Wednesday, 27 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-22

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-22

கந்தநம !
ஐந்து முகர் தந்த முருகேசநம !
கங்கை உமை தன் மைந்த நம! 
பன்னிரு புயத்த நம!
 நீப மலர் மாலை புனையும் தந்தை நம! 
ஆறுமுக ஆதி நம! சோதி நம!
தற்பரமதாம் எந்தை நம !
என்றும் இளையோய் நம குமார நம!
                                                 -கந்தபுராணம் 
                 
                                         முருகப்பெருமான் தம் பிள்ளை பருவத்தில் அற்புதமான திருவிளையாடல்கள் புரிந்தார் .சில நேரம் மேரு மலைக்கு தாவி,சிகரத்தை பெயர்த்து கயிலை மலை மீது எறிவார், சில நேரம் வாத்தியம் இசைப்பார் பலதிக்குகளில் உள்ள பர்வதங்களை பாம்புகளால் கட்டி இழுப்பார் , இப்படியாய் அவர் புரிந்த லீலைகளை கண்டு இந்திராதி தேவர்கள் அச்சம் கொள்ள 
அனைவரும் ,அசுர குழந்தையோ என ஐயம் கொண்டு பாலகனுடன் சமர் புரிய அவரை துவம்சம் செய்தார் வேலவர் ,தேவகுரு வேண்டி நிற்க தேவர் பிழை பொறுத்து அருள் புரிய சமரில் வீழ்ந்தவர் உணர்வு பெற்றனர் அவர் தம் பிழை உணர்ந்து ஆறு முகக்கடவுளை எண்ணி வணங்கி நின்றனர்.அவருக்கு விஸ்வரூபம் காட்டி பாலகன் அல்லன் இவன் பரமேஸ்வரனே என
உணரவைத்தார்.அதுவே இந்த துதி பாடல் .
                    வெற்றிவேல் வீரவேல் என கோசம் கொண்டு சூரனை கொன்ற வெற்றி வேல் முருகனை போற்றி புகழ்ந்திருப்போம் அதில் அரோகரா என்பது 
அர ஹரோ ஹராஎன்பது ஆகும் திருஞனசம்பந்தரால் சைவர்களுக்கு அருளப்பட்ட இந்தவார்த்தைக்கு இறைவனே, துன்பங்களை நீக்கி 
எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக' என்பதே பொருள் நாளடைவில் இது கந்தவேலின் அடியார்க்கு மட்டுமே உரித்தானது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றால் ,வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள்  வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக' என்பதே பொருள்.

                                          கந்தன் படை காவடி தூக்கிவெற்றிவேல் முருகனுக்கு  அரோகரா என்று  அம்மை நகர் ஆடி வர அங்கிருந்த மாந்தரெல்லாம் காவடி தோள்  சுமந்து நிக்கும்  பக்தர்களை பக்தியுடன் வணங்கி நின்றனர் .முருகன் அடியார் பலர் அருள் நோக்குடன் ஆடிவர அடியார் சேவை ஆண்டவருக்கு செய்யும் சேவை என தாகத்திற்கு நீர் தந்து ,பாதத்தில் நீர் உற்றி குளிர்வித்து விழுந்து வணங்கி திருநீரை பிரசாதமாய் பெற்று பரவசித்து இருந்தனர் 
                                           சொந்த பந்தம் கூடி வர குவிந்திருந்த பக்திக் கூட்டம் கந்தா என்று கசிந்துருகி கருப்பன் குடிகொண்ட அரசமரம் நோக்கி வந்தது.அரசன் வீற்றிருக்கும் அம்மரம் அரசமரம் ஆனது.யாமிருக்க  பயமேன் என நவிலும் நற்றமிழ் கடவுளும், நானே உன்னுடன் இருக்கிறேன் என்று நமை நடத்தி வைக்கும் கருப்பனும் கடை கண் நோக்கி இருக்க கவலை ஏன் கண்மணிகளே! கலங்காதீர்கள் பார்த்திபனூர் குடிகொண்ட கருப்பனும்,குறிச்சி  திட்டில் குடியிருக்கும் மாவடிகருப்பும் சுப்பன் குலம் காக்க காவலாய் நீவீர் குடி கொண்ட  குச்சில் எல்லாம் தண்டம் தாங்கி நிற்கின்றனர். வலிந்து வந்து உம்மை தாக்க வரும் பகைகளை எல்லாம் வலுவிழக்க செய்து வினை பயன் தன் கடமை முடிக்க நியதிப் படி சிறிது இடம் தந்து அதையும் தாங்கும் வலிமை தந்து துணை நிற்கின்றனர்.போதாத  காலம் வரும் போதும் பொறுமையின்றி நாம் தவிக்கும் போதும் புடம் போடும் தங்கம் தககக்கும் எனும் சொல்லுகினங்க நம்மை சுத்திகரித்து நம் நோய்க்கு மருந்தாய், நோகும் இதயத்திற்கு மயிலிறகாய் நம்பிக்கை வித்தாய் , தாயாய் நின்று காக்கின்றனர்.

                                                   அரண் வாழும் அந்த அரசமரம் பசுமையாய் வசந்தகாலம் வந்தது நம் வாழ்வில் எனும் கட்டியம் கூறும் கட்டியக்காரனாய் கிளைகள் பரப்பி தழைகள் நிரப்பி குளிர்ந்திருந்தது. அங்கே ஆவாகனம் ஆனது அத்தனை கருப்பும். கந்தன் காவடியில் கருப்பின் கலப்பு, களிப்பு மிகுந்த ஆனந்த அணிவகுப்பு. ஆதி கருப்பு, இளையகருப்பு, ஆவேசக்கருப்பு, மாவடிகருப்பு,பிள்ளத்தி கருப்பு, என வகை வகையாய் வீறுகொண்டு விழி உயர்த்தி, ஆவேசக்குரல் உயர்த்தி ,அங்கம் அதிர அருள் வாக்கு தந்து ஆங்காரம் குடி கொண்டு அகங்காரம் அகற்றி,ஆழ்ந்து அகன்று நுனி குறுகிய வேல் போல் விழி தீட்சனியத்தால் பற்றவந்த பகை கடிந்து பரவசமாய் முன்னேறியது.
                                                 அம்மைநகர் பெற்றுவந்த வரமாய் நம் பாட்டன் சுப்பன் அவர் வம்சம் வந்த சண்முகத்தின் பெயரனாய் வம்சம் சுமந்த  கருப்பனையும் ,கருப்பனை சுமந்த சுப்பனையும் ஒரு சேர சுமந்த பார்த்திபன். அன்று அவன் மேனி குடி கொண்ட கருப்பனின் கருணையை சொல்ல மொழியும் பயன் தரா. நமது முன் தலைமுறை தம் தாத்தாவை முருகா தாத்தாவாக பார்த்திருக்கும் அவர்கள் கருப்பனை சுமந்ததையும் அறிந்திருக்கும் ஆனால் அன்றொரு நாள் ஊ ர்விளையாடிய சண்ட மாருதம் போல் கணை பொலிந்து வினை அகற்றும் கந்தன் கை வேலாய் நின்று சுற்றம் காத்த கருப்பனை தன் அங்கம் தாங்கிய எங்கள் பாட்டனாரை காண பேரு கிடைக்க பேரப் பிள்ளைகளுக்காய் நம் பாட்டன் சுப்பனாக  அன்று அவதரித்தது இந்த பார்த்தன் தான்.தர்மம் தழைக்க நடந்த மாபாரதப் போரில் முக்கிய பங்கு அன்று அந்த பார்த்தன் கொண்டான் ,இன்று சுப்பன் வம்சம் இடையறா வந்த இன்னல்களை தாண்டி,இதுகாறும் வந்த இருள்நிலையை  பக்தி எனும் படகில் ஏறி காவடி எனும் துடுப்பை போட்டு வாழ்வில் ஒளி மயம் காண விளையும் பொழுதில் உறுதுணையாய் தம் தேகம் வருத்தி பாட்டனை வருவித்து அருள் வாக்கினை தந்து முழுமையாய் தன்னை 
ஒப்புவித்தான் அருமை தம்பி பார்த்திபன்.
                                                   கருப்பன் சந்தியில் களிப்படைந்த காவடிக் கூட்டம் அவ்விடம் விட்டு ஆனந்தமாய் அடுத்தக் கட்டம். இதுவரை இருந்த நான் என்பது வேறு, இவ்விடம் முதல் என்னுடன் வந்த நான் என்பது வேறு. கொடுமுடி தீர்த்தம் மங்கையரின் சிரத்தினில் மாறி,மாறி பயணித்திருக்க,இந்த ஒரு கட்டத்தில் எனக்கு அதை சுமக்கும் பேரு.அன்று நான் சுமந்ததின் பயனே இன்று என்னால் இவ்விதம் ஓராண்டு கடந்தும் இம்மியளவும் குறையாமல் நிறைந்த பக்தி சுவை பரிமாறும் பாக்கியமும் தந்தது. தன்னிலை மறந்து தானே கூத்தாடிதானுமிருக்க,
தனக்கு மேலே மற்றொன்றும் ஆதிக்கம் செலுத்த சுய கட்டுப்பாட்டை மீறிய உணர்வு நிலை.அறிவியல் ஆயிரம் சொல்லட்டும், ஆத்ம சிந்தனை,தன்னை அறிதல் என எவ்விதமாய் பெயர் கொடுத்து இதனை விரித்துரைக்கட்டும்.
ஆயினும் குறை ஒன்றும் இல்லை இந்த உணர்வு நிலை தரும் நம்பிக்கை விதை போதும் ,சிக்கன பிடித்து சிங்காரவேலர் பதம் பற்றுவோம்.


