Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-4.. Show all posts
Showing posts with label காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-4.. Show all posts

Wednesday, 25 June 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-4.

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-4.
காவடியில் வண்ணக்கலவை
                      எந்த ஒரு விசயத்திலும் வண்ணங்கள் மிக முக்கிய பங்களிப்பை தருகின்றன.அதனால் தான் காவடி எடுப்பதில் சிறுவனான ஸ்ரீராம் காவடியை முருகனதாக பச்சை வண்ணமும் ,சக்தி காவடியை மஞ்சள் வண்ணமும் மற்ற அனைத்தையும் உயர்ந்த காவியிலும் அமையப்பெற்றது.
                    
                    அதன் பின்னர் முதலில் சொன்னது போல் ஒரே வகை கருப்பன் படம் இரு விதங்களில் வண்ணப் படுத்தப் பட்டது.இந்த பணி முதலில் வித்யாசப்படுத்தி காட்ட என்று மட்டுமே மூன்று வண்ணங்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்டது.அதன் பின்னே அழகே உருவாய் உருமாறியது.

              அச்சடிக்கப்பட்ட கருப்பனசாமிப் படம்.....கருப்பு வேட்டியும்,மலர் வண்ண மாலையும், மின்னும் வீச்சரிவாளுமாக கண்டவுடன் மிரட்டும் ,காண காண திகட்டும் பார்த்திபனூர் கருப்பனாக மாறினார்,தேவியின் கை வண்ணத்தில்.
மொத்தமாய் 7 காவடிகளில் வண்ணம் தீட்டப் பட்டு வரிசையாய் முருகன் இல்ல பூஜை அறையினில் ஒன்று சேர்ந்து நின்ற கோலம்- நீ ஏழு பிறவி எடுத்தாலும் உன்னை சுற்றி,சுற்றி வந்து காப்பேன் என்று அவன் சிரித்து சொன்ன செய்திதானோ!

               கருப்பன் கருப்பில் கவர்ந்திழுக்க.....முத்து விஜயன் அவன் காவடியில் கண்ணை குளுமைபடுத்தும் பச்சையில்,வண்ண வண்ண மாலை தாங்கி,பகை விரட்டும் வீச்சரிவாள் தான் மிளிர குறிச்சி திட்டின் கோச்சடையான்,எங்கள் மாவடியான் வந்திறங்கினான்.

          ஓருருவாய் அதுவும் அரு உருவாய் எம் அப்பனை போல் குறிச்சியில் இருந்து என்குலத்தை காத்திடும் மாவடியானை ,கோச்சடையில் வீற்றிருக்கும் அண்ணன் தம்பியாய் காண ஆசைப்பட்டு ஒரு பக்கத்தில் அருகருகே அமைத்து ஆனந்தம் கொண்டோம் என் தங்கையும் நானும்.ஆனால் அதனை மாவடிகருப்பனும்,
பார்த்திபனூர் கருப்பனும் ஒன்றாய் இணைந்திட்ட கனமான காவடி என்று சிலிர்திட்டனர் சித்தப்பாவும்,பெரியத்தானும்.
இரட்டை வாள் தாங்கி கடினமான சவால்களையும் களைந்திடுவேன் என சொல்லும் இரட்டையராய் வீற்றிருந்த கருப்பர்கள் தம் அழகை காண இந்த கண்கள் தாம் செய்த பாக்கியம் என்ன! கல்லாய் நிற்கும் மாவடியானை எம் கண் முன்னே உருவாய் கொண்டு வரும் பெரியத்தான் அன்று வண்ணங்களால் முறுக்கு மீசைக்கு இன்னும் முறுக்கேற்றி கம்பீரமாய் சன்னதம் வந்து ஆடும் எங்கள் பெரியமாமாவை கண் முன் கொண்டு வந்தார்கள்.

                  எல்லாம் முன் நின்று செய்யும் சித்தப்பாவிற்கு,சிறப்பாய் ஏதேனும் செய்யவேண்டும்,உன்னை ஒழிய ஒருவரை நான் நம்புகிலேன் என மாறாத சிந்த கொண்டவர்க்கு,முருகனை தவிர ஒரு பரிசு உண்டோ? எனவே அவர்களது காவடியில் மட்டும் முருகனை வண்ணம் தீட்டி தனது எண்ணத்தை சிறப்பாய் ஈடேற்றினார் பெரியத்தான்.

          ஒருகால் தாங்கி நின்று ஓங்கி வாள் வீசும் மதுரை வீரன்,அழகிய பகவதியாய் சிவப்பு வண்ண சேலை தாங்கி பகவதி அம்மன்,அங்காள ஈஸ்வரியாய்,அருள்மிகு இருளாயி அம்மையாய் சக்தி வடிவில் அம்பிகை,அரு உருவாய் நின்று உலகம் உய்விக்கும் அம்மையப்பன் லிங்க வடிவில், ஈசன் குடும்பம் சுமக்கும் பேரு பெற்ற நந்திஎம்பெருமான்.என வரிசையாய் வண்ணம் கொண்டனர் தேவி மற்றும் பெரியத்தான் துரிகையில்.

                        காவடியில் அலங்கரிக்க என அமர்ந்த இரு நாளும் நானும்,தேவியும் தோரணம் அமைக்க வடிவம் அமைக்க,அதை செயல் படுத்த மங்கைசித்தி,
செல்வி,இந்து,வர்ஷினி இவர்களுடன் எங்கள் சுட்டி சிவராமனும் இணைந்து கொண்டான்.ஓடியாடும் பிள்ளைகள் ஓரிடத்தில் நாள் முழுதும் அமர்ந்து பாசி கோர்த்த அழகு என்று மறவாது.

             இதோடு மழலைகளும் ...நான் என்ன செய்ய என அடிக்கடி பர்வேசும், எல்லோரும் மும்மரமாய் வேலை செய்யும் போது தாம் மட்டும் உறக்கம் கொள்வதா ,என தூக்கம் மறந்து எங்களுடன் வேலை செய்யுமிடம் வந்து பள்ளி கொண்ட சக்திவேலும்,மாலை பூஜைக்கு வந்து நாங்கள் செய்த காவடியை கண்டு மகிழும் அபினவும் என காவடி அனைவரையும் ஆர்வமுடன் பங்கெடுக்க வைத்தது.

      சிந்திக்க சித்திக்க இன்னும் நிறைய விஷயங்கள் மனதை நிறைத்தவை வலம் வருகின்றன.மீண்டும் அடுத்த பதிவில்