Friday, 17 April 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-17.

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

உனது கமலம் போன்ற திருவடிகளில் 
அரை நிமிஷம் நேரம் கூட தூய தியானத்தில் 
வைக்க அறியாத மட மூடன் நான்.
குற்றம்,குறையுடன் நான் இருந்தாலும் , 
கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே ! 
நீர் எமை ஆட்கொண்டு அருள் செய்திட மாட்டீரோ!.

                              இவ்விதமான வேண்டுதல் உடனே சனிகிழமை இரவு காவடிக்கு கடைசி கட்ட அலங்காரம் நிறைவேறி கொண்டு இருந்தது.பண்டாரகோலனாய் இருந்தாலும்,பாராளும் ராஜ அலங்காரத்தில் இருந்தாலும் எம் அய்யனின் அழகு குறையாது. அவ்விதமே பண்டார கோலமாய் காவி உடைதரித்திருந்த காவடிகளை, கலை அழகு மிக்க முருகு தன் முக அழகு போல் மிளிரவைக்க முடிந்தவரை முயன்றிருந்தோம்.ஒவ்வரு காவடியிலும் இந்த சுப்பிரமணி  பெயர் சொல்லும் பித்தளை மணி கோர்க்கப் பட்டது.
அய்யனுக்கும் திருஷ்டி படும் என்று அவன் பெயராலே எலுமிச்சம் பழம் சேர்க்கப்பட்டது.அடுத்த நாள் பால் கட்டவென சொம்புகளும், காவி துணிகளும்,கயிறும் பக்குவமாய் தயாரானது.மஞ்சள்,பச்சை உடுப்பணிந்த விபூதி பை ஒவ்வரு காவடியிலும் கட்டப்பட்டது.
இவ்விதமாய் காவடிகள் உருவேற்றும் வேலை  பனிரெண்டு மணி வரை தொடர்ந்தது.
                                சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்து காத்திருந்தது.
எல்லார் மனதிலும் ஒரே எண்ணம் அது கந்தன் காவடியை சுமந்து வரும் காட்சியை உருவகப் படுத்தி காத்திருந்தது.இன்னும் சில மணித்துளிகள் போதும் அவன் தன் பெயர் சொல்லி ஆடிவரும் காவடி செல்லும் வழி இடம் எல்லாம் விழி வைத்து  கண்டு இன்பமுறும் நேரமதை நெருங்க.
                                 மறுநாள் காலையில் முதலில் கோமாதா பூஜை செய்து,பின்னர் முன்னோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு,காவடி வழிபாடு செய்து முருகப் பெருமான் பேரருளால் அவன் நாமம் சொல்லி அவனுக்காக எடுக்கப்படும் இந்த காவடி முருகன் இல்லம் விட்டு புறப்பட்டு, அம்மை நகர் வீதிகளை வலம் வந்து ,நம் பாட்டன் குடியிருக்கும் மலர் சோலை தனை அடைந்து வழிபட்டு,பின்னர் பெருமாள் கோவில் வலம்  வந்துமீண்டும் முருகன் இல்லம் அடைவோம் என்ற திட்டம்.
                                 வந்தது பேரருள் பொருந்திய ஞாயிறு காலை.அன்றைய பொழுது மலரும் போதே அனைவர் மனதிலும் விந்தை நிறைந்த சிந்தை.இத்தனை நாள் காத்திருந்த காவடி நாளும் வந்து விட்டது.வீடே தெய்வீக மணம் கமழும் ஆன்மீக கோவில் ஆனது. 
                பிறக்கும் உயிர்கள் எல்லாம் இறைவன் காலடி தாமரையில் உரைவதை உன்னதமாய் என்னும்.அவ்விதமாய் என்று செய்த தவப் பயனோ மூங்கில் மரமாய் பிறந்து,வளர்ந்து தன்னை கந்தன் காவடிக்கு வடிவு கொடுத்த மரங்களும் முக்தி பெற்றிருக்கும்.அவைகளும் தான் பெற்ற வந்த வரம் எத்தகையதோ,பக்த்தி மனம் சிறக்க பக்குவமான காவடியை உருமாறி வணங்கப்படும் பேரருளை பெற்றது.என்றேனும் நமக்கும் அந்த பாக்கியம் கிட்டுமோ!
                                    சாமி அறையில் திரை மறைவில் தவம் இருந்த காவடிகள் வீதி வலம் வர தயாராய் கூடத்தில் குடியேறின.கூடத்தில் நடு நாயகமாய் தண்டம் ஏந்தி  கோலோச்சும்  தண்டாயுத பாணி வீற்றிருக்க அவருக்கு இருபுறமும், சூரனை அழிக்க புறப்பட்ட வேலவரின் இருபுறமும்,கைலாய சேனையாய்  கணங்கள்  நின்றது போலே காவடிகள் நின்றிருந்தன.
                                    முன்னோரை பூஜிக்கவென ஐந்து சொம்புகள் நிறைகுடமாய் தாமரை தாங்கி நிற்க,அவர் தம் குலதெய்வங்களுக்கு என ஐந்து செம்புகள் நிறை நீராய் தாமரை தலை சூடி இருந்தன.நம் முன்னோரும்,குல தெய்வங்களும் அதில் ஆவாகனம் ஆகி ஆசியுடன் வீற்றிருந்தனர்.
                                     வகை வகையாய் வண்ண மலர்கள்.மல்லி,முல்லை,
செவ் வந்தி,ரோஜா,தாமரை,அரளி,மருவு,மரிகொளுந்து,சம்மங்கி என்று தோரணமாய்,மாலைகளாய்,தொடுத்த பூக்களாய்,உதிரிபூக்களாய் என 
எல்லா வகையிலும் மணம் பரப்ப. சாம்பிராணி,ஊதுபத்தி,சந்தானம் சவ்வாது பன்னீர் என்று வாசனை திரவியங்களும் தம் பங்கை செவ்வனே செய்ய,நெய் தீபம் மணக்கும் குத்துவிளக்கு அம்மையவள் மேனி போல் மிளிர.முருகன் இல்லம் ஆன்மிகம் மணம் கமழும் ஆறு படையப்பனின் மற்றுமொரு படை  வீடானது.
                                     ஆடவர் எல்லாம்,காவி உடுத்தி மாலை அணிந்து சந்தானம் பூசி முருகன் அடிமைகளாய் முழுதாய் உருமாற. எம் குல பெண்டிரும்,மஞ்சள் வண்ணம் கொண்ட மங்கலமான புடவையில் மாரியவள் அடிமை போலே உரு கொண்டோம்.குடும்பத்தின் மூத்த உறுப்பினர் கருப்பையா தாத்தா  முதல் கடை குட்டி சக்திவேல் வரை காத்திருந்த அந்த தருணம் வந்து விட்டது.
                              வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
                                 வீர வேல் குமரனுக்கு அரோகரா!