                                         


Thursday, 21 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-21

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-21


ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி 
மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில் 
தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடின் இனைய தொல்லோன் 
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்
                                                                                                 கந்தபுராணம் 

                ஆயிரம் கோடி மன்மதர்களின் அழகு எல்லாம் சேர்ந்து வரினும் செவ்வேளாகிய இவனது மலமறுத்த விமலமாம் திருவடியின் தூய அழகுக்கு ஒவ்வாது என்றால், பழமையான இப்பெருமானின் பெரும் வடிவு முழுவதுக்கும் யாரே உவமை கூறவல்லார்.
        இவாராய் வியப்பது யாரென அறிந்தால் நாமும் வியப்போம்.ஆம் யாரை வெல்ல, யாரின்  கொடுமை களைய பரம் பொருள் ஞானப் பழம் பொருளாய் அவதரித்ததோ அந்த சூரன் சொன்ன சொற்கள். மதி கெட்டு அவன் இதை சொன்னானோ ஏனெனில் அவன் பழனிஎம்பதி  பாலகரின் பகைவன் அன்றோ? .ஆம் மதி கெட்டுசொல்லவில்லை மதி பெற்று செப்புகிறான் இந்த சொற்களை. கோர யுத்தம் நடக்கும் பொழுதில் மாயை பெற்ற சூரன் மாயனாய்  மாறி பல ரூபம்  கொண்டு அலைகளித்தபோது அத்தனையும் வென்ற கந்தவேல் சிறிது நேரம் அவன் சிந்தையில் நின்ற அகந்தையை அகற்ற அவன் உள்ள, உருகியது குமரனின் கோலவடிவு கண்டு.திருவடி முதல் திருமுக அழகு காண பலஊழி காலமும் காணாதே என கசிந்துருகி நின்றான்.
சூழுதல் வேண்டுந் தாள்கள் 
தொழுதிடல் வேண்டும் அங்கை 
தாழுதல் வேண்டுஞ் சென்னி 
துதித்திடல் வேண்டுந் தாலு 
ஆழுதல் வேண்டுந் 
தீமை அகன்றுநான் இவற்கா ளாகி 
வாழுதல் வேண்டும் 
                         என்றும் வாயார வாழ்த்தி நின்றான்.பின்னர் கந்தக்கடவுள் விஸ்வரூப தரிசனம் முடித்து வேலும் மயிலும் என அகாரம் குறுக்கி அழகனாய் நின்று இருக்க  அவனது சிந்தையும் குறுகி சினம் கொண்டது.பின்னர் கொக்கரித்து மரமாகி சூர சம்ஹாரமாகி சேவலும் கொடியும் ஆனான்.தமை எதிர்த்து நின்ற அரக்கனையே சத் புத்தி அளித்து தன பக்தனாய் கந்தன் மாற்றுவான் எனில் பரம்பரையாய் அவன் அடிமை பூண்ட சுப்பன் குடும்பத்தை காணாது விடுவானோ, தன கடைக்கண் கருணை பார்வை பார்க்க திரண்டது சொந்தங்கள் மருண்டது அம்மைநகர்.காவடி எனும் பெரும் நிகழ்வை விரித்து கூற வேறு வழியின்றி அதன் மேன்மை உணர்த்த  கச்சியப்பரையும்,
அருணகிரியாரையும் அதன் உரை கொடுத்த வாரியாரையும் துணை கொண்டு அவரிடம் இருந்து தீந்தமிழ் கடவுளுக்காய் புகழ் பாட சில வரிகளை கடனாக பெற்றேன்.
                       வீதி வழி  ஓடிவரும் பிள்ளை சிறிதே அன்னை அன்னைமடி அமர்ந்து ஆசுவாசம் பெற்று அடுத்த அடி ஆர்வமாய் விரைவதை போல்,நாயகர் தெருவழியாய் கடந்து வந்த காவடி அம்மைநகர்  மங்கையரின் குங்குமத்திற்கு ஆதரவாய் என்றும் அவர் தம் கூக்குரலுக்கு குறை தவிர்க்க விரைந்து வரும் மாரியம்மன் ஆலயம் வந்து சேர்ந்தது.சக்தி காவடி தூக்கி வந்தவளுக்கு சன்னதமாய் அந்த அம்பிகை வந்து இறங்க அதனுடனே அனைவரும் சேர்ந்து ஆடி மகிழ்ந்து அதன்பின் ஆலயத்தில் தீப ஒளியில் அன்னையின் முகம் கண்டு அகம் மகிழ்ந்து அடுத்து அவள் மூத்த மகன் சன்னதியில் வரிசையாய் நின்று வந்தனம் செய்தது
                                 வீதி வலம்  வர வர வந்த காவடிகள் எல்லாம் இன்னும்,இன்னும் உரமேறி.முறுக்கேறி முன்னேறி கொண்டிருந்தது. காவடிகள் தூக்கிய தோள்கள் உயர்த்தி பிடித்து உள்ளமதில் உவகை கொண்டு ஊர்விளையாடும் பொழுது, அவரவர் இருந்த நிலை, புவியில் இப்படி ஒரு இடமா, சுயமாய்  வந்தவை தானா எல்லாம் அல்லது ஒருவன் தொடுத்துவிட்ட அம்புகள் தாமா, சோதனைக்கு உள்ளான  அன்பர்களுக்கு  எல்லாம் அருளும் விதமாய் அவரவர் இதயக்கமலத்தில் இருள் அகற்றும் சோதியாய், கடந்தவற்றை கடக்க வைக்கும் கடம்பனாய் ,அதப் பொழுதில் அவனன்றி வேறொன்றும் இல்லை என்பதை உணர்த்தி நிற்கும்  ஆதி குருவாய்,அன்பர்களை தம் திருவடியில் இணைத்து கொண்டு காவடியை செலுத்தி நின்றான்.
                                  காவடியை சுமந்த நெஞ்சம் நின்ற நிலை சொல்லில் வடிக்க இயலாது செழுமை பெற்ற எம் தமிழ் மொழியும் பக்தி பரவச நிலை உணர்த்துமோ அறியேன் நான்..வயிற்றில் இருந்து புறப்படும் பரவசம்,அன்னை வயிற்றில் தானே உதித்தோம் என்பதை சூசகமாய் சொல்லுமோ,பிசைந்து,புரட்டி பக்திக்கு ஒரு வடிவம் கொடுக்க  
முயல்வதை போன்ற ஒரு பிரமை,புறப்பட்ட உணர்வு அது மேலே உந்தப்பட்டு உணர்ச்சி பெருக்காகி நெஞ்சில் குடி கொண்டு வியாபித்து இருக்கும் நேரம் என் பழவினையும் தோய்ந்து  பண்டிதனே உன்னை கண்டுகொண்டேனோ என பரிதவித்து நிற்கும். பரவசம் வியாபித்து  நின்ற நெஞ்சமது விம்மி, கண்டத்தில் குடி கொண்டு கந்தா என
கதறத்  துடிக்கும். அந்நேரம் வரும் ஆவேசம் சிலர்க்கு ஆவி துடிக்க வெளியேற,பலரோ வாய் மூடி ஊமையாய் கண்ணில் தாரையாய் கண்ணீர் மல்க கரைந்து விடுவார்கள்.
வாயால் வாழ்த்து கூறி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு,கண்ணீர் பெருகி தன் கரையெல்லாம் துடைத்து விட,எல்லா கட்டும் அறுந்து உல்லாசமாய் ஓர் ஆட்டம் ,உவகையில்  ஓர் ஆட்டம்.உன்னிடம் சொல்லி விட்டேன் என் பக்தியினை,
நினை நினைந்துருகும் பக்தியின் அருமையையும் கண்டு இன்புறுகிறேன் எனும் ஆனந்த நிலை.இறைவா இப்படியே எமை உன்னிடம் அடிமை பூன  விட்டு விடு என அந்தரங்கம் கதற,வீதிகள் கண்ணில் கருத்தினில் படாமலே முன்னேறியது  முருகன் காவடி கருப்பன் சன்னதி நோக்கி.

