Tuesday, 7 July 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-24

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-24
குலகுரு கவசம்
பெரிய தாத்தா நினைவுகளில்அனைவரும் நீந்தி கொண்டு இருக்கும்
வேலையில் கடந்த ஆண்டு காவடியின் நினைவுகளில் நீட்சியை மறைக்க முடிய வில்லை. அதோடு ஸ்ரீ மான் ASP அவர்களின் நூற்றாண்டு நினைவாக கடந்த ஆண்டுநான் எழுதிய சிறு கவசத்தை பகிர்வது மூலம் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
ரேவதி அருணாட்சலம் 
திருச்சிற்றம்பலம் 
அல்லல் போம் வல் வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்
போகா துயரம் போம்-குணமதிக மா
அருணை கோபுரம் மேவும் கணபதியை தொழுதக் கால்.
தெளிவுகுருவின் திருமேனி கண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தாமே..
அறுபடைஅழகனை
ஆழ்ந்தே நினைக்க
அகத்தினில் மலரும்
ஐயனின் உருவம்.
அருளரமுதே!
அறிவு கொழுந்தே!-என்றும்
எமை ஆளும்-அண்ணாமலை
புதல்வா...
அங்குத்தாயின் அருகே அமர்ந்து
ஆசிகள் அளிக்கும்- ஆறுமுகன்
மைந்தா....
அம்மையம்பதியில்
ஆனந்தமாய் அமர்ந்து
ஆன்மீகம் அளிக்கும்
அற்புத சீலா!
எளியோர் மனத்தே
என்றும் இருந்து
இன்னல் தீர்க்கும் -இக
பர சுகமே...
ஒன்றாய் பலவாய்
ஒளிரும் மணியே!
பழனி மலையின்-பக்தி
கனியே....-என்
சிந்தை நிறை-சிவ
ஞான குருவே-சிறு
மலைதேனே..
நினையா மனதை
நினைத்திட செய்யும்-நிமலா
நின்தாள்
சரணம்! சரணம்!
அழகா!அமரா!
அம்மை நகரின்
அருட்பெருஜோதி!
நின்தாள் சரணம்!
தயாள குணம் தந்து
எமை ஆண்டிடவே
வருவாய்..வருவாய்
வடிவார் அமுதே!
அடியார் உறவாய்
அருளே உருவாய்..
திருவே தருவாய்.. .
ஐயா சுப்பா!
குருவாய் வருவாய்
இருளை களைவாய்
அன்பர்கள் துணைவா
சாயி நேசா!
சத்திய நாதா!
காவடி சுமந்த
கருப்பனின் வடிவே
கவனம் ஈர்க்கும்
காந்த விழியே!
கருப்பனின் வாளே....
முருகனின் வேலே...
கருப்பனை தாங்கி களி நடம் புரிந்தாய்
பார்த்திபனுரில் பரவசம் கண்டாய்
பாலமுருகனை பாடியே துதித்தாய்
பாத யாத்திரை எங்களுக்கு அளித்தாய்...
பழனியின் வடிவே!
எங்கள் குருவே!
உம்மை நினைக்க
நிலையது உயரும்...
நினைத்தது நடக்கும்...
நிம்மதி நிலைக்கும்...
கேட்டது கிடைக்கும்...
அங்கம் சிலர்க்கும்...
அமைதி பெருகும்....
பார்க்க..பார்க்க
பயமது விலகும்...
பாவங்கள் தீரும்....
பகை அது நீங்கும்...
உம்மருள் இன்றி
உலகென்னகில்லை
உன்னைவிட்டால்
உறவெனக்கு இல்லை
உனையே நினைக்க
உனையே துதிக்க
எமை ஆண்டிடுவாய்-எங்கள்
ஐயா..
குறையோன் வாழ்வில்
நீயே கவசம்.
எம் குறை தீர்க்க
எழில் வேல் முருகனை
எழுந்தோடி வரசெயும்
எம் குலஞானி..
எத்தனை துன்பம்
எத்தனை இடர்கள்
அத்துணை இடரால்
அவதியுறாமல்- எதையும்
தாங்கும் இதயம் தந்த
மாசில்லா குருவே!