Sunday, 22 March 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-16

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-16

                 திருவிளையாடற் புராணம் செய்த பரஞ்சோதி மாமுனிவர் ஆற்று சிறப்பை சொல்லும் போது  ஒரு பாடல் வரும்
                               
                               ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
     ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
இறைவியே இந்த இயற்கையாய் அமைந்தவள்.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களை சிவனாரின் கிரியா சக்தியாய்  நின்று புரிபவள்.அது போலே அவளே,ஆறு,குளம்,கிணறு,அருவி,கடல் என பெயர் கொண்டு இந்த பயிர்களை எல்லாம் வளர்ப்பதும் அவளே என்பார்.
                          மேற் கூறிய இந்த நீர் நிலைகள் எல்லாம் அன்னையின் சொருபம் எனில் அதிலும் சிறப்பு கொண்ட புண்ணிய நதி தீர்த்தங்களில் இருந்து வந்து சேர்ந்தது தீர்த்தங்கள் நிரனின் தீர்த்த காவடிக்கு.
                         ஆம் அதில் சேர்க்கப்பட்ட தீர்த்தங்கள்... அருவியாய் அன்னை உருவாகும் சுருளி தீர்த்தம்.ஆறாக  அவள் பிரவாகிக்கும் கொடுமுடி காவிரி தீர்த்தம்,மானசொரோவரில் இருந்து உலகின் எல்லா பாவத்தையும் போக்க புறப்பட்ட கங்கை தீர்த்தம். அழகர் மலியானும்,அவன் மருகன் முருகப் பெருமானும் குடிகொண்ட அழகர் மலை கிணற்று தீர்த்தம்,சைவ,வைணவ ஒற்றுமையை உலகினுக்கு பறை சாற்றி,பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாய் பகவான் ராமரால்,அமைக்கப்பட்ட லிங்கமாய் எம் அப்பன் வீற்று இருக்கும் இராமேஸ்வரம் கடல் தீர்த்தம்.அதையும் தாண்டி வாசுதேவ குடும்பானாம் என்ற சமஸ்க்ரித்த சொல்லுக்கு பொருளாக ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்று முகமதிய நாட்டில் இருந்து வந்து சேர்ந்த மெக்கா  புனித நீர் என்று ஐவகை தீர்த்தங்களும் அம்சமாய் இடம் பிடித்தது, அருமை பாலகன் என் சகோதரி நித்யா பெற்ற செல்வன் நிரனின் காவடியில்.
                           பழநியம்பதி வாழ் சிவகுமரனுக்காய் எடுத்து செல்லும் இந்த காவடியை சுமக்கும் சிவகுமாரின் பெயரனுக்காய்  அந்த காவடியை
 உருவாக்கியது அவன் தாத்தாக்கள். இடும்பன் சுமந்த காவடி போல் ஒரு கம்பில் இருபுறமும் துலாபாரம் போல் சொம்பை கட்டி
உருவாக்கினார்கள்.  நிரனின் தீர்த்த காவடி எடுக்கும் முடிவு பின்னரே உருவானது, ஆகவே அவருக்கான செம்பினை வாங்க நானும் என்னவரும் அந்த வியாழன் அன்று சென்றோம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு.அன்று மீனாட்சியை வழிபட்ட பின்னர்,புதுமண்டபம் சென்று இதை வாங்கிய பின்னே,பைரவரை காண பேராவல் பிறக்க,எழுகடல் தெருவில் உள்ள பைரவரை வணங்க சென்றோம். அங்கே அது ஒரு அஷ்டமி தினம் ஆகையால் பூஜை புனஷ்காரம் என்று எல்லாவற்றையும் ஏற்று திருப்தியாய் தரிசனம் தந்தார் பைரவர். அதன் பின் வடக்கு கோபுர வாசல் வழியே நடந்து வந்தால் அங்கே  மொட்ட கோபுரம் முன்னே முனீஸ்வரர் வழிபாடு முடித்து திரும்பினோம் .
                 ஒரு தெய்வீக நிகழ்வு நடக்கும் தருவாய் ஒரு மிகப்பெரிய குடும்பமே கூடவேண்டும் எனும் போது ,எத்தனை விஷயங்கள் கணக்கில் எடுக்க வேண்டியது உள்ளது.ஊர் கூடினால் தேர் இழுக்கலாம். குடும்பம் கூடினால் சாத்தியமற்ற செயல்களும் சாத்தியப்படும்.அதுவும் நமக்கு முன்னே செல்ல நமது முன்னோரும்,குலதெய்வமும் துணை நிற்கையில் கந்தன் காவடியும் அவன் பாதம் சேர்ந்தது தங்கு தடையின்றி.
                
                அடுத்து பால் காவடிக்கு பால் வேண்டும்.அதுவும் பாலமுருகன் தானே அருள வேண்டும்.சனி கிழமையும் வந்து விட்டது எங்கே அவன் அனுப்பும் செய்தி ,அதற்க்கு முன்னே எடுத்த காவடிக்கு கனவில் வந்து செய்தி சொன்ன கந்தன் இன்னும் வழிவகை  காட்ட வில்லையே என ஏங்கி  நிற்கையில், மூர்த்தி சித்தப்பா தன சிந்தையில் தோன்றி கந்தன் தந்த செய்தி என முத்து என்ற பெயர் கொண்டு யாரேனும் பசு வைத்திருந்தால் அந்த பசு இதற்க்கு ஏற்றது என உரைக்க. அம்மைநகரை அடுத்த செட்டியப்பட்டியில் இருந்தது அந்த பசு. செல்வராஜ் மாமா சென்று விசாரிக்கையில் முத்து என்ற பெண்மணியிடம் ஒரு மாடு இருப்பதாக வந்தது தகவல். அதிலும் ஒரு விசேசம், இன்று முருகன் இல்லம் குடிகொண்டு இருக்கும் இடத்தில் தான் முன்னே அந்த பசு மேய்ந்து கொண்டு இருக்குமாம். முத்துகுமரனின் முடியை குளிர்விக்க நாம் எடுத்து செல்ல இருந்த பால் காவடிக்கு பாலும் வந்து சேரும்.
                 காவடிகள் 17 அதில் கொடுமுடி தீர்த்தகாவடி ஒன்று,நிரனின் தீர்த்த காவடி ஒன்று ,மற்றொன்று ரேவதி அத்தாசியின் சந்தன காவடி.ஆகவே மீதம் இருக்கும் 14 காவடிக்கும் பால் வேண்டும் அதற்காய் இனொரு பசு மாதவன் சித்தப்பாவால் தருவிக்கப்பட்டது. அதன் விசேசம் அந்த பசு கன்று ஈன்றது தை பூசத்தில். கிருபானந்த வாரியார் சொற்களில் சொல்ல வேண்டுமானால், எம் அப்பன் முருகப்பெருமானின் லீலைகள் அளப்பரியது. அவனின் காவடி தின லீலைகளை அடுத்த பதிவில் காண்போம்.
                                  ஆறுமுக வேலனுக்கு அரகரோகர! 
                                  பார்வதியாள் பாலனுக்கு அரகரோகர!