                              

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-20

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-20

அதல சேட னாராட அகில மேரு மீதாட
    அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
     கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.-திருபுகழ் 
                                       
                                அம்மைநகர் வீதியில் அசைந்து வந்த காவடி அதை அன்றே அருணகிரி நாதர் திருவண்ணாமலை மன்னன் பிரபுட தேவ க்காய் வேண்டி விரும்பி கந்தனை அழைத்த  முறையில் நமக்காய் பாடிவைத்தார் போலும்,பக்தர்கள் மனமுருக அழைத்தவுடன் வரும்மருகோனேஇன்று உமை கூத்தாடி அழைகின்றோம் நீரும் எமுடன் ஆடிவரும்,அன்று போலே அதலம் எனும் பாற்கடலில் இருக்கும் சேடனார்  ஆன  ஆதிசேசன் ஆடவும்,இந்த அகிலத்தில் உள்ள மேருமலை ஆடவும் ,அபிநயத்தின் நாயகியாம் எங்கள் ஆதிசக்தி காளியாக  மாறி களி  நடனம் ஆட, அவளோடு என்றும் பிரியா பாகம் கொண்ட எந்தை விந்தையாய் வாதாட என உர்தவ தாண்டவம் ஆட விடைமேலேறி வர,அவரோடு பூதகணங்களும் மகிழ்ந்தாடி ஆடிவர,  கமலத்தில் அமரும்பிரமனும்,அவர் தம் நாயகி மதுரவாணி சரஸ்வதி இசைத்தபடி ஆடிவர, வானில் உள்ள தேவரெல்லாம் உவந்து ஆடிவர, எம் பெருமான் தலை சூடிய பிறையும் ஆடிவர ,வேலவன் மாமியாம் மகாலக்ஷ்மி ஆடிவர, அவர் தம் நாயகராம்,முருகரின் நெடிய  மாமன் ஆடிவர  மயிலேறி முருகா நீயும்  எம் முடன் ஆடிவரவேண்டும்.
                                                     அம்மைநகர் வீதியிலே ரயில் பாதை அடியினிலே மேளம் கொட்டி,நாதம் முழங்க பாட்டன் சுப்பனின் பரம்பரை ஆடிவர ஆரோகணம் ஆனது ஆனந்த காவடி.எங்குல வாரிசுகளாம் குறு மலர்கள் கையில் வேலும்,மயிலும்,சேவலும் 
முருகும் ,ஓம் எனும் மந்திரமும் கொண்ட கொடிகள் பிடித்து வர அவர் பின்னே மத்தளம் மேளம் கொட்டி முழங்கி ஓம்கார நாயகன் உயர் புகழை  இசைத்தபடி நாதஇசையும் இணைந்து ஆடி வந்தது.
                                            கொட்டு கொட்டி கூத்தாடி மகிழ்ந்து கூத்தன் மைந்தன் குண கானம் பாடுவோம்,அவன் அருள் வேண்டி தனை மறந்து தெருவில் மகிழ்ந்து நெகிழ்ந்து ஆடுவோம்.காவடி சுமந்து வரும் பக்தர் பின்னே வர, அவரின் முன்னே முருகனின் பக்தியில் உன்மத்தம் பிடித்து இப்பிறப்பில் தமை பிடித்த பதவி,புகழ் ,பெயர் எனும் மாயைகளை விடுத்து மயிலேறி விளையாடும் வள்ளி மணாளன் காவடி ஆடிவரும் ஊர்விளையட்டில் ஒயிலாட்டம் ஆடிவந்த மாமன்,மருமகன்,மைத்துனன் என்று விதமாய் உறவுமுறை கொண்ட சுப்பையாவின் வாரிசுகளை அம்மை நகர் வீதி எல்லாம் வியந்து நோக்கியது.இவர் தம் ஆட்டத்தில் ஆ றுமுக கடவுளுக்கான ஆனந்தம்,
பஞ்சாமிர்த பிரியனுக்கான பரவசம், தெய்வானை தேவருக்கான தெய்வீகம் ,தீந்தமிழ் கடவுளுக்கான திவ்யரசம் என கந்தராட்டம் கொடுக்க வந்த காவடி நாயக்கர் தெரு வழியாய் தன் சீரோட்டத்தை நடத்தியது.
                                             மாபாரதப் போரில் அதர்மம் கொன்று தர்மம் வென்று தாரணி நலம் காக்கவென கதை தூக்கி வந்த வீமன் போல் நாங்களும் காவடி எனும் கந்தன் கணையை தூக்கி கால் கவ்விய கர்மவினைகள் களைய வந்தோம். காண்டீபன் தொடுத்த அம்புகள் அநீதி கொண்ட மாந்தரின் பகைமுடித்து சிதறடித்தது போல் எம் பால் எதிர்வரும் இன்னல்களை கதறடிக்க வந்தது கந்தனின் காவடி.
                                               பிருந்தாவனம் மேய்ந்த மாடுகளை ஒன்றாய் கூட்ட புல்லங்குழல் இசைத்து ஒன்றிணைத்த உன் மாமன் போல் ஊரெல்லாம் பரவி நின்ற எம் சொந்தங்களை ஓர் அணியில் திரட்டி உன் காவடி சுமக்க பெரும் பாக்கியம் தந்த பெருமானே உன் கழல் சரண்.என சரணம் சொல்லி சரங்கள் போலே இருவீதி கடந்து மாரியாய் வந்து மக்களை காத்திடும்  ஆதிபராசக்தி தாய் முத்துரத்தினம் குலக்கொடிகள் மங்கலம் சிறக்க வாழ்த்துரைக்கும் அன்னை மாரியம்மன் ஆலயம் வந்து சேர்ந்தது சிங்காரவேலர் காவடி.




 

Tuesday, 19 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-19

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-19

அம்மை நகர் வீதியிலே ஆட வந்த காவடி 
ஆறுமுகம் பெயர் சொல்லி பாட வந்த காவடி 
இன்னல்களை அகற்றும் அழகன் அவன் காவடி 
ஈராறு விழிகளினால் காக்கும் கந்தன் காவடி 
உறகசயன மருகோனின் உயர்ந்த பால் காவடி 
ஊர்விளையாடிவந்த முருகோனின்  காவடி 
 எங்கள் குலம் காக்கும் கருப்பன் அவன் காவடி 
ஏறுமயில்  ஏறிவரும் முத்தையன் காவடி 
ஐங்கரனின் அருளோடு சீர் ஆடிவந்த காவடி
ஒற்றுமையாய் சுப்பன் குலம் எடுத்து வந்த  காவடி 
ஓங்கி வான் அளந்து வந்த ஒய்யார சக்தி அவள்  காவடி 
ஒளசதமாய்  ஆனா அருமருந்து அப்பன் அவன் காவடி.
காவடியாம் காவடி கந்தவேலன் காவடி 

