எடுத்து செல்ல இருந்த பால் காவடிக்கு பாலும் வந்து சேரும்.
காவடிகள் 17 அதில் கொடுமுடி தீர்த்தகாவடி ஒன்று,நிரனின் தீர்த்த காவடி ஒன்று ,மற்றொன்று ரேவதி அத்தாசியின் சந்தன காவடி.ஆகவே மீதம் இருக்கும் 14 காவடிக்கும் பால் வேண்டும் அதற்காய் இனொரு பசு மாதவன் சித்தப்பாவால் தருவிக்கப்பட்டது. அதன் விசேசம் அந்த பசு கன்று ஈன்றது தை பூசத்தில். கிருபானந்த வாரியார் சொற்களில் சொல்ல வேண்டுமானால், எம் அப்பன் முருகப்பெருமானின் லீலைகள் அளப்பரியது. அவனின் காவடி தின லீலைகளை அடுத்த பதிவில் காண்போம்.
ஆறுமுக வேலனுக்கு அரகரோகர!
பார்வதியாள் பாலனுக்கு அரகரோகர!