Showing posts with label காவடி சில நினைவுகளும். Show all posts
Showing posts with label காவடி சில நினைவுகளும். Show all posts

Wednesday, 25 June 2014

காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-2

காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-2
                 காவடி எடுத்ததின் ஈர்ப்பு இன்னும் குறையாமல் அப்படியே உள்ளது.இரவில் நாம் உறங்கும் போது உள்ளுணர்வு விழித்திருக்கும் என்பது இப்போது உறுதியாகிறது. பகல் பொழுதில் பிற சில வேலைகள் நம்மை ஆக்ரமித்து காவடி நினைவுகளை ஒதுக்கி வைக்கிறது,மீண்டும் இணையத்தில் புகைப்பட வழியாக மீண்டும் எழுகிறது.ஆனால் கனவில் வருவதெல்லாம் காவடியும்,காவி வேட்டியும்,சாமியார்களுமே.இது ஒருபுறம் எனில் நம் வீட்டு சாமியாடிகள் இன்னும் முறுக்கு குறையாமல் இருப்பார்கள் என்பது உறுதி.
மீண்டும் காவடிக்கு முன் நோக்குவோம்.
                பௌர்ணமி அன்று [14.5.14] முதல் காவடி செய்யப்பட்டு ஸ்ரீராம் காவடி என்ற அடைமொழியுடன் பூஜைக்கு வைக்கப்பட்டது.பச்சை வண்ணத்தில் படாக்கை போர்த்தப்பட்டு முருகன் காவடி,முத்தையன் காவடி எங்கள் வீட்டு முத்துவிஜயன் காவடி என்று சித்தப்பாவால் தங்கள் முதல் பேரனுக்கு என்று சிறப்புடன் முதல் காவடி பூஜையில் அமர்ந்தது.
                   அன்றிரவு ராஜா மாமாவிற்கு கனவில் வந்து இது முத்தையன் காவடி என்னுடையது என்று ஒரு சிறுவன் சொல்வது போலும் ,எங்கே கருப்பன் காவடி என்று சிவகுமார் சித்தப்பா வடிவில் வந்து கருப்பன் கேட்பது போலும் கனவு.இந்த செய்திகள் எம்மை அடைந்தது செய்தியாக அலைபேசி மூலம்.

                    வெள்ளிகிழமை அன்று மாலை நாங்கள் அம்மைநகர் அடைந்த சமயம் சுமார் 5 மணி இருக்கும்.அதன் பின் அன்றே கருப்பன் காவடி செய்து பூஜை செய்ய வேண்டும் என்ற ராஜா மாமாவின் எண்ணப்படி அதன் பின் டைலரை அழைத்து ஒருபுறம் கருப்பன் படமும்,மறுபுறம் கந்தன் படமும் வைத்து அழகிய காவடியாய்
எங்கள் அன்பு தம்பிக்காக,அம்மைநகரில் சுமக்க இருக்கும் அழகு காவடிக்காக அமெரிக்காவில் மாலையிட்டு,அநேகமான சிரமங்கள் பல இருந்தும் ,அவன் தனது வரவு இங்குள்ள உற்றவருக்கு எத்துனை மகிழ்ச்சி தரும் என்பதில் எண்ணம் வைத்து தனது வரவின் மூலம் அனைவரையும் பிரசன்னம் செய்யவிருந்த தம்பிக்காக உருவானது.இந்த காவடி வைத்து வணங்கும் போது அன்று மணி 9 ஆகியிருந்தது.ஆனாலும் அதை செய்து முடித்த போதே வந்தது மன நிறைவு.

            அடுத்த நாள் காலையில் ஆசாரியல் செய்யப்பட அத்தனை காவடியும் அளவு எடுக்கப்பட்டது.உயரம் ,அளவு வகையாக பிரித்து அதனை சுமப்பவர் வலு கொண்டு பிரித்தெடுத்தோம்.ஒவ்வரு காவடியும் தனிஉரு பெற்றது.