Saturday, 21 March 2015

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-15

                                  மே மாதம் 2014 ஆம் ஆண்டு,24 ஆம் தேதி இனிய காலை பொழுது புலர்ந்தது ,முந்தைய இரவின் பலத்த காற்று,இடி,மின்னல்,மழை இவற்றின் சுவடுகள் சிலவற்றை மட்டும் நமக்கு உணர்த்திக்கொண்டு.முதல் நாள் இயற்க்கை காட்டிய விளையாட்டால் மின்சாரம் சில பிரச்சனைகள் தர,வீட்டின் மேலே போட்டிருந்த கொட்டகை ஆட்டம் காண என சிற்சில பிரச்சனைகள் நடந்தேறியது.முதல் நாள் வரை கடுமையாய் இருந்த அக்னி நட்சத்திர வெயில் அன்று சற்றே தணிந்தது.
                                
                                   ஓரிடத்தில் இருந்து விதையாய் தோன்றிய மரங்கள் பதியம் இடப்பட்டு வெவேறு இடத்தில் வேரோடும் அதுபோலே,ஒரு கூட்டில் ஜனனம் கொண்ட பறவைகள் சிறகு முளைத்து தன் குடும்பம் அமைக்க வெவ்வேறு திசை பறக்கும்.அந்த பறவைகள் எல்லாம் பாசப் பறவைகளாய்,பக்தி பறவைகளாய் மாறி,ஆதாரமாய் நின்ற அம்மைநகர் கூடு தேடி வர ஆரம்பித்தது.முருகன் அருள் கொண்ட இல்லம் கலை கட்ட தொடங்கியது.

                                  காலை பூஜை காவடிக்கு கடவுள் வாழ்த்தோடு சொல்லி ,சிற்றுண்டி முடித்து சீக்கிரமே அமர்ந்தோம் ,காவி உடை தரித்த காவடிகளுக்கு,கலையழகு கொண்ட வண்ணமிகு மயில் தோகை பீலி கொண்டு அலங்கரிக்க.மயூரின் பீலியை வகை வாரியாய் பிரித்தெடுத்து,வள்ளி மணவாளன் பெயர் சொல்லி சுமந்து செல்லும் பால் காவடிக்கு, கணம் சேர்த்தோம்.
                   
                            பழனி செல்லும் முன்னே பிள்ளையார் பட்டி பிள்ளையாரை தரிசிக்கவேண்டும் என்பது ராஜா மாமாவின் கொள்கை.அன்று அதிகாலை அண்ணன் தம்பியாய்  இணைந்து ஆறுமுகன்  சோதரனாம் ஆனைமுகனை வழிபட்டு வந்தார்கள்.
                       
                               கும்பகோனத்தார்  குலதெய்வ வழிபாடு ஒன்று மீதம் இருந்தது. பிறந்ததில் இருந்து எங்கள் அப்பா வீட்டு குலதெய்வம் கோவில் சென்றதில்லை நானும் என் சோதரியும்.எனவே பின் காலை பொழுதினிலேஎன் ராஜேஷுடன் அம்மை நகர் அருகே உள்ள எத்திலோடு  என்னும் ஊரில் குடி கொண்ட என் அப்பன் வீட்டு குலதெய்வம் சீலைகாரியை வழிபட புறப்பட்டோம் சிறுகுழுவாய்.

                                 நிலக்கோட்டை அருகே குடிகொண்ட எம் பூர்வீக முன்னோர்கள் வாழ்ந்த பூமி அது. மூன்று தலைமுறை முன்னால் நேர்ந்த அசம்பாவிதம் ஒன்றின் காரணமாய் குலதெய்வ கோபத்திற்கு ஆளான குலம்  அது.சில மாதம்  முன்னே,கோவிலை எடுப்பிக்க ஆணை வந்தும் ,மெல்லவே கோவில் வேலைகள் முன்னேறும் கோவில் அது. இதை சொல்லும் காரணம், மனிதர்களின் அறியாமை காரணமாய் குலதெய்வமே கோவித்து ,சங்கடங்கள் பலவற்றை சந்தித்து வரும் சந்ததிகள் அங்குண்டு. 
அவனருளாலே அவன் தாழ் வணங்கி என்னும் கூற்றை மெய்பிக்கும் கோவில் அது. கூரை வீட்டில் குடிகொண்ட முன்னோர்கள் நம்மை காக்கும் தெய்வங்களாய் உருமாறி,மாரியம்மாவாய் நிற்கும் என்பதின் வடிவம் அந்த கோவில். முதலி விக்ன விநாயகர் தனி கருவறையில் தனித்திருக்க.சமயபுரம் மாரியும்,சீலைகாரியும் ஒரே சன்னதியில் அமர்ந்திருக்க,முன்னே அவள் அண்ணன் மதுரைவீரன் வீற்றருவாள் பிடித்து நிற்க, அடுத்த சன்னதியில் சோனை சாமி. இந்த வீட்டு கோவிலுக்கு மூன்று வாசல். எப்போதோ வரும் பங்காளிகள் விளக்கேற்றி சாமி கும்பிட்டு செல்வார்கள்.

                               நாங்கள் போன நேரம்,கோவில் எல்லா வழிகளும்,
திறக்கப்பட்டு, கழுவிடப்பட்டு ,பத்தி மனம் கமழ பக்தி மயமாய் இருந்தது. முன்னமே என் சகோதரன் சொல்லி யாரோ வந்து திறந்து வைத்திருந்தார் என நினைத்தோம்.ஆனால் அங்கு சென்ற பின்னே அங்கிருந்த அம்மா,மதுரையில் இருந்து வந்தது என்றும்,நீண்ட வருடங்கள் சென்று இன்று வந்து, சாமிகளுக்கு கைங்கர்யம் செய்ய வந்தது என்றும் அறிந்து அதிசயத்தில் மூழ்கினோம். பூஜை பொருட்கள் ஒவ்வரு தெய்வத்திற்கும் வாங்கி வந்ததை வைத்து,முறையாய் ராஜேஷை கொண்டே தீபாராதனை காண்பிக்க சொன்னார்கள் மாமா.மன நிறைவாய் கும்பிட்டு,இத்தனையும் செய்த அந்த அம்மைக்கும்,பிரசாதம் வைத்து கொடுத்தோம்.
   