                                                     வேல் வேல் வெற்றி வேல் என கோசம் கொண்டு வீறு கொண்டு நெற்றியில் திருநீறு கொண்டு ,அழகனே.முருகனே எம் அப்பனே எமை ஆட்கொண்டு அருள்வாய் ஆனந்தனே என்று அழுது  அரற்றி அவன் நாமம் போற்றி புறப்பட்டது காவடி முருகன் இல்லம் விட்டு.
                                        குடும்பமே விரதம் பூண்டு பாட்டன்  முதல் பெயரன் வரை, பாட்டி முதல் பேத்தி வரை வயது வித்யாசம் இன்றி வினை அறுக்கும் எங்கள்  கந்தவேலை மனதில் கொண்டு பதின் நாட்கள் கொண்ட விரதம் ,சங்கல்பம்,கட்டிய கங்கணம் எல்லாம் இந்த தருணம்  எதிர்நோக்கியே. தம் தோள்களில் காவடி சுமப்பவர் ,அவரை தாங்கி பிடிப்பவர், வேலும்,மயிலும் கொடியாய் பிடித்து முன்னே கட்டியம் கூறி நடப்பவர் மேளம் கொட்டி,வாத்தியம் இசைக்க காவடி முன்  மெய்மறந்து ஆடுபவர் ,என எவ்விதம் அவர் அவர் செயல் இருந்தாலும் மனதில் கந்தன் கருணை வேண்டியே வீதிவலம் வந்தது காவடி.
                                      பதிவிசாய் வந்த பாலமுருகன் காவடி,பக்தியுடன் வந்த பரம்பரை காவடி,உற்சாகம் கொண்டு ஓடிவந்த காவடி,கண்ணீர் மல்கி கரைந்து வந்த காவடி ,ஆவேசமாய் அரற்றி வந்த காவடி,மானசீகமாய் மகிழ்ந்து வந்த காவடி,கோபாவேசமாய் குதித்து வந்த காவடி,குறை தவிர் முருகா  என உருகி வந்த காவடி, கூத்தாடி வந்த பித்தன் அவன் காவடி,பரவசம் அடைந்து வந்த பராசக்தி காவடி, மணிகள் குலுங்க வந்த மாமன் அவன் காவடி,சுற்றி சுழற்றி சுழண்டு வந்த பகவதியின் காவடி,உடன்பிறப்பாய் வந்த மதுரைவீரன் காவடிநிறைகுடமாய் மங்கையர் சிரம் ஏறிய  காவடி ,சிரித்து மகிழ்ந்து வந்த சிங்கார காவடி என அகங்காரம் விடுத்து,ஆனந்தத்தை அணியாக பூண்டு கெட்டி மேளம் செந்திலாண்டவர் சிந்து புகழ் பாட புறப்பட்டது சுப்பன் காவடி. 





                                   அழகன் முருகன் அவன் அருளினால்,பாட்டன் சுப்பன் அவன் பார்வையில் பாந்தமாய் அமைந்தது அம்மைநகர் பூமியில் எழில் முருகன் இல்லம். அங்கிருந்து ஆடிவரும் ஆறுமுகன் காவடி . நந்திஎம்பெருமான் மத்தளம் தரை இரங்கி வந்து எங்களுக்கு வாழ்த்தொலி  பறைந்து  நின்றதோ . சேனை நடத்தி சென்ற வீரபாகு தேவர் தான் இன்று எங்கள் வழி நடத்தி சென்றாரோ, முதல் காவடி ஏந்தி நின்ற இடும்பரும் எங்கள்  உடன் மகிழ்ந்து வந்தாரோ, சுட்டெரித்த சூரியர் இன்று சுகந்த ஒளி தந்து நிற்கின்றார்,அகம் மகிழ்ந்த வாயுதேவனும் சாமரம் வீசி வருகின்றார், நீறு கொண்ட வருண னோ நேற்றே வீதியெல்லாம் குளிர்வித்து சென்றாரே , நிலம் தனில் குடிகொண்ட அக்னியும் மறைந்து நின்று மகிழ்கின்றார் இதை எல்லாம் தூர இருந்து பார்க்கும் வளியோ தானே இந்த சுப்பன்  காவடிக்கு சாட்சியாக மாறினான்.
                                   அம்மைநகர்  தெருவெல்லாம் இந்த காவடி வலம் வந்த புகழ் பாடும் முழுமையாய் முடிப்பதற்கு இந்த பகுதி ஒன்று தேறுமோ. புறப்பட்டகாவடி கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கந்தனின் தனையன் அயனின் மந்திரம் சொல்லி முன்னேறியது தார்சாலை நோக்கி. 
                                   தார் சாலை வந்தடைந்த காவடி பறக்கும் புகைவண்டி செல்லும் பாதையின்  அகத்தே இருந்த கீழ்  பாலம் வழியாக விரைந்தது. வீர முழக்கத்துடன்.
                                  வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 
                                             வீரவேல் குமரனுக்கு அரோகரா 






Monday, 18 May 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-18

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-18


                                              கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முருகப் பெருமான் திகடச்சக்கர என்று ஆனைமுகன் துதி சொல்லி
வாக்கெடுத்து கொடுத்து கவிபுனைய அருள் புரிந்தார். அவ்வண்ணமே அவர் தம் அப்பன் புகழ் பாட முனைந்த சேக்கிழார்  பெம்மானுக்கு உலகெலாம் என்று அடி எடுத்து கொடுத்து எம் ஆவுடை அமர்ந்த அப்பன் அடியெடுத்துக் கொடுதது திருத் தொண்டர் புராணம் வரைய வைத்தார். தம் திருவிளையாடற் மட்டும் உலகம் அறிந்தால் போதுமானது அன்று என்று எம் அப்பன் நினைத்ததனால் உருவான புராணம் திருத்தொண்டர் புராணம். வாழ்வின் இலக்கு பக்தி செய்தல் எனும் பேருண்மையை உலகினுக்கு எடுத்துரைக்க அவனால் மேம்பாடு அடைந்த மேன்மக்களை பற்றி எடுத்துரைக்க மற்றும் சில ஆன்மாக்களை அனுபிவிட்டான்.
                                             பக்தி செய்தல் என்பது தன்னை மறந்து தலைவனை நினைந்து தன்னலம் இல்லாமல் தன்  சுகம் பேணாமல் தாளாத உறுதியுடன் அவன் பாதம் சேர்த்தல் என்றால், அத்தகு பக்தியை வரமாய் பெற நமக்குஆண்டவன்  கட்டளை வேண்டும்.ஆதியை அடைய ஆன்மாக்களுக்கு அவன் அருளும்,அவன் அருளால் அவனை வணங்க நமை நடத்தி செல்ல மேன்மை கொண்ட முன்னோரும் வேண்டும். குருவருள் இன்றி குன்றம் ஏறி கொடி  நாட்ட முடியாது அவ்வாறான ஞான குருவாக நமக்கு கண்ணால்  காணாவிடினும் நம் ஆத்மா ஞானத்தில் நிறைந்து அருள் புரியும் பாட்டனை பெற்றது நம் தவப்பயனே. 
                                                பக்தி என்பதை மனத்தால் உணர்ந்து வாக்காய் வடித்து செயலால் செய்து வெளிக்கொணரலாம்.நம்மோடு வைத்திருந்த பக்தி மனம் பதிகம்,பாட்டாய் கமழ்ந்து ஆடி பாடி ஆண்டவனை அடையும் போது  அதை செய்பவர் அன்றி காண்போரையும் கட்டுண்டு  பக்தி செய்யத் தூண்டும்.அவ்வாறான ஒரு நிகழ்வு நம்மை ஆட்சி செய்து நமை சார்ந்தவறையும் ஆட்கொண்டது எனில் அது காவடி திருவிழா என்பதில் ஐயம் இல்லை.அந்த உணர்வு பொங்கிய தமை மறந்த நிலை எழுத்தில் வடிக்க எவ்வளவு தூரம் இயலும் என்பதையும்  நம் பாட்டன் வசம் இத்தருணத்தில் மனதார ஒப்படைக்கிறேன்.
    கவின்மிகு காவடிகள் கந்தவேல் காவடிகள் 
       சேந்தன் காவடிகள் செந்தில் வேல் காவடிகள் 
                   காங்கேயன் காவடிகள் கார்த்திகேயன் காவடிகள் 
                முருகவேல்  காவடிகள் முத்தையன் காவடிகள் 
                     கருணை வேல் காவடிகள் கருப்பையன் காவடிகள் 
                     சுப்பையன்  காவடிகள் சூர சம்ஹார  காவடிகள் 
                        மால் மருகன் காவடிகள் மதுரை வீரன் காவடிகள் 
                          முத்து முத்தான ஈசன் மைந்தனின் பால் காவடிகள் 