கருப்பன் காவடி.
நம்மையெல்லாம் வழி நடத்தும் நம் பாட்டனாரை வழி நடத்திய தெய்வம்.பார்வையினாலே நமை சூழ்ந்து வரும் பகைகளை பறந்தோட செய்யும் பார்திபனூராண்டி,அவனை சுமக்கும் கருப்பன் காவடி.
கருப்பன் குலதெய்வம் என கொண்டவர்க்கு ஒருபுறம் முருகனும்,மறுபுறம் கருப்பனும் என இவிதமாக 7 காவடி.சித்தப்பா இருவர் மற்றும் அந்த பஞ்ச பாண்டவர்க்கு என உருவானது.
பிள்ளையார் காவடி.
ராஜா மாமா முருகனுக்கு காவடி என்றாலும் அவர் தம் மூத்தவரை மறக்குமோ என பிள்ளையாரை ஒரு புறம் வேண்டும் என சொல்ல... நாமும் முதற்கடவுள்,ஓங்காரத்துள்ளே உதிக்கும் பரம் பொருளை ஒரு புறமும் மறுபுறம் இன்முக சிரிப்பால் இன்னல்களை களையும்
ஆருமுகப்பெருமானை ஒருபுறமும் வைத்தோம்.
சிவன் காவடி.
அப்பன் அவன் அனைவருக்கும் மேலானவன்,தேவர்கெல்லாம் தேவன் மகாதேவன்...
தென்னாடுடைய சிவனே போற்றி!என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
என்று தென்னகம் முழுதும் கோசமிடும் அடியார் கூட்டத்தில் ,அவன் தன் அருளாலே அவனை பூஜிக்க தீட்சை பெற்ற எங்கள் மாமாவை விட அவன் பெயர் கொண்ட காவடியை தூக்கும் பேறு பெற்றார் யார்? எனவே காவடி தூக்கும் நம் வீட்டு அடியவர்களில் மூத்தவரே ஆதிசிவன் காவடி தூக்க உற்றவர் என ஒருபுறம் அரு உருவான அதிசய லிங்கமும்,மறு புறம் அவனையே சுமக்கும் நந்திஎம்பெருமானும் அமைந்த காவடியானது.
சக்தி காவடி.
அம்மையும்,அப்பனும் அமைந்ததே உலகு.அப்பன் காவடி வடிவில் வர அம்மை அடியவரை நாடி வரமாட்டாலோ.அதுவும் தனி ஒரு பெண்ணாய்,எங்கள் மாதர்குல வடிவாய் ஒன்றிணைந்த சக்தியாய் ரேவா அத்தாச்சி காவடி சுமக்கையில். வழி வழியாய் உயிர் சுமந்த இந்த பொன்னடி மக்கள் கூட்டம் இன்னும் எத்தனை காலம் சுமை சுமக்கும்...அதற்கு ஒரு தீர்வு நிச்சயம் வேண்டும்,அதனை தருவதற்கு ஆதி சக்தி ஒருபுறமும்,அவள் திருக்கர சூலம் ஒருபுறமுமாய் அமைந்தது சக்தி காவடி.
அழகர் காவடி.
அம்மையும்,அப்பனும் வந்தாகியது.....மாமன் வரவேண்டாமோ?
சைவம் வைணவம் மத இணைப்பை திருமலை மன்னன் தான் செய்வாரோ? இந்த சுப்பன் குடும்பம் செய்யாதோ?.செய்தது காவடியில் புரட்சி.மதுரை நகர் அழகரை நாமம் வடிவில் தாங்கி வந்தது அபினவின் காவடி.அதன் பின் அத்தனின் விருப்பப் படி பிள்ளத்து கருப்பனும்,கார்த்திகை
மைந்தனும் உடன் அமைந்தனர்.
மாவடியான் காவடி.
எங்குல தெய்வமாம் மாவடியானை ஒருபுறமும்...பச்சை மயில் வாகனனை மறு புறமும் கொண்டு அமைந்தது ஸ்ரீராமனின் காவடி.
"கோச்சடை விட்டு வந்த கோபக்கனலே போற்றி"-இந்த வரிக்கு சொந்தமான எங்கள் பெரியவருக்கு...கனமான காவடி வேண்டிய மாவடியானை சுமக்கும்
சாமியாடிக்கு....இரட்டையராய் கோச்சடையில் நிற்கும் மாவடி கருப்பர்களை ஒன்றிணைத்தோம் ஒரு புறம்,மற்றொருபுறம் வினை தீர்க்கும் வேலவன்.
மதுரைவீரன் காவடி.
மதுரை வீரன் -இது என் தந்தை வழி குல தெய்வம் மட்டும் அன்று.....எண்களின் அடையாளமும் மதுரைவீரன் பிள்ளை வம்சம் என்பதுதான்.இந்த வம்சத்தின் வினைகள் தீர்ந்து குலதெய்வ வழிபாடு தொடர்ந்து அனைவரின் வாழ்வு சிறக்க என் தம்பி ராஜேஷ் எடுத்த காவடி.
ஒருபுறம் பாலசுப்ரமணியனும் ,மறு புறம் மதுரை வீரனுமாய் அமைந்தது.
பகவதி அம்மன் காவடி.
விட்ட குறை,தொட்ட குறை ,ரஞ்சித் அண்ணனுக்கும் நமக்கும் உண்டு.நம்மோடு பாத யாத்திரையில் பங்கேற்ற பல நண்பர்கள் உண்டு,ஆனால் காவடியில் இணைந்த பாக்கியம் ரஞ்சித் அண்ணனுக்கு மட்டுமே..ஒரு குடும்பம் பங்கேற்கும் காவடி எடுக்கும் விழாவில் அவர்களும் ஒரு அங்கம் என அமைந்தது பகவதி அம்மன் ஒரு புறமும்,முருகன் ஒரு புறமுமாய் அமைந்த காவடி.