                             இதுவரை சென்ற அனைவரின் குலதெய்வ கோவில்களிலும்,
அருள் வாக்கு சொல்ல ஆள் இருந்தது என்று நினைத்திருக்கும் போதே....
குலவை ஒலி  முழங்க சூடம் ஏற்றி காண்பிக்க சொல்லி அந்த அம்மா வடிவில் வந்து சமயபுரத்தாள் வாக்கு தந்தாள்.கலங்காதே மகனே காலம் வரும் உன் உடன் பிறப்பையும் வாழவைப்பேன்,என வாக்கு தந்தாள்.நல்ல ஆசி அதுவும் கோபம் கொண்ட குலதெய்வம்,மனமிரங்கி பொன்னடி மக்களுக்கு வாழ்த்து சொல்ல.கோடையிலும் குளிர்ந்து  எங்கள் மனம்.

                            மதிய உணவுக்குள் திரும்பிவிட்டோம் அம்மை நகர்.காவடியும்,காவி உடை,மயில் பீலி,என பக்குவமாய் பக்தி மயமாய் உருவாகி  உருவேறி கொண்டே இருந்தது. இரவினில் வெகுநேரம் வரை மணி கட்டும் செயலும்,தீய சக்திகள் அண்டாமல் பாது காக்க,
காக்க காக்க கனகவேல் காக்க என்ற மந்திர சொல்லுக்கு இணங்க எலுமிச்சை பழம் கட்டி,பலம் சேர்த்தோம்.
                              கொடுமுடி தீர்த்த காவடி விவரம் ஏற்கனவே அறிந்தோம்.இன்னும் ஒரு பாலகனின் தீர்த்த காவடி உருவானது மகவும் சிறப்பாக பால முருகனுக்காக.ஆம் அது அவ்வைக்கு சுட்ட பழம் தந்த தகப்பன் சாமியின் ஞானம் எல்லாம் பெற்று வந்த அமிர்தமான அன்னையின் மைந்தனுக்காக.நிரனுக்காக அமைந்ததது அருமையான காவடி.அதன் சிறப்பை ,சிறப்பாய்  அடுத்த பதிவில் காண்போம்.


பழனிமலை தண்டாயுத பாணிக்கு அரோகரா.
ஆவினன் குடி சிறக்கும் பாலனுக்கு அரோகரா.


Thursday, 13 November 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-14
                     
                           காவடி நிகழ்வு நடந்தேறி ஆறு மாத காலம் கழிந்தது,சென்ற பதிவிற்கும்,இந்த பதிவிற்கும் இருக்கும் இடைவெளியே மூன்று மாத காலம் ஆனது.ஆனாலும் இந்த அனுபவம் ஆனது பேரின்பம் தரும் ஆன்மீக அனுபவம்,நினைத்த மாத்திரத்தில் அன்று இருந்த அதே உணர்வு இன்றும் நம்மை ஆக்ரமிக்கும்,எனவே காலம் என்பது ஒரு பொருட்டாகாது .இறைவன் சித்தம் இன்று இது இவர் வழி  அரங்கேறும்  எனும் போது  அதன் பகிர்வதே நம் பாக்கியம் ஆகும்.

                          நம் வாழ்வில் நடக்கும் பல ஏற்றதாழ்வுகள்,இன்ப துன்பங்கள் நம்மில் பல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.நிகழ்வுகள் நிகழும் தருவாயில் அந்த அனுபவம் மட்டுமே நம்மை சார்ந்து அதன் உணர்வால் நாம் ஆக்கிரமிக்கப் படுகிறோம்.இவை அனைத்தும் தாண்டி வந்து திரும்பி அந்த நிகழ்வை பார்க்கும் போது ,அவை நிகழ்ந்தேறிய காரணமும்,காரியமும்,நமக்கு புலப்படும்.அந்த உண்மை நிலை நாம் அறிந்துகொள்ளும் வரையில் நாம் அவை தந்த துன்ப நிகழ்வில் உழன்று கொண்டே இருப்போம்.அதற்கான  சான்றாய் நின்று, அன்னையாய் அமர்ந்து நம் குடும்பங்களை காத்து நிற்கும் அற்புத அதிசயம் செண்பகவல்லி தாய் குடிகொண்ட மேலப்பசளையை வணங்க பார்த்திபனூர் கருப்பனிடம் இருந்து உங்களை அழைத்து செல்கிறேன்.

                       மேலப்பசளை,சிவகங்கை சீமையின் அழகிய ஓர் மண் மணம் மாறாத கிராமம்.இங்கே கடல் கடந்து பொருள் ஈட்டி ,அதைகொண்டு தன்  தாய் மண்ணில் மாளிகை  கட்டி மகராசனாய்  எங்கள் பாட்டையா இராமநாதபிள்ளை அவர்கள் ஆட்சி செய்த பூமி.அதன் அருமை பெருமைகளை எழுதும் அறிவும்,அனுபவமும்,எனக்கு வாய்க்கபபடவில்லை.ஆனால் நம் வீட்டு பெரியவர்கள் வாய்வழி வந்த செய்தியே அதன் மகத்துவத்தை உணர்த்தியது.
                           தசரதர்க்கு மஹாலட்சுமியே மருமகளாய் சீதாதேவி கிடைத்தார் போல் ,எங்கள் பாட்டையாவிற்கு கிடைத்த ஸ்ரீதேவி மருமகள் செண்பகவல்லி அன்னை.பிறந்த இடம்,புகுந்த இடம் இரண்டும் பெருமைப்படும் வண்ணம்,வாழ்ந்து மனிதரும் தெய்வமாகலாம் என்னும் உண்மையை உலகினுக்கு எடுத்துரைத்து மெய்யாய் 
அருள்பாலிக்கும் இறைவன் மலரடி செண்பகம் எங்கள் தாய்.
                          இந்த ஒரு பதிவை நான் எழுத ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்தது,பதிவை பூர்த்தி செய்ய இயலவில்லை. எதோ ஒரு காரணம் என்று தோன்றியது.என்னவென்று அறியவில்லை,அறியவும் முற்படவில்லை.ஆணை இன்று கிட்டியது என் மனதிற்கு இதோ இந்த மண்ணில் குடி கொண்ட எங்கள் அம்மாச்சி துணையுடன் தொடர்கிறேன்.
                       பசியோடு வரும் மகவின் பசியாற்றுபவளே அன்னை.அன்றும் பசித்துவந்த காவடி குழுவாம் தம் மக்களுக்கு தம் இருப்பிடத்தில் பசியாற்றினார்கள் செண்பகவல்லி அன்னை.ஆன்மீக தேடலில் அலைந்த தம் மக்களுக்கு,அமுதம் தந்து ஆசியும் தந்து காவடி இனிதே ஈடேற வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
                         பசலை விட்டு அழகிய மீனாட்சி அம்மன் கொலு வீற்றிருக்கும் மதுரை வழியாக அங்கு சிறிது சிரம பரிகாரம் செய்து அம்மைநகர் சென்று அடைந்தோம் அனைவரும்.
                      மாலை நேர  காவடி பூஜை பாட்டு,பஜனைகளுடன், அருளும்,அவன் தன குரலும் ஓங்கி ஒலிக்க பக்தி உணர்வும் ,பந்த உணர்வும் பொங்கி நிற்க தொடர்ந்தது காவடி வினோதங்கள்.
                    பக்தியுடன் நாம் படைத்த பா கேட்ட முருகன் தன் பக்தருக்கு உணவளித்து பெரும் சப்தத்துடன் இடியும் மழையையும் பரிசளித்தான்.
                  அந்த நேரத்தில் ஞாபகம் வந்தது எங்கள் மாமாவிற்கு, காவடி வழிபாட்டின் விசேஷ பூஜைக்காய் வாங்கிவைத்த தாமரை மலர்கள் நாகமலையில் தங்கிவிட்டது என்று. மழையும்,மின்னலும் மிரட்டும் வேளையில் எடுத்துவர தாம் செல்வதாக தம் வயதையும் மீறி மாமா சொல்ல ,அப்படி அனுப்பிவிட மாயவன் மருகனுக்கு மனம் வருமோ? அனுப்பிவிட்டான் தம் பெயர் கொண்ட முருகையாவை நாகமலை சென்று,திரும்பும் பயண திட்டத்தோடு.  உயிர்களுக்கு அளிக்கும் அன்னத்தில் அவர் தம் பெயர் இருக்கும் பட்சத்தில், அவனுக்கான மலர்கள் தாம் வந்து சேராதோ, அதுவும் வந்துவிட்டது மின்னல் ஒளியோடு.
                  
