காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-6
காவடி உருவாகி,வடிவாகி,மெருகேற்றி அமைந்த விதம் பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம்.நான் முதலில் குறிப்பிட்டபடி காவடி வீதிஉலா கிளம்பும் நேரம் வரை மெருகு ஏறிக்கொண்டே தான் இருந்தது.அதன் வர்ணனையிலிருந்து சற்றே கடந்து இந்த பதிவில் "தீர்த்த காவடி" அமைந்தவிதம் பற்றி பார்ப்போம்.
"அதிசயம் அநேகம் காட்டி, அனுதினமும் நம்மை நடத்தி,தக்க துணையாய் தான் இருப்பதை உணர்த்தி, பழனி மலை வரை நமை செலுத்தி,பக்தி எனும் பாலினில் நீராடி,பக்தன் வேண்டும் வரமும் மறவாது தந்த தண்டபாணி தெய்வம் தனை போற்றி அவன் பாதம் பற்றி வாழ்வில் முன்னேறுவோம்"
நம் குடும்பம் எடுத்து செலுத்திய இந்த காவடி தகப்பன் சாமியின் ஆணைப்படியே ,அவன் தன் திருவுள்ளப்படியே நடந்தேறியது.இதனை மெய்ப்பிக்கும் மற்றொரு நிகழ்வு இந்த பதிப்பில்.
காவடி அலங்காரம் செய்த பின் தன் பயணத்திட்டத்தில் இல்லாத ஒரு பயணத்தை மேற்கொண்டது சுலோச்சனாதேவி ,ஆம் காவடி முடிந்த பின்பே திரும்பி செல்லும் எண்ணம் கொண்டு ஈரோட்டில் இருந்து ஒரு மாதம் முன்பே மதுரை வந்துவிட்டது. ஆனால் அவள் கையால் தீர்த்த காவடி இங்கு வந்து சேரவேண்டும் என்ற இறைவனின் திருவிளையாடல் இங்கு நடந்தேறியது.
மீண்டும் வேறு வேலை காரணமாக ஈரோடு பயணப்பட்டது.
ஈரோட்டில் இருந்து வரும் வழியில் ,கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்துவர சொல்லி விஜய் மாமாவிடம், அத்தான்[என்னவர்] வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு பழனி முருகனுக்கு காவடி சுமந்து செல்வது தொன்று தொட்ட வழக்கம்.ஆனால் நாம் நினைத்தது, கொடுமுடி முதலான புனித தீர்த்தங்களை நிரப்பி ஒரு தீர்த்த காவடி சுமக்கலாம் என்பதே.
நாம் ஒரு எண்ணத்தை சுமந்தால் அதனை இன்னும் சிறப்பித்து நமக்கு அருளும் சுப்ரமணிய கடவுள் நமக்கு இந்த ஒப்பற்ற தீர்த்த காவடியை அளித்தார்.
'கற்றவர் தொழுதேற்றும் சீர்கறை பாண்டி கொடுமுடி
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே'.
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே'.
என சுந்தரரின் நமச்சிவாய பதிகம் பெற்ற பதி.கொடுமுடி நாதரும்,வீரநாராயண பெருமாளும்,பிரம்மதேவரும் ஒருங்கே குடி கொண்ட திருமூர்த்தி ஸ்தலம். வன்னிமரம் விசேசமாய் உள்ள இடம்,தெற்கு நோக்கி பாய்ந்த காவிரித்தாய் கிழக்கு நோக்கி திரும்பிய புண்ணிய தலம்.
ஆதிகாலம் தொட்டு தீர்த்த காவடி சுமந்து பழனியம்பதியை தரிசிக்கும் வழக்கம் உண்டு.அந்த பாக்கியம் நமக்கும் கிட்டியது.
காவடி சுமக்கும் முன் அந்த வாரம் வியாழன் அன்று, கொடுமுடி சென்ற தேவியும்,விஜய் மாமாவும், அங்கு இருந்த தெரிந்தவர் துணைகொண்டு, நாம் வழிமுறைகள் அறியாவிடினும் ,அதனை அறிவுறுத்த ஒரு மனிதனை அனுப்பி முறைப்படி தீர்த்த காவடி கட்டப்பட்டது.
காவிரிக்கரையில் உள்ள வன்னிமரத்தடி விநாயகப்பெருமானை வணங்கி ,
புது குடம் தனில் நடுஆற்றில் இறங்கி ,தெள்ளிய சுத்தமான புனித நீரை நிரப்பி,கொண்டு வந்து குருக்களிடம் தர,அதில் வன்னி இலை இட்டு,தொந்தி கணபதி ஆசியுடன் இரண்டு துணிகள் கொண்டு மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டது தீர்த்த காவடி.
புது குடம் தனில் நடுஆற்றில் இறங்கி ,தெள்ளிய சுத்தமான புனித நீரை நிரப்பி,கொண்டு வந்து குருக்களிடம் தர,அதில் வன்னி இலை இட்டு,தொந்தி கணபதி ஆசியுடன் இரண்டு துணிகள் கொண்டு மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டது தீர்த்த காவடி.
முழுமுதற் கடவுள் ஆசி பெற்ற ,தீர்த்தம் அவன் அப்பன் ,ஆதி அந்தம் இல்லா அற்புதக்கடவுள்,மனிதர் விணை அகற்றி முக்தி தர கருணையுடன் காத்திருக்கும் கொடுமுடி நாதரின் திருப்பாதம் அமர்ந்தது. அங்கும் என் அப்பன் அவன்தன் மைந்தனுக்கு,நீராட்ட செல்லும் இந்த காவடியை,அதனை சுமக்க இருக்கும் எம் குலபெண்களுக்கு ,இதனை சுமந்ததனால் ,அவர் சுமக்கும் கவலைகளை முற்றிலும் களைந்திட ஒரு வாய்ப்பும் அளித்தான்.
பின்னர் கொடுமுடி கொண்ட தீர்த்தம்,ஊதியூர் கண்ட பின்னே அவன் மைந்தனை சென்றடைய வேண்டும் என்பது மரபு.
பின்னர் கொடுமுடி கொண்ட தீர்த்தம்,ஊதியூர் கண்ட பின்னே அவன் மைந்தனை சென்றடைய வேண்டும் என்பது மரபு.
எனவே இந்த புண்ணிய காவடியை மடிசுமந்த அந்த தம்பதியும் மறவாமல் சென்றடைந்தது ஊதியூர் சிவன் கோவில். அங்கு அருள் பாலிக்கும் முனீஷ்வரரை முதலில் வணங்கி அந்த காவடி மற்றவர் கைபடாமல் சென்றடைந்தது சிவன் சேவடி.
சிவம் அது இந்த தீர்த்த காவடிக்கு தன் முழு ஆசியையும் தந்தது.ஊதியூர் சிவன் கோவில் கட்டிடத்தால் ஆனது, முழுதும் உத்திரம் அமைந்த இடம்.அங்கு அன்றைய தினம் கோவில் முழுதும் சாற்றப்பட்டு இருந்தது வெள்ளை நிற நந்தியாவட்டை மலர்கள்.இவர்கள் சென்ற பொழுது குருக்கள் தவிர வேறு யாரும் இல்லை.அவரும் தீர்த்த காவடியை சிவன் பாதத்தில் வைக்க சொல்லி ஆராதனை காட்டி, பின்னர் எடுக்க சொன்னார்.
தீர்த்தகாவடி அங்கிருந்து அதிசயம் அநேகம் சுமந்து வந்து சேர்ந்தது முருகன் இல்லம்.மீண்டும் வளரும் காவடி நினைவுகள்.