காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-27
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே
அஞ்சு முகும்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என் வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
காக்கக் கடவியநீ காவா திருத்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்.-
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
பழனி மலை , பழம் நீ என அன்னை வார்த்தையில் தண்டம் தாங்கி சிவசக்தி மைந்தன் அமர்ந்த மலை. இடும்பர் தூக்கி வந்த சிவகிரி, சக்திகிரி இதுவெனில், சிவனையும், சக்தியையும் வலம் வந்த விநாயகர் கூற்றுப் படி இதுவே உலகு, அதன் மேல் நின்று அருளாட்சி செய்யும், ஜோதிவடிவான உருவமற்ற பரப்ரும்மம் என்பதே சுப்ரமணிய சுவாமி எனில், இப் புண்ணிய பதியாம், பழனிமலை வலம் வருதல் எத்தனை புண்ணியம். அம்மையப்பனை வலம் வந்தால் கனி அவசியம் கிட்டும்,வருடம் தோறும் வலம் வருகிறோம், இம்முறை காவடி தாங்கி வலம் வந்தோம், நிச்சயமாய் அந்தக் கனியும் கிட்டியது.
ஆடி வந்தோம், பாடிவந்தோம் ,அவன் புகழ் பேசிவந்தோம், அரோகரா என்றோம், அறுமுகவா என்றோம்,வா வா வடிவேல் என்றோம்,வெற்றிவேல்,வீர வேல், வீரன் கை சக்தி வேல் என்றோம், ஆடாதார் யார், பாடாதார் யார், பரவசத்தில் மூழ்காதார் யார், தன வயத்தில் இலாதார் யார், குன்றின் மேல் நிற்கும், குமரனை தரிசிக்க சில தருணங்களே மிச்சம் வந்து விட்டோம் மலையடிவாரம் ஆரவாரமாய், இன்னும் சில பல படிகள் ஏறினால் போதும் அடைந்து விடலாம் இலக்கு, அதன் பின் காப்பது அவன் பொறுப்பு.
ஆட்டமும்,பாட்டும், பரவசமும், படிக்கட்டு என்பதால் குறைந்ததா என்ன, அதுவும் செல்வது ஏறுமயில் வாகனனை தரிசிக்க அன்றோ, அதனால் எல்லாமே ஏறுமுகம் தான் அங்கு.ஆவேசம் பொங்கும் கருப்பன், அதிகாரம் செலுத்தி வர, அரங்கேறியது ஓர் ஆட்டம், தீர்த்தம் கொண்டுவரும் மங்கையருள் குடியேறினால் சக்தி, பாலகனாய் வந்தவரிடம் பரவி நின்றது பாலகன் அருள், சின்னஞ்சிறு பெண்களில் சிரித்து மகிழ்ந்திருந்தாள் சிவசக்தி, பக்குவப்பட்ட அடியாருள் பழமாய் மகிழ்ந்தான் கிழவன், விநாயகர் சன்னதி,கருப்பன் சன்னதி, இடும்பன் சன்னதி, என வழிபாடும்,வான்முட்டும் ஆட்டமும்,பட்டும், அரோகரா கோசமும் என ,மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்கியதும் அறியாது, எம் உயிர் மூச்சு அப்பன் முருகு என்று படி ஏறி பரந்த மலை மேல் அன்று ஞானப் பண்டிதன் வந்தமர்ந்த மலை வந்தடைந்தது காவடி.
படிப்படியாய் ஏறி வந்தோம் பரம் பொருளை காண வந்தோம், காவடி தூக்கி வந்தோம் கந்தவேலை வணங்க வந்தோம்,
பாலும்,சந்தனமும்,தீர்த்தமும் கொண்டுவந்தோம் அபிசகப் பிரியனை ஆராதிக்க வந்தோம், சுப்பன் குடும்பம் கூடி வந்தோம் கூத்தன் மகனை கும்பிட வந்தோம்.