                                      அணிவகுத்து நின்றன அம்மைநகர் வலம் வர, தண்டாயுத பாணி நடு நாயகமாய்  வீற்றிருக்க இருபுறமும் எழில்  காவடிகள். இத்தனை நாள் செய்த தவம் எய்தும் தருணம் வந்தது. கந்தவேல் மந்திரத்துடன்,கருப்பன் அவன் மந்திரம் சொல்லி கருப்பையாவால்  செந்தில்வேல் சிரத்தில் அபிசேகம் செய்விக்க சிறு சொம்பில் பால் சேர்த்து சிக்கெனவே சிவன் பாதம் பிடித்தார் போல் சீரியமுறையில் கந்தக்காவடியில் பால்சொம்பு கட்டப்பட்டது.ஓம் சரவண பவ என்று சொல்லி செம்பில் பால் வார்த்து சுமந்து வரும் செல்வங்களை காப்பாற்று எனவும், ஓம் நமசிவாய என்ற ஓம்காரன் பெயர் சொல்லி ஓடிவரும் நின் பக்தர்களை காத்து நில் என்றும் பால் காவடிகள் பக்குவமாய் கட்டப்பட்டது.வீரவேல்,வெற்றிவேல் என சொல்லி வில்லில்  இருந்து வரும் அம்பு போலே சொல்லில் இருந்து வரும் சுவை போலே முருகன்  இல்லம் விட்டு அம்மைநகர் வீதி வலம்  வர, எங்கள் பாட்டன் அவன் பெயர் நிலை நாட்ட, கனி கொடுத்து மகிழ்வித்த குடும்பம் இன்று காவடி கொண்டு காவியம் படைக்க வென்று, வினை முடித்து வென்று அன்று ஆண்ட எங்கள்  பாட்டன் சுப்பன் நாமம் சிறக்கவென காவடிகள் தயாராய் நின்றன.
                                                    முருகன் இல்லம் முற்றம் அது முற்றும் அப்பன் அவன் திருவருளால் நிறைந்திருந்தது. பூக்கள்  மாரி போல் பொழிய செய்து எங்கள் பழனியம் பதியை குளிர செய்து  சந்தானம்,சவ்வாது மணக்க, பால் காவடி,சந்தன காவடி கொடுமுடி நீர்காவடி, பாலன் அவன் பதுமை காவடி  என என்குலமே ஒன்றிணைந்து ஓம் காரம் கூவி, தீப ஒளி  கூட்டி, தீஞ்சுடர்  நாயகன் தீந்தமிழ் கடவுள் முருக  பெருமானின் காவடியை சிரத்தில்  தூக்க நின்ற தருணம். தாரை தாரையாய் கண்ணீர், நிலை கொள்ளாத தவிப்பு,தேகம் சிலிர்க்கும் அருள், மேனி முறுக்கி நின்ற கருப்பன், கதறி துடித்த சக்தி, முறைத்து நின்ற முத்தையன், மருகி நின்ற வீரன், உல்லாசமாய் உரக்க சிரித்து நின்ற காளி அதனையும் ஓரிடத்தில் அம்மைநகர் அகமதனில். 
                                                     வயதில் சிறியவர் முதல் காவடி பச்சை பட்டை உடுத்தி நின்ற என் மைந்தன் ஸ்ரீராமனுக்கு இராமன் வம்சம் சார்பாய் முத்துக்குமரர் கரங்களினால் மாவடியானும்,அங்கயற்கண் அம்மையும் எடுத்து தர பாலகன் முகமும் பார்த்தவர் முகமும் மிளிர்ந்தன .வரிசை வரிசையென அழகு காவடிகள் கங்கணம் கட்டி காத்து இருந்தோர் தோள்  சேர ஒவ்வன்றும் ஓர் கந்தன் கருணையினை சொல்லும்.ஸ்ரீ ராமன் முதல் அவன் தாத்தா வரை வயது வாரியாய் நம் குல மூத்தோர் முறையாய் விரதம் ஏற்றோர் தோள்களில் காவடியை ஏற்றிவிட ஒவ்வரு காவடியும் சுமந்தோர் தம் பக்தி ஸ்ரத்தை சிறக்க பாந்தமாய் பரமன் மகன் காவடியை தோள்களிலும்,அவன் பக்தி உணர்வை சிந்தையிலும் தாங்கி, உணர்ச்சி பெருகி,உள்ளம் உருகி ,உவந்து,மகிழ்ந்து ,உளமார சுமந்தனர்.
                    வாய் விட்டு கதறி,மனம் விட்டு மகிழ்ந்து,மத்தியில் கந்தனை நிறைத்து, கண்ணீர் பெருகி ,அண்டம் அதிர வந்த வீரபத்திரர் போலே பார்த்திபன் அவன் ஆடி வர, கூவி கதறி ஆதிசக்தியாய்  நாரி
சதங்கையுடன்நடந்துமகிழ்ந்து வர,கருப்பனும்,முத்தையனும் ,மதுரைவீரனும்,பகவதியும் அருளோடு துணைவர ஆரம்பம் ஆனது அம்மைநகர் ஆலயங்கள் சுற்ற புறப்பட்ட காவடி வீதி உலா.
                         


Friday, 17 April 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17.

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

உனது கமலம் போன்ற திருவடிகளில் 
அரை நிமிஷம் நேரம் கூட தூய தியானத்தில் 
வைக்க அறியாத மட மூடன் நான்.
குற்றம்,குறையுடன் நான் இருந்தாலும் , 
கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே ! 
நீர் எமை ஆட்கொண்டு அருள் செய்திட மாட்டீரோ!.

                              இவ்விதமான வேண்டுதல் உடனே சனிகிழமை இரவு காவடிக்கு கடைசி கட்ட அலங்காரம் நிறைவேறி கொண்டு இருந்தது.பண்டாரகோலனாய் இருந்தாலும்,பாராளும் ராஜ அலங்காரத்தில் இருந்தாலும் எம் அய்யனின் அழகு குறையாது. அவ்விதமே பண்டார கோலமாய் காவி உடைதரித்திருந்த காவடிகளை, கலை அழகு மிக்க முருகு தன் முக அழகு போல் மிளிரவைக்க முடிந்தவரை முயன்றிருந்தோம்.ஒவ்வரு காவடியிலும் இந்த சுப்பிரமணி  பெயர் சொல்லும் பித்தளை மணி கோர்க்கப் பட்டது.
அய்யனுக்கும் திருஷ்டி படும் என்று அவன் பெயராலே எலுமிச்சம் பழம் சேர்க்கப்பட்டது.அடுத்த நாள் பால் கட்டவென சொம்புகளும், காவி துணிகளும்,கயிறும் பக்குவமாய் தயாரானது.மஞ்சள்,பச்சை உடுப்பணிந்த விபூதி பை ஒவ்வரு காவடியிலும் கட்டப்பட்டது.
இவ்விதமாய் காவடிகள் உருவேற்றும் வேலை  பனிரெண்டு மணி வரை தொடர்ந்தது.
                                சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்து காத்திருந்தது.
எல்லார் மனதிலும் ஒரே எண்ணம் அது கந்தன் காவடியை சுமந்து வரும் காட்சியை உருவகப் படுத்தி காத்திருந்தது.இன்னும் சில மணித்துளிகள் போதும் அவன் தன் பெயர் சொல்லி ஆடிவரும் காவடி செல்லும் வழி இடம் எல்லாம் விழி வைத்து  கண்டு இன்பமுறும் நேரமதை நெருங்க.
                                 மறுநாள் காலையில் முதலில் கோமாதா பூஜை செய்து,பின்னர் முன்னோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு,காவடி வழிபாடு செய்து முருகப் பெருமான் பேரருளால் அவன் நாமம் சொல்லி அவனுக்காக எடுக்கப்படும் இந்த காவடி முருகன் இல்லம் விட்டு புறப்பட்டு, அம்மை நகர் வீதிகளை வலம் வந்து ,நம் பாட்டன் குடியிருக்கும் மலர் சோலை தனை அடைந்து வழிபட்டு,பின்னர் பெருமாள் கோவில் வலம்  வந்துமீண்டும் முருகன் இல்லம் அடைவோம் என்ற திட்டம்.
                                 வந்தது பேரருள் பொருந்திய ஞாயிறு காலை.அன்றைய பொழுது மலரும் போதே அனைவர் மனதிலும் விந்தை நிறைந்த சிந்தை.இத்தனை நாள் காத்திருந்த காவடி நாளும் வந்து விட்டது.வீடே தெய்வீக மணம் கமழும் ஆன்மீக கோவில் ஆனது. 
                பிறக்கும் உயிர்கள் எல்லாம் இறைவன் காலடி தாமரையில் உரைவதை உன்னதமாய் என்னும்.அவ்விதமாய் என்று செய்த தவப் பயனோ மூங்கில் மரமாய் பிறந்து,வளர்ந்து தன்னை கந்தன் காவடிக்கு வடிவு கொடுத்த மரங்களும் முக்தி பெற்றிருக்கும்.அவைகளும் தான் பெற்ற வந்த வரம் எத்தகையதோ,பக்த்தி மனம் சிறக்க பக்குவமான காவடியை உருமாறி வணங்கப்படும் பேரருளை பெற்றது.என்றேனும் நமக்கும் அந்த பாக்கியம் கிட்டுமோ!
                                    சாமி அறையில் திரை மறைவில் தவம் இருந்த காவடிகள் வீதி வலம் வர தயாராய் கூடத்தில் குடியேறின.கூடத்தில் நடு நாயகமாய் தண்டம் ஏந்தி  கோலோச்சும்  தண்டாயுத பாணி வீற்றிருக்க அவருக்கு இருபுறமும், சூரனை அழிக்க புறப்பட்ட வேலவரின் இருபுறமும்,கைலாய சேனையாய்  கணங்கள்  நின்றது போலே காவடிகள் நின்றிருந்தன.
                                    முன்னோரை பூஜிக்கவென ஐந்து சொம்புகள் நிறைகுடமாய் தாமரை தாங்கி நிற்க,அவர் தம் குலதெய்வங்களுக்கு என ஐந்து செம்புகள் நிறை நீராய் தாமரை தலை சூடி இருந்தன.நம் முன்னோரும்,குல தெய்வங்களும் அதில் ஆவாகனம் ஆகி ஆசியுடன் வீற்றிருந்தனர்.
                                     வகை வகையாய் வண்ண மலர்கள்.மல்லி,முல்லை,
செவ் வந்தி,ரோஜா,தாமரை,அரளி,மருவு,மரிகொளுந்து,சம்மங்கி என்று தோரணமாய்,மாலைகளாய்,தொடுத்த பூக்களாய்,உதிரிபூக்களாய் என 
எல்லா வகையிலும் மணம் பரப்ப. சாம்பிராணி,ஊதுபத்தி,சந்தானம் சவ்வாது பன்னீர் என்று வாசனை திரவியங்களும் தம் பங்கை செவ்வனே செய்ய,நெய் தீபம் மணக்கும் குத்துவிளக்கு அம்மையவள் மேனி போல் மிளிர.முருகன் இல்லம் ஆன்மிகம் மணம் கமழும் ஆறு படையப்பனின் மற்றுமொரு படை  வீடானது.
                                     ஆடவர் எல்லாம்,காவி உடுத்தி மாலை அணிந்து சந்தானம் பூசி முருகன் அடிமைகளாய் முழுதாய் உருமாற. எம் குல பெண்டிரும்,மஞ்சள் வண்ணம் கொண்ட மங்கலமான புடவையில் மாரியவள் அடிமை போலே உரு கொண்டோம்.குடும்பத்தின் மூத்த உறுப்பினர் கருப்பையா தாத்தா  முதல் கடை குட்டி சக்திவேல் வரை காத்திருந்த அந்த தருணம் வந்து விட்டது.
                              வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
                                 வீர வேல் குமரனுக்கு அரோகரா!






