Saturday, 21 March 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

                                  மே மாதம் 2014 ஆம் ஆண்டு,24 ஆம் தேதி இனிய காலை பொழுது புலர்ந்தது ,முந்தைய இரவின் பலத்த காற்று,இடி,மின்னல்,மழை இவற்றின் சுவடுகள் சிலவற்றை மட்டும் நமக்கு உணர்த்திக்கொண்டு.முதல் நாள் இயற்க்கை காட்டிய விளையாட்டால் மின்சாரம் சில பிரச்சனைகள் தர,வீட்டின் மேலே போட்டிருந்த கொட்டகை ஆட்டம் காண என சிற்சில பிரச்சனைகள் நடந்தேறியது.முதல் நாள் வரை கடுமையாய் இருந்த அக்னி நட்சத்திர வெயில் அன்று சற்றே தணிந்தது.
                                
                                   ஓரிடத்தில் இருந்து விதையாய் தோன்றிய மரங்கள் பதியம் இடப்பட்டு வெவேறு இடத்தில் வேரோடும் அதுபோலே,ஒரு கூட்டில் ஜனனம் கொண்ட பறவைகள் சிறகு முளைத்து தன் குடும்பம் அமைக்க வெவ்வேறு திசை பறக்கும்.அந்த பறவைகள் எல்லாம் பாசப் பறவைகளாய்,பக்தி பறவைகளாய் மாறி,ஆதாரமாய் நின்ற அம்மைநகர் கூடு தேடி வர ஆரம்பித்தது.முருகன் அருள் கொண்ட இல்லம் கலை கட்ட தொடங்கியது.

                                  காலை பூஜை காவடிக்கு கடவுள் வாழ்த்தோடு சொல்லி ,சிற்றுண்டி முடித்து சீக்கிரமே அமர்ந்தோம் ,காவி உடை தரித்த காவடிகளுக்கு,கலையழகு கொண்ட வண்ணமிகு மயில் தோகை பீலி கொண்டு அலங்கரிக்க.மயூரின் பீலியை வகை வாரியாய் பிரித்தெடுத்து,வள்ளி மணவாளன் பெயர் சொல்லி சுமந்து செல்லும் பால் காவடிக்கு, கணம் சேர்த்தோம்.
                   
                            பழனி செல்லும் முன்னே பிள்ளையார் பட்டி பிள்ளையாரை தரிசிக்கவேண்டும் என்பது ராஜா மாமாவின் கொள்கை.அன்று அதிகாலை அண்ணன் தம்பியாய்  இணைந்து ஆறுமுகன்  சோதரனாம் ஆனைமுகனை வழிபட்டு வந்தார்கள்.
                       
                               கும்பகோனத்தார்  குலதெய்வ வழிபாடு ஒன்று மீதம் இருந்தது. பிறந்ததில் இருந்து எங்கள் அப்பா வீட்டு குலதெய்வம் கோவில் சென்றதில்லை நானும் என் சோதரியும்.எனவே பின் காலை பொழுதினிலேஎன் ராஜேஷுடன் அம்மை நகர் அருகே உள்ள எத்திலோடு  என்னும் ஊரில் குடி கொண்ட என் அப்பன் வீட்டு குலதெய்வம் சீலைகாரியை வழிபட புறப்பட்டோம் சிறுகுழுவாய்.

                                 நிலக்கோட்டை அருகே குடிகொண்ட எம் பூர்வீக முன்னோர்கள் வாழ்ந்த பூமி அது. மூன்று தலைமுறை முன்னால் நேர்ந்த அசம்பாவிதம் ஒன்றின் காரணமாய் குலதெய்வ கோபத்திற்கு ஆளான குலம்  அது.சில மாதம்  முன்னே,கோவிலை எடுப்பிக்க ஆணை வந்தும் ,மெல்லவே கோவில் வேலைகள் முன்னேறும் கோவில் அது. இதை சொல்லும் காரணம், மனிதர்களின் அறியாமை காரணமாய் குலதெய்வமே கோவித்து ,சங்கடங்கள் பலவற்றை சந்தித்து வரும் சந்ததிகள் அங்குண்டு. 
அவனருளாலே அவன் தாழ் வணங்கி என்னும் கூற்றை மெய்பிக்கும் கோவில் அது. கூரை வீட்டில் குடிகொண்ட முன்னோர்கள் நம்மை காக்கும் தெய்வங்களாய் உருமாறி,மாரியம்மாவாய் நிற்கும் என்பதின் வடிவம் அந்த கோவில். முதலி விக்ன விநாயகர் தனி கருவறையில் தனித்திருக்க.சமயபுரம் மாரியும்,சீலைகாரியும் ஒரே சன்னதியில் அமர்ந்திருக்க,முன்னே அவள் அண்ணன் மதுரைவீரன் வீற்றருவாள் பிடித்து நிற்க, அடுத்த சன்னதியில் சோனை சாமி. இந்த வீட்டு கோவிலுக்கு மூன்று வாசல். எப்போதோ வரும் பங்காளிகள் விளக்கேற்றி சாமி கும்பிட்டு செல்வார்கள்.