மரகத மணியே!
வாழ்க! வாழ்க! தணிகை படியாய்...
வாழ்க!வாழ்க!பழனிஎம்பதியாய்...
வாழ்க!வாழ்க! பரங்குன்றின் அழகாய்....
வாழ்க!வாழ்க! செந்தூர் அலையாய்...
வாழ்க!வாழ்க! சுவாமி மலை ஞான மாய்....
வாழ்க! வாழ்க! சோலைகனியாய்.!
                             கந்தன்  காவடிசுப்பன் குடில் நோக்கி வந்தடைந்தது ,அம்மை நகர் அழகு வீதிகளில் ஆடி வந்த காவடி தாத்தன் புகழ் பாடியபடி வந்தடைந்தது  பசுமை மிகு அழகியத் தோட்டத்தின் நடுவே தியானத்தில் அமர்ந்து நம் யாவரையும்  அருளாசி தந்து பக்தி எனும் ஞானப் பழம் ஈந்து அதுவே நம் குலத்தின் பலம் என உணர்த்தி ஆதி குருவாய் அமர்ந்த சுப்பையன் வனம் நோக்கி கந்தையன் காவடி நடந்தது. 
                            காங்கேயன் மனமகிழ் காவடியைப் போற்றி 
வண்டுகள் ரீங்காரமாய் புகழ் பாட, ரோஜா மலர்கள் தம் மலர்ந்த முகத்தால் வாழ்த்துரைக்க அமைந்திருந்த புற்கள் பசும்மேனி கொண்டு மகிழ்ந்து பார்த்திருக்க, வரப்புகள் இன்று  காவடி சுமந்தோர் பாதம் சுமக்க பெற்ற வரம்போல் வருமோ என வியந்திருக்க காத்திருந்த அந்த தருணம் வந்தது என காவடிகளும் தம் கந்தக் கடவுளுக்கு  அடிமைபூண்ட சுப்பன் வனம் நோக்கி வருவதில் பெருமை கொள்ள முன்னேறியது காவடிகள்.
                            சிறுவர் முதல் பெரியவர் வரை தங்கள் முன்னோர் நாமம் சொல்லி அவர் தம் வழிகாட்டுதலுக்கு  தாத்தன் வாய் மொழி வரும் அருளாசி தரும் மனோபலத்திற்கு நன்றி சொல்ல சாரையாய் வரும் எறும்புகள் போல் சரமாய் வரும் அம்புகள் போல் சரணம் சொன்னபடி வரப்பு வயலோடி ஊர்ந்து உயர்ந்து முகத்தில் உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகி உடையவன் பாதம் அடைந்ததனர். 
                             பெற்றவரே அறிவார் பிள்ளைகள் தேவை, ஆயிரம் துன்பம் வந்தாலும் ஆங்கோர் அன்னைமடி இருப்பின் அத்தனையும் கலைந்தோடும்,காத தூரம் பயந்தோடும். இங்கே வீற்றுருப்பது தாய்க்கு தாயாய் என்றும் துணை நிற்கும் முத்துரத்தினம் உடனுறை சுப்பையன். தகப்பன் உலக நியதிப்படியே  ,நிகழ்வுகள் நடந்தேறும் என கடுமைக் காட்டினாலும் அன்னை மனம் நிற்குமோ,சிவ சக்தியில் , சிவம் முன்னே சென்றுஅருவமாய்  நின்ற போதும்  தம் சக்தியால் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆலமரமாய் தளைத்து நிற்பதை அடிமரமாய் நின்று தாங்கிச் சென்ற முத்துரத்தினம் எனும் சக்தி பிரியாவிடையாய் நம் பாட்டனுடன் உறைகின்ற வீடு. மனம் கணத்து வந்தவரை மனம் தேற்றி ஆசுவாசம் தந்தே அனுப்பிவைத்தனர் முருகா தாத்தாவும்,பாட்டியும்.
                             ஒவ்வொரு ஆன்மீக நிகழ்விலும் தங்கள் இருப்பைக் காட்டி நம்பிக்கை தந்து திசையறியாப் பறவைகளாய் திரியும் நமக்கு தக்க வழியைக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.