அடுத்த பதிவு அடுத்தடுத்து வர அழகுமயில் வாகனன் அருள் புரிய வேண்டி இதனை பதிவு செய்கிறேன்.
                 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
                 வீர வேல் குமரனுக்கு அரோகரா!

Tuesday, 5 August 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-13

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-13

         காவடிக்கு முன்பு குல தெய்வங்களை வழிபட்டு வந்த விவரங்களை இங்கே பகிர்ந்து கொண்டு இருந்தோம்.மே மாதம் 23 ஆம் தேதி ,சக்கந்தி,குறிச்சி இந்த தலங்களை வழிப்பட்ட பின்னே,உச்சிகால பூஜைக்கு நாங்கள் பார்த்திபனூர் சென்றடைந்தோம்.

     குறிச்சியில்  இருந்து  பரமக்குடி மார்க்கமாய் பார்த்திபனூர் வந்தடைந்தோம்.இங்கு எங்களுக்கு கருப்பனும்,அவர் சோதரி அங்காளஈஸ்வரியும் உச்சிகால பூஜையில் அருள் பாலிக்க திருஉள்ளம் கொண்டிருந்தனர்.ஆம் சுட்டெரிக்கும் சூரியனாய் பகலவன்,பகல் பொழுதின் உச்சத்தில் உயர்ந்திருக்க,நம் வாழ்வின் இருள் நீக்கி ஒளிமயமான வாழ்வளிக்கும் பார்த்திபனூர் கருப்பன் அருள் மிக்க கம்பீரத்துடன் வெட்டருவாள் தாங்கி,பகை விரட்டும் வாள்களே  முறுக்கிய மீசையாய் ஆனது போன்றும் ,பகலவனே பாங்காய் இவர் கண்களே ஆனதுபோன்ற பார்வையும்.எதற்கும் அஞ்சாதே நான் உண்டு உனக்கு என சொல்லும் ஆகிருதியும் கொண்டு சுப்பன் அவன் குலதெய்வம் வீற்றிருந்தது தன்  சந்ததிகளுக்கு அருள்பாலிக்க.

     வீராவேசமாய் வெட்ட வெளியில் கருப்பன் காவல் இருக்க,நட்ட நடு மண்டபத்தில் ஈசன் நாயகி,ஈரேழு உலகின் தாயாகி,கருணையே உருவமாய்,கதிர் பச்சை பட்டுடுத்தி,சூழ வரும் பகை விரட்டி புதல்வர்களை காத்திட கரத்தில் சூலம் ஏந்தி,மங்கையர் குலம்  போற்றும் குங்குமம் தாங்கி முத்து ரத்திணமாம் எங்கள் பாட்டியம்மாள் வழிபட்ட அங்காளஈஸ்வரி அருள் ததும்பும் முகத்துடன்,தன் மைந்தர்கள் முன்னவன் ஆனைமுகன் ஒருபுறமும்,பின்னவன் ஆறுமுகன் ஒருபுறமும் வீற்றிருக்க 
நடுவே குளிர்ந்த முகத்துடனே கொளுவீற்றிருந்தால்.

      பார்த்திபனூர் ஊரின் மையத்தில் இக்கோவில்,இயற்க்கை சூழ் வயல் நடுவே மாவடி கருப்பனை வழிப்பட்ட நாங்கள், மருகும் எண்ணங்களை கொண்ட மனிதர்களின் 
நடுவிருந்து, அவர்களை காக்கும் கருப்பனை காணவந்தோம்.

     கோவில்,பக்திமணம் கமல,எங்கள் மனம் குளிர தன் சந்ததியை வரவேற்க தயாராய் இருந்தது.வாங்கி வந்த பூமாலை சாற்றி,பாமாலை பாடி,ஊதுபத்தி ஏற்றி,ஒளிரும் ஆலம் சுற்றி அம்மை தனை வணங்கினோம்.

   கருப்பன் சன்னதியை நாடி அவன் பாதம் வணங்க முன்னேறினோம்.உச்சிவெயில் பொழுது,சுற்றித்தது சூரியன்,சூடு காட்டியது நிலம்.....அதெற்கெல்லாம் மேல் ஆவேசம் காட்டியது கருப்பு.சூடு தாளாத எங்கள் பாதங்கள் நிழல் கொட்டகையை நாட,அதுவும் கருப்பனை புறம் இருந்து வணங்கும் முறையானது.உக்கரம் கொண்ட சக்கந்தி பிள்ளத்தி கருப்பை அவ்விதம் வணங்கினோம் ,அதேபோல் அன்றைய ஆவேசம் கொண்ட பார்த்திபனூர் கருப்பையும் அவ்விதமே வணங்கும் வகை அமைந்தது.

