Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17. Show all posts
Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17. Show all posts

Friday, 17 April 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17.

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

உனது கமலம் போன்ற திருவடிகளில் 
அரை நிமிஷம் நேரம் கூட தூய தியானத்தில் 
வைக்க அறியாத மட மூடன் நான்.
குற்றம்,குறையுடன் நான் இருந்தாலும் , 
கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே ! 
நீர் எமை ஆட்கொண்டு அருள் செய்திட மாட்டீரோ!.

                              இவ்விதமான வேண்டுதல் உடனே சனிகிழமை இரவு காவடிக்கு கடைசி கட்ட அலங்காரம் நிறைவேறி கொண்டு இருந்தது.பண்டாரகோலனாய் இருந்தாலும்,பாராளும் ராஜ அலங்காரத்தில் இருந்தாலும் எம் அய்யனின் அழகு குறையாது. அவ்விதமே பண்டார கோலமாய் காவி உடைதரித்திருந்த காவடிகளை, கலை அழகு மிக்க முருகு தன் முக அழகு போல் மிளிரவைக்க முடிந்தவரை முயன்றிருந்தோம்.ஒவ்வரு காவடியிலும் இந்த சுப்பிரமணி  பெயர் சொல்லும் பித்தளை மணி கோர்க்கப் பட்டது.
அய்யனுக்கும் திருஷ்டி படும் என்று அவன் பெயராலே எலுமிச்சம் பழம் சேர்க்கப்பட்டது.அடுத்த நாள் பால் கட்டவென சொம்புகளும், காவி துணிகளும்,கயிறும் பக்குவமாய் தயாரானது.மஞ்சள்,பச்சை உடுப்பணிந்த விபூதி பை ஒவ்வரு காவடியிலும் கட்டப்பட்டது.
இவ்விதமாய் காவடிகள் உருவேற்றும் வேலை  பனிரெண்டு மணி வரை தொடர்ந்தது.
                                சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்து காத்திருந்தது.
எல்லார் மனதிலும் ஒரே எண்ணம் அது கந்தன் காவடியை சுமந்து வரும் காட்சியை உருவகப் படுத்தி காத்திருந்தது.இன்னும் சில மணித்துளிகள் போதும் அவன் தன் பெயர் சொல்லி ஆடிவரும் காவடி செல்லும் வழி இடம் எல்லாம் விழி வைத்து  கண்டு இன்பமுறும் நேரமதை நெருங்க.
                                 மறுநாள் காலையில் முதலில் கோமாதா பூஜை செய்து,பின்னர் முன்னோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு,காவடி வழிபாடு செய்து முருகப் பெருமான் பேரருளால் அவன் நாமம் சொல்லி அவனுக்காக எடுக்கப்படும் இந்த காவடி முருகன் இல்லம் விட்டு புறப்பட்டு, அம்மை நகர் வீதிகளை வலம் வந்து ,நம் பாட்டன் குடியிருக்கும் மலர் சோலை தனை அடைந்து வழிபட்டு,பின்னர் பெருமாள் கோவில் வலம்  வந்துமீண்டும் முருகன் இல்லம் அடைவோம் என்ற திட்டம்.
                                 வந்தது பேரருள் பொருந்திய ஞாயிறு காலை.அன்றைய பொழுது மலரும் போதே அனைவர் மனதிலும் விந்தை நிறைந்த சிந்தை.இத்தனை நாள் காத்திருந்த காவடி நாளும் வந்து விட்டது.வீடே தெய்வீக மணம் கமழும் ஆன்மீக கோவில் ஆனது. 
                பிறக்கும் உயிர்கள் எல்லாம் இறைவன் காலடி தாமரையில் உரைவதை உன்னதமாய் என்னும்.அவ்விதமாய் என்று செய்த தவப் பயனோ மூங்கில் மரமாய் பிறந்து,வளர்ந்து தன்னை கந்தன் காவடிக்கு வடிவு கொடுத்த மரங்களும் முக்தி பெற்றிருக்கும்.அவைகளும் தான் பெற்ற வந்த வரம் எத்தகையதோ,பக்த்தி மனம் சிறக்க பக்குவமான காவடியை உருமாறி வணங்கப்படும் பேரருளை பெற்றது.என்றேனும் நமக்கும் அந்த பாக்கியம் கிட்டுமோ!
                                    சாமி அறையில் திரை மறைவில் தவம் இருந்த காவடிகள் வீதி வலம் வர தயாராய் கூடத்தில் குடியேறின.கூடத்தில் நடு நாயகமாய் தண்டம் ஏந்தி  கோலோச்சும்  தண்டாயுத பாணி வீற்றிருக்க அவருக்கு இருபுறமும், சூரனை அழிக்க புறப்பட்ட வேலவரின் இருபுறமும்,கைலாய சேனையாய்  கணங்கள்  நின்றது போலே காவடிகள் நின்றிருந்தன.
                                    முன்னோரை பூஜிக்கவென ஐந்து சொம்புகள் நிறைகுடமாய் தாமரை தாங்கி நிற்க,அவர் தம் குலதெய்வங்களுக்கு என ஐந்து செம்புகள் நிறை நீராய் தாமரை தலை சூடி இருந்தன.நம் முன்னோரும்,குல தெய்வங்களும் அதில் ஆவாகனம் ஆகி ஆசியுடன் வீற்றிருந்தனர்.
                                     வகை வகையாய் வண்ண மலர்கள்.மல்லி,முல்லை,
செவ் வந்தி,ரோஜா,தாமரை,அரளி,மருவு,மரிகொளுந்து,சம்மங்கி என்று தோரணமாய்,மாலைகளாய்,தொடுத்த பூக்களாய்,உதிரிபூக்களாய் என 
எல்லா வகையிலும் மணம் பரப்ப. சாம்பிராணி,ஊதுபத்தி,சந்தானம் சவ்வாது பன்னீர் என்று வாசனை திரவியங்களும் தம் பங்கை செவ்வனே செய்ய,நெய் தீபம் மணக்கும் குத்துவிளக்கு அம்மையவள் மேனி போல் மிளிர.முருகன் இல்லம் ஆன்மிகம் மணம் கமழும் ஆறு படையப்பனின் மற்றுமொரு படை  வீடானது.
                                     ஆடவர் எல்லாம்,காவி உடுத்தி மாலை அணிந்து சந்தானம் பூசி முருகன் அடிமைகளாய் முழுதாய் உருமாற. எம் குல பெண்டிரும்,மஞ்சள் வண்ணம் கொண்ட மங்கலமான புடவையில் மாரியவள் அடிமை போலே உரு கொண்டோம்.குடும்பத்தின் மூத்த உறுப்பினர் கருப்பையா தாத்தா  முதல் கடை குட்டி சக்திவேல் வரை காத்திருந்த அந்த தருணம் வந்து விட்டது.
                              வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
                                 வீர வேல் குமரனுக்கு அரோகரா!