                               நாங்கள் போன நேரம்,கோவில் எல்லா வழிகளும்,
திறக்கப்பட்டு, கழுவிடப்பட்டு ,பத்தி மனம் கமழ பக்தி மயமாய் இருந்தது. முன்னமே என் சகோதரன் சொல்லி யாரோ வந்து திறந்து வைத்திருந்தார் என நினைத்தோம்.ஆனால் அங்கு சென்ற பின்னே அங்கிருந்த அம்மா,மதுரையில் இருந்து வந்தது என்றும்,நீண்ட வருடங்கள் சென்று இன்று வந்து, சாமிகளுக்கு கைங்கர்யம் செய்ய வந்தது என்றும் அறிந்து அதிசயத்தில் மூழ்கினோம். பூஜை பொருட்கள் ஒவ்வரு தெய்வத்திற்கும் வாங்கி வந்ததை வைத்து,முறையாய் ராஜேஷை கொண்டே தீபாராதனை காண்பிக்க சொன்னார்கள் மாமா.மன நிறைவாய் கும்பிட்டு,இத்தனையும் செய்த அந்த அம்மைக்கும்,பிரசாதம் வைத்து கொடுத்தோம்.
   
                             இதுவரை சென்ற அனைவரின் குலதெய்வ கோவில்களிலும்,
அருள் வாக்கு சொல்ல ஆள் இருந்தது என்று நினைத்திருக்கும் போதே....
குலவை ஒலி  முழங்க சூடம் ஏற்றி காண்பிக்க சொல்லி அந்த அம்மா வடிவில் வந்து சமயபுரத்தாள் வாக்கு தந்தாள்.கலங்காதே மகனே காலம் வரும் உன் உடன் பிறப்பையும் வாழவைப்பேன்,என வாக்கு தந்தாள்.நல்ல ஆசி அதுவும் கோபம் கொண்ட குலதெய்வம்,மனமிரங்கி பொன்னடி மக்களுக்கு வாழ்த்து சொல்ல.கோடையிலும் குளிர்ந்து  எங்கள் மனம்.

                            மதிய உணவுக்குள் திரும்பிவிட்டோம் அம்மை நகர்.காவடியும்,காவி உடை,மயில் பீலி,என பக்குவமாய் பக்தி மயமாய் உருவாகி  உருவேறி கொண்டே இருந்தது. இரவினில் வெகுநேரம் வரை மணி கட்டும் செயலும்,தீய சக்திகள் அண்டாமல் பாது காக்க,
காக்க காக்க கனகவேல் காக்க என்ற மந்திர சொல்லுக்கு இணங்க எலுமிச்சை பழம் கட்டி,பலம் சேர்த்தோம்.
                              கொடுமுடி தீர்த்த காவடி விவரம் ஏற்கனவே அறிந்தோம்.இன்னும் ஒரு பாலகனின் தீர்த்த காவடி உருவானது மகவும் சிறப்பாக பால முருகனுக்காக.ஆம் அது அவ்வைக்கு சுட்ட பழம் தந்த தகப்பன் சாமியின் ஞானம் எல்லாம் பெற்று வந்த அமிர்தமான அன்னையின் மைந்தனுக்காக.நிரனுக்காக அமைந்ததது அருமையான காவடி.அதன் சிறப்பை ,சிறப்பாய்  அடுத்த பதிவில் காண்போம்.


பழனிமலை தண்டாயுத பாணிக்கு அரோகரா.
ஆவினன் குடி சிறக்கும் பாலனுக்கு அரோகரா.


No comments:

Post a Comment