  ஆனால் கருப்பை தாங்கும் வம்சத்தினர் அவன் முன்னே சுடும் நிலத்தையும் நினையாமல்,அவன் முன்னே மண்டியிட, நம் பாட்டன் வந்து,பாட்டன் மேல் கருப்பன் வர....வெட்டருவாள் தோளில்  தாங்கி,தீவினை பயனை முடிக்கும் வீராவேச பெருமானாய்  ஒருபுறம் உயர்ந்திருக்க!
தன் தனையனுக்காக இரட்டை கங்கணம் கட்டிய மூர்த்தி சித்தப்பா,அதில் ஒன்றை தன் மகனிடம் சமர்ப்பிக்கும் தக்க தருணம் இதுவே என  ஒன்றினை கழட்டி உயர பறந்து ஊர் தேடி விரைந்து வந்த சண்முகத்தின் பெயரனும்,அதே சண்முகத்தின் அப்பனும் ஆன பார்திபனூரானை தன பெயரில் பதித்து வைத்திருக்கும் பிரசன்னாவிற்கு மற்றொரு கருப்பு கட்டிவிட.
ஏற்கெனவே நிமிர்ந்து நின்ற  கருப்பின் கையால் காவடிக்கு என்று விசேசமாய் வடிவம் கொண்ட கரும் கச்சை அவன் இடுப்பில் கட்டப்பட அங்கே வந்திறங்கியது ஆவேச கருப்பு.
     பிரசன்னாவின் மேனியில் ஏறியது கச்சை மட்டும் அன்று.அதுவரை அடக்கமான பிள்ளையாய்,அடியாருக்கு சேவகம் செய்யும் சிறு தொண்டன் போலிருந்த இந்த நெடியவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த ஆவேசம் என்று அரட்டிவிட்டான் அனைவரையும். குரலில் இருந்த உணர்ச்சியும்,உடலில் இருந்த முறுக்கும்,வானம் பிளக்கும் குரல் ஒலியுமாக,நெடிந்துயர்ந்து நின்று சபதம் செய்திட்டான் கருப்பனாக.
தம் வம்சத்தில் இருக்கும் அத்தனை குறைகளையும் களைந்து மகிழ்ச்சி நிலவ வகை செய்வேன் என்று அனைவருக்கும் வரப்பிரசாதம் தந்திட்டான்.
    
நடக்க இருக்கும் காவடியில் சுப்பன் குடும்பம் எடுக்கும் அத்தனை காவடியையும் முருகன் சன்னதி வரை குறைவின்றி எடுத்து செல்லும் அருளையும் புரிந்திட்டான்.நமை காக்கும் குலதெய்வத்தின் முழு வடிவும் அன்று அங்கிருந்த அனைவருக்கும் உணர்த்த்திட்டான்.நாம் எடுக்கும் முயற்சிக்கு இதைவிட நல்ல ஆசி என்னவாக இருக்க முடியும்.அதனால் உக்கிரமான பொழுதையும்,குளிர்விக்க கருப்பன் உண்டு என்ற நம்பிக்கையுடன் மனம் முழுதும் குளிர்ந்த ஆசுவாசம் பெற்று பசலைக்கு புறப்பட்டோம்.

Saturday, 26 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-12

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-12


காவடிக்கு முன்பு நாம் செய்த குலதெய்வ வழிபாட்டை பற்றி பகிர்ந்து கொண்டு இருந்தோம்.குல தெய்வ வழிபாடு என்பது  நமது தமிழர் மரபின் தொன்று தொட்டு வரும் மரபு.நாம் போற்றும் குலதெய்வங்கள் ,பெருந்தெய்வங்களின் அம்சமாகவே இருக்கும்.ஒவ்வரு கோவிலிலும்,சிவாம்சமாக ,சக்தியின் அம்சமாக,பெருமாள் அம்சமாக ,மற்றும் நம் முன்னோரில் ஒரு பெண் தெய்வமாக கட்டாயம் குடியிருப்பார்.

                          கருப்பன் என்பதே பெருமாளின் அம்சமாக காக்கும் தெய்வமாக இருக்கும்,இவர் தம் சகோதரி அங்காலேஸ்வரி சக்தியின் அம்சம்,இருக்குமிடம் கட்டாயம் இருப்பார்.சோனை சாமி,அய்யனார்,முனீஸ்வரர்,பைரவர் ,வீரபத்ரர் இவர்கள் எல்லாம் சிவம்சமாக இருப்பார்கள்.பேச்சியம்மன் என்பது சரஸ்வதி அம்சமாக இருக்கும்,சப்தமாதர்கள் ஒரு பீடத்தில் இருப்பார்கள்.பிள்ளையார்,முருகப்பெருமானும் பரிவார தெய்வங்கள் வரிசையில் இருப்பார்கள்.நம் முன்னோர்கள் குலதெய்வம் என்பதை தமது இருப்பிடத்திற்கு அருகில்,அமைத்து பூஜித்து வந்திருப்பார்கள்.ஆனால் இன்று பொருள் தேடி பல காதம் வந்து விடுகிறோம்.ஆனாலும் வருடத்தில் ஓர் நாள்,அங்கே சென்று பொங்கல் வைத்து ,படைத்து வணங்கினாலும் போதும்.தாய் தன குழந்தைகளை காப்பது போல் காத்து தரும்.ஆகாம விதிப்படி அமைந்த கோவில்களுக்கு ஆறுகால பூஜை அவசியம், ஆனால் நம் குலதெய்வம் வருடத்தில் ஒருநாள் வந்தாலும் போதும் அதையே வருடம் முழுமையும் வந்த பயனை தந்து நம்மை காத்தருளும்.
எனவே குல தெய்வ வழிபாடு என்பது வருடம் ஒருமுறையும்,சுபகாரியங்கள் நடை பெரும் முன்பும் கட்டாயம் செய்யப்பட வேண்டியது.

                        காவடி எனும் மாபெரும் ஆன்மீக பயணத்திற்கு முன்பும் நாம் முதலில் நம் குலதெய்வத்தை வழிபட்டே தொடங்கினோம்.அதன் படி மே மாதம்  23 தேதி பயணம்,சக்குடியை முடித்து குருச்சியை நோக்கி புறப்பட்டது. அதன் நடுவில் ஓர் சுவாரஸ்யமாய் அன்று தான் 10 ஆம் வகுப்பு  பரீட்சை முடிவு.எங்களுடன் ஸ்ரீராமனும் பயணம் செய்ததால் பத்து மணி ஆகும் முன்னே பத்து தரம் வேனுக்குள்ளே நடை பயின்றான் ஸ்ரீராமன். வண்டி மானாமதுரை சென்றடைந்தது,குறுச்சி  செல்லும் திருப்பம் அங்கே சர்ச்சுக்கு அருகே நிறுத்தப்பட்டு சில பொருட்கள் வாங்கப்பட,மணியும் 10 ஐ தாண்ட பசலைகாரர்களின் வாழ்வில் அங்கம் வகித்த அந்த இடத்தில் வெளிப்பட்டது ஸ்ரீராமன் பரீட்சை முடிவு.அவனும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற விவரம் அவனது அரவிந்த் டாடி மூலம் வெளிப்பட, மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் ஆன பயணமாய்,அனைவரிடமும் ஆசியும்,வாழ்த்தும் பெற்று பயணம் தொடர்ந்தான் ஸ்ரீராமன்.