அப்பனுக்கு ஓர் கைலாயம் எனில் ஆனைமலை சரிவில் உள்ள அத்தனை மலையும் அழகன் புகழ் பாடும், குன்று தோறும் நின்று ஆட்சி புரியும் அய்யன், ஆறுபடையப்பன் ,தண்டம் தாங்கிய தண்டாயுத சாமியின் மூலம்,வந்தவர் பிணக்கை எல்லாம் தீர்க்கும் வண்ணம் மருந்தாகி நிற்கும், போகர் வடித்த மூர்த்தியில் வந்தமர்ந்து அருள் பாலிக்கும் கந்தக் கடவுள் மூலஸ்தானம் சுற்றி ,பிரகாரங்களில் மலை மீதே மற்றொரு காவடி வலம் , மேளம் கொட்டி,நாதம் முழங்க,காவடி தூக்கி,சதங்கை ஒலிக்க கந்தக் கடவுள் மந்திரம் சொல்லி,உச்சம் தொட்டது காவடி நிகழ்வு.
இதோ எங்கள் பிரார்த்தனை எல்லாம் சுமந்த காவடி,இத்தனை நாளாய் பாமாலை,பூமாலை சூடி முருகன் இல்லம் விட்டு, முருகன் சன்னதி நாடி வந்த காவடி ,அவன் புகழ் பாடி வலம் வந்து நாடியது அவன் சேவடி.கிரிவலம், கிரியின் மீதும் வலம் ,அந்த கிராஜ ராஜனின் புகழ் பாடி தூக்கி வந்தோம் காவடி, ஆடி வந்தோம் காவடி அவன் கொ டி மரம் முன்னே நின்றே அது என்றும் சிறக்க வென்றே ,ஆவேசம் ததும்ப, பதினாறும் பெற்று பெரு வாழ்வு அனைவரும் பெற வேண்டி வரமாய் பெற ஆனந்தக் காவடி, அச்சம் தவிர்த்து ஆனந்த வாழ்வு பெற ஆதி மைந்தன் காவடி, சுப்பன் அடிமை பூண்ட சுப்பன் குடும்பம் சுகம் பெற சுந்தரக் காவடி, கருப்பன் அருள் என்றும் காத்து நிற்கும் எனும் கருணை நிறைக் காவடி, முத்துக் குமரன் சித்தம் இதனால் குளிர்ந்து என்றே மகிழ்ந்து நின்ற காவடி,அதன் முழுமை கண்டு முறையாய் நின்று ஆச்சாரமாய், அலங்காரமாய் ,ஆனந்தமாய், ஆறுபடை வீடுடைய அய்யாவின் பாதம் இனிதே பணிந்தது.அரோகரா !அரோகரா!
எல்லாம் வல்ல எம்பெருமான் ,இணை சேவடி பணிந்தப் பின்னே வேண்டுவதும் ஏதேனும் உண்டோ ,எல்லாம் அவன் செயல்,அவனுக்கு தெரியாதோ அவன் பிள்ளைகள் நலம் பேன, அனைவரின் பிரார்த்தனையும் செவி மடுத்தான், சரியான காலம் வரும் பொது, கர்மவினை கழியும் பொது,நம் வினை குறைத்து,தீவினை முடித்து, நல்விதமாய் அருள் புரிவான். சிக்கனப் பிடியும் சிங்கார வேலன் பாதம் ,சிக்கல் அவிழ்த்து சிந்தை குளிர தந்திடுவான் வேண்டியன யாவும்.