Sunday, 22 March 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-16

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-16

                 திருவிளையாடற் புராணம் செய்த பரஞ்சோதி மாமுனிவர் ஆற்று சிறப்பை சொல்லும் போது  ஒரு பாடல் வரும்
                               
                               ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
     ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
இறைவியே இந்த இயற்கையாய் அமைந்தவள்.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களை சிவனாரின் கிரியா சக்தியாய்  நின்று புரிபவள்.அது போலே அவளே,ஆறு,குளம்,கிணறு,அருவி,கடல் என பெயர் கொண்டு இந்த பயிர்களை எல்லாம் வளர்ப்பதும் அவளே என்பார்.
                          மேற் கூறிய இந்த நீர் நிலைகள் எல்லாம் அன்னையின் சொருபம் எனில் அதிலும் சிறப்பு கொண்ட புண்ணிய நதி தீர்த்தங்களில் இருந்து வந்து சேர்ந்தது தீர்த்தங்கள் நிரனின் தீர்த்த காவடிக்கு.
                         ஆம் அதில் சேர்க்கப்பட்ட தீர்த்தங்கள்... அருவியாய் அன்னை உருவாகும் சுருளி தீர்த்தம்.ஆறாக  அவள் பிரவாகிக்கும் கொடுமுடி காவிரி தீர்த்தம்,மானசொரோவரில் இருந்து உலகின் எல்லா பாவத்தையும் போக்க புறப்பட்ட கங்கை தீர்த்தம். அழகர் மலியானும்,அவன் மருகன் முருகப் பெருமானும் குடிகொண்ட அழகர் மலை கிணற்று தீர்த்தம்,சைவ,வைணவ ஒற்றுமையை உலகினுக்கு பறை சாற்றி,பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாய் பகவான் ராமரால்,அமைக்கப்பட்ட லிங்கமாய் எம் அப்பன் வீற்று இருக்கும் இராமேஸ்வரம் கடல் தீர்த்தம்.அதையும் தாண்டி வாசுதேவ குடும்பானாம் என்ற சமஸ்க்ரித்த சொல்லுக்கு பொருளாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்று முகமதிய நாட்டில் இருந்து வந்து சேர்ந்த மெக்கா  புனித நீர் என்று ஐவகை தீர்த்தங்களும் அம்சமாய் இடம் பிடித்தது, அருமை பாலகன் என் சகோதரி நித்யா பெற்ற செல்வன் நிரனின் காவடியில்.
                           பழநியம்பதி வாழ் சிவகுமரனுக்காய் எடுத்து செல்லும் இந்த காவடியை சுமக்கும் சிவகுமாரின் பெயரனுக்காய்  அந்த காவடியை
 உருவாக்கியது அவன் தாத்தாக்கள். இடும்பன் சுமந்த காவடி போல் ஒரு கம்பில் இருபுறமும் துலாபாரம் போல் சொம்பை கட்டி
உருவாக்கினார்கள்.  நிரனின் தீர்த்த காவடி எடுக்கும் முடிவு பின்னரே உருவானது, ஆகவே அவருக்கான செம்பினை வாங்க நானும் என்னவரும் அந்த வியாழன் அன்று சென்றோம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு.அன்று மீனாட்சியை வழிபட்ட பின்னர்,புதுமண்டபம் சென்று இதை வாங்கிய பின்னே,பைரவரை காண பேராவல் பிறக்க,எழுகடல் தெருவில் உள்ள பைரவரை வணங்க சென்றோம். அங்கே அது ஒரு அஷ்டமி தினம் ஆகையால் பூஜை புனஷ்காரம் என்று எல்லாவற்றையும் ஏற்று திருப்தியாய் தரிசனம் தந்தார் பைரவர். அதன் பின் வடக்கு கோபுர வாசல் வழியே நடந்து வந்தால் அங்கே  மொட்ட கோபுரம் முன்னே முனீஸ்வரர் வழிபாடு முடித்து திரும்பினோம் .
                 ஒரு தெய்வீக நிகழ்வு நடக்கும் தருவாய் ஒரு மிகப்பெரிய குடும்பமே கூடவேண்டும் எனும் போது ,எத்தனை விஷயங்கள் கணக்கில் எடுக்க வேண்டியது உள்ளது.ஊர் கூடினால் தேர் இழுக்கலாம். குடும்பம் கூடினால் சாத்தியமற்ற செயல்களும் சாத்தியப்படும்.அதுவும் நமக்கு முன்னே செல்ல நமது முன்னோரும்,குலதெய்வமும் துணை நிற்கையில் கந்தன் காவடியும் அவன் பாதம் சேர்ந்தது தங்கு தடையின்றி.
                