                    குறிச்சி  ,இது எங்கள் முத்தையன் கோச்சடை விட்டு எங்கள் முன்னோருடன் அவர்களுக்காகவே பிடி மண்ணாய் உடன் வந்து வேரூன்றிய இடம்.சிவகங்கை சீமை வானம் பார்த்த பூமியாய் இருப்பினும்,எங்கள் மாவடியான் திருவடியும்,அவனை சுற்றிய வயல்வெளியும் என்றும் பசுமையுடன் தான் இருக்கும்.நெல்,வாழை ,கரும்பு என ஏதாவது ஒரு பயிர் அவரை சுற்றி செழித்து வளைந்து கொண்டு தான் இருக்கும்.
மதுரையை அடையும்  முன்னே அதன் கோபுரங்கள் கட்டியம் கூறும் அம்மையப்பன் இருப்பை.அதேபோல் குறிச்சியை  நெருங்கும் முன்னே எங்கள் மாவடியான் கோபுரமாய் மருத  மரங்கள் நெடிந்துயந்து நிற்கும்.

              கிராமத்து சந்துகளை கடந்து  சிறு கால்வாயை தாண்டி,வயல் வரப்பில் இருக்கும் தென்னை மரங்களை சுற்றிக்கொண்டு ,பொங்கல் பானையுடன் நாங்கள் செல்லும் சுகமே சுகம்.வரப்பில் சென்று அறியாத நாங்களும் ஒரு புது அனுபவமுடனே எங்கள் ஐயனை காணும் பக்தி மிகுந்த ஆவலுடன் செல்வோம்.இரண்டு பெரும் மருத மரங்களும், ஓர்  ஆலமரமும், குடைபோல் கவிழ்ந்திருக்க அதன் இயற்க்கை நிழலில் நடு  நாயகமாய் பீடமாய் எங்கள் குலதெய்வம் மாவடிக்கருப்பன் ,முத்தையன்,மாட மாளிகை இல்லா மன்னவன் வீற்றிருப்பான்.அவருக்கு இடப்புறம் ஆணைமுகனும், அவன் தாய் அங்காலேஸ்வரியும் ,முருகப்பெருமானும் கொலு இருக்க.
அவர்களுக்கு நேரெதிர் இடப்புறமாய், வீரபத்திரர்,இருளப்பசாமி,பதினெட்டாம் படி கருப்பு,பேச்சியம்மன்,ஏழு கன்னிமார் என அருள் செய்கின்றனர். மாவடியானுக்கே எதிரே சோனை சாமியும் பலிபீடமும் இருக்கும். மாவடியானுக்கு நேரெதிர் வலது புறம் கருப்பாயி அம்மன்,ராக்காயி அம்மன்,மற்றும் இருளாயி அம்மன் சன்னத்திகள் அமைந்திருக்கும்.

             வழக்கமாக நாங்கள் செல்லும் நேரத்திற்கு பின்னே அங்கு சென்றடைய,அன்று எங்கள் குலதெய்வம் எங்களுக்கு அருள் பாலிக்க,ஆசி கூற பூஜை ஏற்றுகொள்ள தயார் என இருந்தார்.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஷ்வாமித்திரர் போல் எங்கள் குடும்பத்தினரிடம் சபாஷ் பெற்றார் எங்கள் பூசாரி.அவரும் அன்றொருநாள் மட்டும் தன உணவகத்தை மறந்து மாவடியான் பூசாரியாக முழுதாய் ஈடுபட்டு இருந்தார்.
அவரையே மாற்றிய அற்புதம் கந்தனை தவிர யாரை சாரும்?

            காலை உணவை மாவடியான் சன்னதியில் பசியாறி,பின்னர் மனமும் ஆறினோம். ஆம் அங்கே காவடிக்கான சிகப்பில் பச்சை இட்ட கச்சையை வைத்து வணங்கினோம். எங்கள்  குலதெய்வமதை மனமார வழிபட,அங்கே பெரியத்தான் மீதிறங்கி இந்த காவடி சிறக்க உடன் வந்து,தக்க துணை தந்து அனைவர் குறை தீர்ப்பேன் என சூளுரைத்தது மாவடிகருப்பு. அதன் பின்னே,முருகனுக்கு எடுக்கும் காவடிக்கு  அச்சாரமாய் முத்தையன் சன்னதியில் ஸ்ரீராமனுக்கு கச்சை கட்டி அவனை கைதூக்கி ஆடவைத்து முதல் அடி எடுக்க வைத்தார்கள் அவனுடைய மூர்த்தி தாத்தா.அது பார்த்திபனூர் கருப்பன்,மாவடிகருப்பனுக்கு கட்டிய கச்சை ஆனது.

           குளிர்ச்சி மிக்க குறிச்சி திட்டை விட்டு,மிகுந்த குளிர்ந்த  மனதுடன் பார்த்திபனூர் நோக்கி பயணப்பட்டோம்.





Tuesday, 22 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-11

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-11

              சைவ சித்தாந்தம் வழி நின்று வினை மற்றும் அதன் பயன் ,அவை செயலாற்றும் விதம் குறித்த சிந்தனை சென்ற பகிர்வுகளில் பகிரப்பட்டது.மேலும் சில வற்றை உங்களுடன்.

                       நம் செய்த  வினையின் பயன் நம்மை கட்டாயம்வந்தடையும்.
பரந்தாமனே பக்க துணையாக இருந்த போதும் வனவாசமும்,அன்ஞாத 
வாசமும் பாண்டவர்க்கு தவிர்க்க முடியாததாக போனது.இதன் மூலம் புராணங்கள் உணர்த்துவது செய்த வினையின் பயன் அவரவரை கட்டாயம் வந்து சேரும் என்பதே.

                         பாண்டவர் தம் செய்கர்மா முடிந்த பின்னே அதே பரந்தாமன் தானே தூது சென்று சமாதானம் சாத்தியமாகாமல் அவர்களை
தர்மயுத்தம் செய்வித்து அவர்களை காத்து தர்மத்தை வெல்லசெய்தான்.
அதுவும் போர்க்களத்தில் துவண்டு நின்ற பார்த்தன்,உபதேசம் பெற்ற பின்னே "எல்லாமே நீயே கிருஷ்ணா"-  என அவன் பாதம் பணிந்து நின்ற பின்னே.
                   இந்த இதிகாசங்கள் நமக்கு உணர்த்துவது   யாது....சற்றே சிந்தித்தால் விளங்கும் நமக்கு உண்மை.நாம் செய்யும் செயல்கள் யாவிலும் உண்மையும்,நேர்மையும்,பிறர் மனம் நோகா தன்மையும்,நமது செய்கர்மங்களுக்கு நாமே பொறுப்பு எனும் அறிவும் இருந்தால் போதும்.
 அதற்கான பயன் நல்வினையாக நமை வந்து சாரும்.