பால் காவடி பதம் பணிந்தது, அவன் மேனிக் குளிர அவை பங்களிக்க வேண்டாமோ, ஆகவே ஒரு குடத்தில் எல்லா பாலையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,சித்தப்பாக்கள் இருவரும் பால் செம்புகளை காவடியில் இருந்து அவிழ்த்து, குடத்தில் சேர்த்தனர், அங்கும் காட்டினான் அண்ணல் அவன் திருவிளையாடல், கொடுமுடித் தீர்த்தம் இம்மியும் குறையாமல் தளும்பி நிற்க, அதே போல் காவடியி இருந்து சேகரிக்கப்பட்ட பாலும், சந்தனமும் , குட்டி பாலகன் நிரண் கொண்டுவந்த நதி தீர்த்தங்களும் ஒன்றிணைந்து ஒரு குடம் முழுதும் தளும்பி நின்றது. பக்தியுடன் உன்னை பணிந்தோம் எம் காணிக்கையை செலுத்தி விட்டோம் அப்பனே இனி காண்பதெல்லாம் நின் கருணை மட்டுமே.
தீர்த்தமும், பாலும் நிறைந்த குடங்கள் அவனை குளிர்விக்க கர்ப்பகிரகம் செல்ல நாமும் தயாரானோம் அவன் தரிசனம் காண, நீண்ட வரிசை,நெடு நேரக் காத்திருப்பு எல்லாம் முடிந்து முன்னேறி நின்றோம் அவன் சன்னதியில்.கந்தனே எம் நேர்த்திக் கடன் நின் முன்னே செலுத்தி விட்டோம், இனி நேர்த்தியாய் இக் குடும்பம் நலமான வாழ்வு வாழ வாழ்த்தி அருள் நீ.ஆண்டியாய், தவக் கோலனாய், ராஜா ராஜனாய் எல்லாக் கோலமும் பூண்டி தரிசனம் தரும் தண்டாயுத பாணியே, நின் தண்டம் என்றும் இந்த சுப்பன் குடும்பத்தை காத்தருளும் அரனை நின்று காக்கட்டும். பழனி மலை தண்டாயுத சுவாமிக்கு அரோகரா!
இன்றுடன் காவடி நிகழ்வு இரண்டு வருடங்களை பூர்த்தி செய்கிறது. இது ஒரு உன்னதமான ஆன்மீக நிகழ்வு, என்றும் நினைவில் நின்று மகிவு தரும் பேரின்பம். வருடங்கள் கடந்ததனால் எந்த தடையும் இன்றி அன்று கொண்ட அதே உணர்வு, காலச் சக்கரத்தில் மீண்டும் அன்றைய நாளை நோக்கி பயணித்த மகிழ்வு. எல்லோருக்கும் இதே உணர்வு என்றும் தொடரும் அதில் ஐய்யமில்லை . பிறவி என்னும் இப்பெருங்கடலில், உலகாயிதம் எனும் உணர்வினில் இருந்தும் மேலே ஆத்ம ஞானம்,மெய்ஞானம் ஆகியவற்றை நோக்கிய உயிர்களின் பயணத்தில் இது போன்ற ஆன்மீக நிகழ்வுகளே வழிகாட்டுதலாய் அமையும்.பெருந்தெய்வங்களை வணக்கும் நாம் நம் முன்னோர்,குலதெய்வ வழிபாடு ஆகியவற்றிலும் நிறை கண்டு நிறைவுடன் வாழ கந்தக் கடவுளும், அம்மையப்பனும் என்றும் அருள் புரியட்டும்.
இதுவரை வந்த இந்தப் பதிவுகில் எல்லா உணர்வுகளையும் ஒருசேர தர முயற்சி மட்டுமே மேற்கொள்ளப் பட்டது,இது நிறைவு இல்லை, நிறைவு அவரவர் மனங்களில் உள்ளது .இந்த பதிவுகளில் உள்ள குற்றம் ,குறை ஆகியவற்றை பொறுத்தருள்வீர். இது ஓர் நினைவு பேழை மட்டுமே. மற்றுமொரு பேரின்ப நிகழ்வுக்காய் என்றும் காத்திருப்போம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் குமரனுக்கு அரோகரா!
எம்பாட்டன் சுப்பனுக்கு அரோகரா!
சிவாய நம:
ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.