                அடுத்து பால் காவடிக்கு பால் வேண்டும்.அதுவும் பாலமுருகன் தானே அருள வேண்டும்.சனி கிழமையும் வந்து விட்டது எங்கே அவன் அனுப்பும் செய்தி ,அதற்க்கு முன்னே எடுத்த காவடிக்கு கனவில் வந்து செய்தி சொன்ன கந்தன் இன்னும் வழிவகை  காட்ட வில்லையே என ஏங்கி  நிற்கையில், மூர்த்தி சித்தப்பா தன சிந்தையில் தோன்றி கந்தன் தந்த செய்தி என முத்து என்ற பெயர் கொண்டு யாரேனும் பசு வைத்திருந்தால் அந்த பசு இதற்க்கு ஏற்றது என உரைக்க. அம்மைநகரை அடுத்த செட்டியப்பட்டியில் இருந்தது அந்த பசு. செல்வராஜ் மாமா சென்று விசாரிக்கையில் முத்து என்ற பெண்மணியிடம் ஒரு மாடு இருப்பதாக வந்தது தகவல். அதிலும் ஒரு விசேசம், இன்று முருகன் இல்லம் குடிகொண்டு இருக்கும் இடத்தில் தான் முன்னே அந்த பசு மேய்ந்து கொண்டு இருக்குமாம். முத்துகுமரனின் முடியை குளிர்விக்க நாம் எடுத்து செல்ல இருந்த பால் காவடிக்கு பாலும் வந்து சேரும்.
                 காவடிகள் 17 அதில் கொடுமுடி தீர்த்தகாவடி ஒன்று,நிரனின் தீர்த்த காவடி ஒன்று ,மற்றொன்று ரேவதி அத்தாசியின் சந்தன காவடி.ஆகவே மீதம் இருக்கும் 14 காவடிக்கும் பால் வேண்டும் அதற்காய் இனொரு பசு மாதவன் சித்தப்பாவால் தருவிக்கப்பட்டது. அதன் விசேசம் அந்த பசு கன்று ஈன்றது தை பூசத்தில். கிருபானந்த வாரியார் சொற்களில் சொல்ல வேண்டுமானால், எம் அப்பன் முருகப்பெருமானின் லீலைகள் அளப்பரியது. அவனின் காவடி தின லீலைகளை அடுத்த பதிவில் காண்போம்.
                                  ஆறுமுக வேலனுக்கு அரகரோகர! 
                                  பார்வதியாள் பாலனுக்கு அரகரோகர!


Saturday, 21 March 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

                                  மே மாதம் 2014 ஆம் ஆண்டு,24 ஆம் தேதி இனிய காலை பொழுது புலர்ந்தது ,முந்தைய இரவின் பலத்த காற்று,இடி,மின்னல்,மழை இவற்றின் சுவடுகள் சிலவற்றை மட்டும் நமக்கு உணர்த்திக்கொண்டு.முதல் நாள் இயற்க்கை காட்டிய விளையாட்டால் மின்சாரம் சில பிரச்சனைகள் தர,வீட்டின் மேலே போட்டிருந்த கொட்டகை ஆட்டம் காண என சிற்சில பிரச்சனைகள் நடந்தேறியது.முதல் நாள் வரை கடுமையாய் இருந்த அக்னி நட்சத்திர வெயில் அன்று சற்றே தணிந்தது.
                                
                                   ஓரிடத்தில் இருந்து விதையாய் தோன்றிய மரங்கள் பதியம் இடப்பட்டு வெவேறு இடத்தில் வேரோடும் அதுபோலே,ஒரு கூட்டில் ஜனனம் கொண்ட பறவைகள் சிறகு முளைத்து தன் குடும்பம் அமைக்க வெவ்வேறு திசை பறக்கும்.அந்த பறவைகள் எல்லாம் பாசப் பறவைகளாய்,பக்தி பறவைகளாய் மாறி,ஆதாரமாய் நின்ற அம்மைநகர் கூடு தேடி வர ஆரம்பித்தது.முருகன் அருள் கொண்ட இல்லம் கலை கட்ட தொடங்கியது.

                                  காலை பூஜை காவடிக்கு கடவுள் வாழ்த்தோடு சொல்லி ,சிற்றுண்டி முடித்து சீக்கிரமே அமர்ந்தோம் ,காவி உடை தரித்த காவடிகளுக்கு,கலையழகு கொண்ட வண்ணமிகு மயில் தோகை பீலி கொண்டு அலங்கரிக்க.மயூரின் பீலியை வகை வாரியாய் பிரித்தெடுத்து,வள்ளி மணவாளன் பெயர் சொல்லி சுமந்து செல்லும் பால் காவடிக்கு, கணம் சேர்த்தோம்.
                   
                            பழனி செல்லும் முன்னே பிள்ளையார் பட்டி பிள்ளையாரை தரிசிக்கவேண்டும் என்பது ராஜா மாமாவின் கொள்கை.அன்று அதிகாலை அண்ணன் தம்பியாய்  இணைந்து ஆறுமுகன்  சோதரனாம் ஆனைமுகனை வழிபட்டு வந்தார்கள்.
                       
                               கும்பகோனத்தார்  குலதெய்வ வழிபாடு ஒன்று மீதம் இருந்தது. பிறந்ததில் இருந்து எங்கள் அப்பா வீட்டு குலதெய்வம் கோவில் சென்றதில்லை நானும் என் சோதரியும்.எனவே பின் காலை பொழுதினிலேஎன் ராஜேஷுடன் அம்மை நகர் அருகே உள்ள எத்திலோடு  என்னும் ஊரில் குடி கொண்ட என் அப்பன் வீட்டு குலதெய்வம் சீலைகாரியை வழிபட புறப்பட்டோம் சிறுகுழுவாய்.

                                 நிலக்கோட்டை அருகே குடிகொண்ட எம் பூர்வீக முன்னோர்கள் வாழ்ந்த பூமி அது. மூன்று தலைமுறை முன்னால் நேர்ந்த அசம்பாவிதம் ஒன்றின் காரணமாய் குலதெய்வ கோபத்திற்கு ஆளான குலம்  அது.சில மாதம்  முன்னே,கோவிலை எடுப்பிக்க ஆணை வந்தும் ,மெல்லவே கோவில் வேலைகள் முன்னேறும் கோவில் அது. இதை சொல்லும் காரணம், மனிதர்களின் அறியாமை காரணமாய் குலதெய்வமே கோவித்து ,சங்கடங்கள் பலவற்றை சந்தித்து வரும் சந்ததிகள் அங்குண்டு. 
அவனருளாலே அவன் தாழ் வணங்கி என்னும் கூற்றை மெய்பிக்கும் கோவில் அது. கூரை வீட்டில் குடிகொண்ட முன்னோர்கள் நம்மை காக்கும் தெய்வங்களாய் உருமாறி,மாரியம்மாவாய் நிற்கும் என்பதின் வடிவம் அந்த கோவில். முதலி விக்ன விநாயகர் தனி கருவறையில் தனித்திருக்க.சமயபுரம் மாரியும்,சீலைகாரியும் ஒரே சன்னதியில் அமர்ந்திருக்க,முன்னே அவள் அண்ணன் மதுரைவீரன் வீற்றருவாள் பிடித்து நிற்க, அடுத்த சன்னதியில் சோனை சாமி. இந்த வீட்டு கோவிலுக்கு மூன்று வாசல். எப்போதோ வரும் பங்காளிகள் விளக்கேற்றி சாமி கும்பிட்டு செல்வார்கள்.

                               நாங்கள் போன நேரம்,கோவில் எல்லா வழிகளும்,
திறக்கப்பட்டு, கழுவிடப்பட்டு ,பத்தி மனம் கமழ பக்தி மயமாய் இருந்தது. முன்னமே என் சகோதரன் சொல்லி யாரோ வந்து திறந்து வைத்திருந்தார் என நினைத்தோம்.ஆனால் அங்கு சென்ற பின்னே அங்கிருந்த அம்மா,மதுரையில் இருந்து வந்தது என்றும்,நீண்ட வருடங்கள் சென்று இன்று வந்து, சாமிகளுக்கு கைங்கர்யம் செய்ய வந்தது என்றும் அறிந்து அதிசயத்தில் மூழ்கினோம். பூஜை பொருட்கள் ஒவ்வரு தெய்வத்திற்கும் வாங்கி வந்ததை வைத்து,முறையாய் ராஜேஷை கொண்டே தீபாராதனை காண்பிக்க சொன்னார்கள் மாமா.மன நிறைவாய் கும்பிட்டு,இத்தனையும் செய்த அந்த அம்மைக்கும்,பிரசாதம் வைத்து கொடுத்தோம்.
   