          காவடிகள் எத்தனையோ விதம்,ஆனால் நம் வீட்டில் எடுத்த காவடியில் நமது முன்னோர்கள்,குல தெய்வம் மற்றும் பெருந்தெய்வங்களின் ஆசி கட்டாயம் உண்டு.இது நமது காவடிகள் அமைந்த விதத்தில் தெரியும்.இப்படி துணியில் அச்சடிக்கப்பட்ட தெய்வங்கள் நமை அடைந்தது எப்படி?அதிலும்,அவரவர் குலதெய்வங்கள் வந்தமைந்தது எப்படி? இவை யாவும் கந்தனது விந்தையன்றி வேறு ஏது?
                         இன்னும் எம் மனதில் பதிந்த விந்தைகள் பல..அவற்றை மீண்டும் பகிர்வேன்.என்னை விட இதனை இன்னும் சிறப்பாய் சித்தப்பாவோ அல்லது பெரியத்தானோ இன்னும் விளக்கமாய் சொல்ல இயலும் எனும் போது நான் ஏன் இதனை இங்கே பகிர்கிறேன் என கேள்வி எழுந்தது என்னுள்ளே? அதுவும் அவன் கட்டளைதானோ என எண்ணம் தோன்றியது .செய்கிறேன்.

காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-1

ஓம் சரவணபவ 

             எல்லாம் வல்ல முருகபெருமான் அருளால் A.S.Pillai family என்ற நம் குடும்பம் செய்த மாபெரும் பக்தி திருவிழா 2014 ஆண்டு மே மாதம் 25,26 தேதிகளில் நாம் எடுத்து பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்துக்கு செலுத்திய காவடி.

             இந்த நிகழ்வை என்றும் நம் மனதில் பதித்து பத்திரப்படுத்தி வைத்திருப்போம் அது உறுதி.அதற்க்கு உறுதுணை செய்யவும் இந்த நிகழ்வை ஆவணப்படுத்தவும் ,நான் எடுக்கும் சிறு முயற்சி இந்த blog .

          இதில் நம் நினைவுகளை பதித்து வைப்போம்.வேண்டும் பொது திருப்பி புரட்டி மகிழலாம்.என்னோடு இணைய எம் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.


காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-1
               காவடி இந்த மூன்று எழுத்து நம்மை ,நம் சிந்தையை முற்றிலும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது. நாம் அனைவரும் அதன் நினைவுகளில் சஞ்சாரித்துகொண்டேதான் இருக்கிறோம்.
                காவடி எடுப்போம் என்பது மார்கழியில் பாதயாத்திரை சமயத்தில் கருவாக தோன்றி ,பல தடைகள் வந்த போதும் அவற்றை வெற்றிகரமாய் தகர்த்து ,நமக்கு மனதில் சந்தோசம்,நெகிழ்ச்சி,நம்பிக்கை,உறுதி,ஒற்றுமை இன்னும் வார்த்தைகளில் வடிக்க இயலாத பல உணர்வுகளை நமக்கு கொடுத்து இனிதாக நிறைவடைந்துள்ளது.
                     ஒரு செயல் தொடங்கியபின் ,கிரீஸ் இட்ட இயந்திரம் போல் வழுக்கிக்கொண்டு அதன் பாதையில் செவ்வனே செல்லும் போதே அதன் உத்தேசியமும் முழுதாய் நிறைவேறும், இதில் எவ்வித ஐயமும் வேண்டியதில்லை.அதன்படி இந்த காவடி கங்கணம் கட்டப்பட்ட நாள் முதல் ,அவன் அருளாலே அவன் நினைத்தபடி முடிந்தது.
            இதில் நான் உணர்ந்த சிறு பகுதியை இங்கே பகிர்கிறேன்.சில விஷயங்கள் பகிரப்படும் போது இந்த காவடியின் முழு அடையாளமும் தெரியவரும்.என்னால் முடிந்தவரை சில நிகழ்வுகளை பதிவுசெய்கிறேன்.
           
              காவடி அலங்காரம் செய்ய என அதன் சம்மந்தப்பட்ட பொருள் சேகரிக்க சித்தப்பாவுடன் தேவியும்,நானும் புறப்பட்டோம்.முதலில் பால் சுமக்கும் செம்பு வாங்க என...மீனாட்சி அம்மன் கோவில் புற வீதிகளில் அலைய நாம் நினைத்த அளவில் ,எண்ணிக்கையில் செம்புகள் கிடைக்கவில்லை. புதுமண்டபத்தில் உறவினர் கடை இருப்பது நினைவில் வர....தேவி நேராக சென்று நின்ற இடம்..."கதிர்வேல் பிள்ளை பாத்திரக்கடை" அங்கு நாங்க கேட்டது கேட்டபடி அரைமணியில் தருவதாய் சொன்னார்கள்.அங்கேயே காவடியில் கட்ட மணியும்,கச்சையில் கோர்க்க சலங்கையும் வாங்கினோம்.
               
         அடுத்து காவடியில் வைக்க சாமிப்படம் வேண்டும் என மண்டபத்தை சுற்றும் போது கண்ணில் பட்டது சாமி ஊர்வலம் வரும் போது முன்னே வரும் குடையும்,அதில் இருந்த படங்களும்.அந்த துணியில் அச்சடிக்கப்பட்ட முருகன் படங்களை கேட்க....முதல் முறையாக நமக்கு அந்த படங்களை தனியாக விற்பனை செய்தார் அந்த கடைகார்.
               
               ஒருபுறம் முருகன் படம் என முடிவு செய்து....அங்கிருந்த மற்ற படங்களை பார்த்தபோது....பிள்ளையார்,மயில்,சேவல்,அம்மன்,சிவலிங்கம்,நந்தி,நாமம்,சூலம் என வரிசையாய்...எடுத்து வைத்தோம்..அதன் பின் கருப்பணசாமி படம் கிடைத்தது. நாங்கள் முத்தையா படம் வேண்டும் என கேட்க ,சித்தப்பா சிரித்தார்கள்...கடைகாரர் முத்தையா படம் இல்லை எனவும் ,நாங்கள் கருப்பனை பச்சை வஸ்திரமிட்டு முத்தையாவாக மாற்றுவதாய் சொன்னோம்.அதன் பின் மதுரை வீரனும் எளிதில் கிடைத்தார்.
                    
                அடுத்து கச்சை....எடுக்க அடுத்த கடை நாட.. அதற்குள் அண்ணன் தம்பி வந்து இணைந்தனர்.கச்சை பொதுவாக கருப்பும் ,சிவப்பும் தான் உண்டு.கருப்பனுக்கு கருப்பு என எட்டு கச்சை தயார்.ஆனால் மாவடியானுக்கு பச்சை கச்சை தான் வேண்டும் என ராஜா மாமா அடம்பிடிக்க ,அந்த கலரில் கச்சையே இல்லை என கடைகாரர் சத்தியம் செய்தார்.பின்னர் பலத்த யோசனைக்கு பின்னே சிகப்பு கச்சையின் நடுவே பச்சை ஜரிகை வைத்து மாவடியான் கச்சை தயாரித்தோம்.
அடுத்த பதிவில்.....கவை உருவானவிதம் வளரும்.