                             இதுவரை சென்ற அனைவரின் குலதெய்வ கோவில்களிலும்,
அருள் வாக்கு சொல்ல ஆள் இருந்தது என்று நினைத்திருக்கும் போதே....
குலவை ஒலி  முழங்க சூடம் ஏற்றி காண்பிக்க சொல்லி அந்த அம்மா வடிவில் வந்து சமயபுரத்தாள் வாக்கு தந்தாள்.கலங்காதே மகனே காலம் வரும் உன் உடன் பிறப்பையும் வாழவைப்பேன்,என வாக்கு தந்தாள்.நல்ல ஆசி அதுவும் கோபம் கொண்ட குலதெய்வம்,மனமிரங்கி பொன்னடி மக்களுக்கு வாழ்த்து சொல்ல.கோடையிலும் குளிர்ந்து  எங்கள் மனம்.

                            மதிய உணவுக்குள் திரும்பிவிட்டோம் அம்மை நகர்.காவடியும்,காவி உடை,மயில் பீலி,என பக்குவமாய் பக்தி மயமாய் உருவாகி  உருவேறி கொண்டே இருந்தது. இரவினில் வெகுநேரம் வரை மணி கட்டும் செயலும்,தீய சக்திகள் அண்டாமல் பாது காக்க,
காக்க காக்க கனகவேல் காக்க என்ற மந்திர சொல்லுக்கு இணங்க எலுமிச்சை பழம் கட்டி,பலம் சேர்த்தோம்.
                              கொடுமுடி தீர்த்த காவடி விவரம் ஏற்கனவே அறிந்தோம்.இன்னும் ஒரு பாலகனின் தீர்த்த காவடி உருவானது மகவும் சிறப்பாக பால முருகனுக்காக.ஆம் அது அவ்வைக்கு சுட்ட பழம் தந்த தகப்பன் சாமியின் ஞானம் எல்லாம் பெற்று வந்த அமிர்தமான அன்னையின் மைந்தனுக்காக.நிரனுக்காக அமைந்ததது அருமையான காவடி.அதன் சிறப்பை ,சிறப்பாய்  அடுத்த பதிவில் காண்போம்.


பழனிமலை தண்டாயுத பாணிக்கு அரோகரா.
ஆவினன் குடி சிறக்கும் பாலனுக்கு அரோகரா.


Thursday, 13 November 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-14
                     
                           காவடி நிகழ்வு நடந்தேறி ஆறு மாத காலம் கழிந்தது,சென்ற பதிவிற்கும்,இந்த பதிவிற்கும் இருக்கும் இடைவெளியே மூன்று மாத காலம் ஆனது.ஆனாலும் இந்த அனுபவம் ஆனது பேரின்பம் தரும் ஆன்மீக அனுபவம்,நினைத்த மாத்திரத்தில் அன்று இருந்த அதே உணர்வு இன்றும் நம்மை ஆக்ரமிக்கும்,எனவே காலம் என்பது ஒரு பொருட்டாகாது .இறைவன் சித்தம் இன்று இது இவர் வழி  அரங்கேறும்  எனும் போது  அதன் பகிர்வதே நம் பாக்கியம் ஆகும்.

                          நம் வாழ்வில் நடக்கும் பல ஏற்றதாழ்வுகள்,இன்ப துன்பங்கள் நம்மில் பல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.நிகழ்வுகள் நிகழும் தருவாயில் அந்த அனுபவம் மட்டுமே நம்மை சார்ந்து அதன் உணர்வால் நாம் ஆக்கிரமிக்கப் படுகிறோம்.இவை அனைத்தும் தாண்டி வந்து திரும்பி அந்த நிகழ்வை பார்க்கும் போது ,அவை நிகழ்ந்தேறிய காரணமும்,காரியமும்,நமக்கு புலப்படும்.அந்த உண்மை நிலை நாம் அறிந்துகொள்ளும் வரையில் நாம் அவை தந்த துன்ப நிகழ்வில் உழன்று கொண்டே இருப்போம்.அதற்கான  சான்றாய் நின்று, அன்னையாய் அமர்ந்து நம் குடும்பங்களை காத்து நிற்கும் அற்புத அதிசயம் செண்பகவல்லி தாய் குடிகொண்ட மேலப்பசளையை வணங்க பார்த்திபனூர் கருப்பனிடம் இருந்து உங்களை அழைத்து செல்கிறேன்.

                       மேலப்பசளை,சிவகங்கை சீமையின் அழகிய ஓர் மண் மணம் மாறாத கிராமம்.இங்கே கடல் கடந்து பொருள் ஈட்டி ,அதைகொண்டு தன்  தாய் மண்ணில் மாளிகை  கட்டி மகராசனாய்  எங்கள் பாட்டையா இராமநாதபிள்ளை அவர்கள் ஆட்சி செய்த பூமி.அதன் அருமை பெருமைகளை எழுதும் அறிவும்,அனுபவமும்,எனக்கு வாய்க்கபபடவில்லை.ஆனால் நம் வீட்டு பெரியவர்கள் வாய்வழி வந்த செய்தியே அதன் மகத்துவத்தை உணர்த்தியது.
                           தசரதர்க்கு மஹாலட்சுமியே மருமகளாய் சீதாதேவி கிடைத்தார் போல் ,எங்கள் பாட்டையாவிற்கு கிடைத்த ஸ்ரீதேவி மருமகள் செண்பகவல்லி அன்னை.பிறந்த இடம்,புகுந்த இடம் இரண்டும் பெருமைப்படும் வண்ணம்,வாழ்ந்து மனிதரும் தெய்வமாகலாம் என்னும் உண்மையை உலகினுக்கு எடுத்துரைத்து மெய்யாய் 
அருள்பாலிக்கும் இறைவன் மலரடி செண்பகம் எங்கள் தாய்.
                          இந்த ஒரு பதிவை நான் எழுத ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்தது,பதிவை பூர்த்தி செய்ய இயலவில்லை. எதோ ஒரு காரணம் என்று தோன்றியது.என்னவென்று அறியவில்லை,அறியவும் முற்படவில்லை.ஆணை இன்று கிட்டியது என் மனதிற்கு இதோ இந்த மண்ணில் குடி கொண்ட எங்கள் அம்மாச்சி துணையுடன் தொடர்கிறேன்.
                       பசியோடு வரும் மகவின் பசியாற்றுபவளே அன்னை.அன்றும் பசித்துவந்த காவடி குழுவாம் தம் மக்களுக்கு தம் இருப்பிடத்தில் பசியாற்றினார்கள் செண்பகவல்லி அன்னை.ஆன்மீக தேடலில் அலைந்த தம் மக்களுக்கு,அமுதம் தந்து ஆசியும் தந்து காவடி இனிதே ஈடேற வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
                         பசலை விட்டு அழகிய மீனாட்சி அம்மன் கொலு வீற்றிருக்கும் மதுரை வழியாக அங்கு சிறிது சிரம பரிகாரம் செய்து அம்மைநகர் சென்று அடைந்தோம் அனைவரும்.
                      மாலை நேர  காவடி பூஜை பாட்டு,பஜனைகளுடன், அருளும்,அவன் தன குரலும் ஓங்கி ஒலிக்க பக்தி உணர்வும் ,பந்த உணர்வும் பொங்கி நிற்க தொடர்ந்தது காவடி வினோதங்கள்.
                    பக்தியுடன் நாம் படைத்த பா கேட்ட முருகன் தன் பக்தருக்கு உணவளித்து பெரும் சப்தத்துடன் இடியும் மழையையும் பரிசளித்தான்.
                  அந்த நேரத்தில் ஞாபகம் வந்தது எங்கள் மாமாவிற்கு, காவடி வழிபாட்டின் விசேஷ பூஜைக்காய் வாங்கிவைத்த தாமரை மலர்கள் நாகமலையில் தங்கிவிட்டது என்று. மழையும்,மின்னலும் மிரட்டும் வேளையில் எடுத்துவர தாம் செல்வதாக தம் வயதையும் மீறி மாமா சொல்ல ,அப்படி அனுப்பிவிட மாயவன் மருகனுக்கு மனம் வருமோ? அனுப்பிவிட்டான் தம் பெயர் கொண்ட முருகையாவை நாகமலை சென்று,திரும்பும் பயண திட்டத்தோடு.  உயிர்களுக்கு அளிக்கும் அன்னத்தில் அவர் தம் பெயர் இருக்கும் பட்சத்தில், அவனுக்கான மலர்கள் தாம் வந்து சேராதோ, அதுவும் வந்துவிட்டது மின்னல் ஒளியோடு.
                  
அடுத்த பதிவு அடுத்தடுத்து வர அழகுமயில் வாகனன் அருள் புரிய வேண்டி இதனை பதிவு செய்கிறேன்.
                 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
                 வீர வேல் குமரனுக்கு அரோகரா!