        நல்லவற்றையே சிந்தித்து,நல்லவற்றையே பேசி,நற்செயல்களையே செய்தோம் ஆனால் நமை சுற்றி நல்லனவே நடக்கும்.ஒரு மனிதன் தன்னையே சார்ந்து அதிக நேரம் நல்ல எண்ணங்களை  [positive thought ] கொண்டிருக்க இயலாது ,ஏனெனில் நாம் மனித இனம்,சஞ்சலம் என்பது நமது உடன் பிறந்தது,எனவே மற்றொரு அதீத சக்தி மீது நாம் நம்பிக்கை  வைக்கின்றோம்.அதுவே நமது மொழியில் சிவம்,சக்தி ,முருகன் என இன்ன பிற தெய்வங்கள்.இந்த இறை நம்பிக்கை நம்மை பலப்படுத்தும் நமது நல்ல எண்ணங்களை செயலாக்கி தரும். அவ்வாறு தாம் செய்து தருவோம் என நமக்கு ஆறுதல் தர சில சமிக்கைகள் அவர்களிடம் இருந்து தேவைபடுகின்றன.அவற்றை நமக்கு தருவது நம் வழிபாடு.அதன் வழி சன்னதம் வந்து சொல்வதும்,நம் உள்ளத்தினின்று உணர்த்துவதும் ,நாம் செய்யும் செயல்களை தடையின்றி செலுத்தி தருவதும்,நம்தெய்வம்  நமக்கு தக்க துணை நிற்பேன் என சொல்லால் சொல்லாமல் நமக்கு உரைக்கும் செய்தி.

                            நமது தெய்வநம்பிக்கை நமக்கு கிடைத்த வரப்ரசாதம்.நமது குடும்பங்கள் ஒன்றிணைந்து வருடம் தோறும் பழனி பாதயாத்திரை எனும் ஆன்மீக பயணத்துடன் தொடங்குகிறது.இந்த பயணம் அந்த வருடம் முழுமைக்கும் நமக்கு உற்சாகம் தருகிறது.அதன் வழியில் இந்த காவடி எனும் மாபெரும் நிகழ்வு ,நமது வாழ்க்கை பயணத்திற்கு உற்சாகம் தருகிறது.ஒரு குடும்பமாய் A S PILLAI FAMILY என்ற ஆலமரத்தின் அடியில் இளைப்பாறும் நாம் ,என்றும் அவர்களது அருள் வட்டத்துள்
இருகின்றோம் என்பதை நமது பாட்டனும்,முன்னோரும்,
குலதெய்வங்களும்,பெருந்தெய்வங்களும் நமக்கு சில சமின்கைகள் மற்றும் அற்புதங்கள் மூலம் நமக்கு உணர்த்தின இக்காவடியில் அவை இதோ.

                        காவடி எடுத்து செலுத்தி இருமாதம் கடந்த பின்னே மெல்லவே அரங்கேறுகிறது அதன் சிறப்பினை பற்றிய தொகுப்பு. ஆனபோதும் அதன் உணர்வினில்,அதனை வெளிப்படுத்தும் விதத்தினில் அன்று  இருந்த அதே உணர்வு மீண்டும் சிலிர்த்து எழுகிறது.இதுதான் பேரின்பம் என்பதோ? காவடி அம்மைநகர் வீதி வலம்  வந்தது மேமாதம் 25 ஆம் தேதி.அதன் முன்னே குலதெய்வம் வழிபாடு செய்ய நாங்கள் புறப்பட்டது 

                  23 ஆம் தேதி.அம்மைநகர் இருந்து புறப்பட்ட வாகனம் நாகமலை வந்தது.அங்கு அன்பு தம்பி ப்ரசன்னா ஆயிரம் மையில்களுக்கு அப்பால் இருந்து கடல் கடந்து பறந்து வந்து கண்களில் பயணக்களைப்பு இருந்தபோதும்,அன்பு சொந்தங்களை,அவனை வளர்த்த பந்தங்களை காண ஆவல் கொண்டு,அடுத்த தலைமுறை வாரிசாக ஆன்மீக பயணத்தில் காவடி என்னும் அற்புத நிகழ்வில் பங்குபெற,தாய்நாடு வந்த சூட்டோடு தன் குலம் காக்கும்  கருப்பனை வழிபட  எங்களுடன் இணைந்து கொண்டது.எங்களை சுமந்து கொண்ட வாகனம் சிவகங்கை சீமை நோக்கி சென்றது.

                  முதல் பயணமாய் அபினவ் கார்த்தியை இவ்வுலகம் காண அருள் புரிந்த அவர்களின் குலதெய்வம் வீற்றிருக்கும் சக்குடி நோக்கி சென்றோம். சிவகங்கை சீமை வானம் பார்த்த பூமி,வறண்ட மணற்பரப்பும்,நிறைந்த சீமை கருவையும்,ஆங்காங்கே தண்ணீரும் அதனால் வளர்ந்த சில மரங்களுமாய் காட்சி தரும்.அன்று நாங்கள் சென்ற சக்குடியும் அதன் ஒரு பகுதிதான்.இங்கு கொலுவீற்றிருக்கும் நளினமான குணம் கொண்ட எங்கள் அத்தை வணங்கும் தெய்வமது மூன்று இடத்தில் அதே ஊரில் சில தூரம் இடைவெளியில் அமைந்திருந்தது.

                  முதலில் நாங்கள் அந்த கிராமத்தின் உள்ளே தெருக்களின் மத்தியில்  அமைந்திருந்த சாந்தாயி அம்மன் என்ற பெண் தெய்வம்.கருணை ததும்பும் வடிவுடன் கிராமத்து மணம்  மாறாமல் அமைந்த திருக்கோவில். அடுத்து சென்றது வயல் சூழ்ந்த இடத்தில் வரப்புகளின் நடுவே சிறு கட்டிடத்தில் குடி கொண்ட,தீப்பாய்ந்த அம்மன் என்ற பெயர் கொண்ட பாக்கியத்து அம்மன்.அந்த கோவில் முதலில் பீடமாய் இருந்து பின்னர் சிலை அமைத்து உள்ளனர்.வரும் தீமை யாதகினும் அதை  தன்  சுட்டு விழியால் மாய்த்து தன பக்தர்க்கு தக்க துணை செய்திடுவேன் என சூளுரைத்தது இந்த அம்மன்.அங்கிருந்து சற்று தொலைவில் பிலாவடி கருப்பு கோவில்.

                   பில்லத்தி  கருப்பு கோவில் ,இது எங்களுக்கு ஏற்படுத்தவிருந்த பிரமிப்பு அறியாமல் உட்புகுந்தோம்.இந்த அற்புத கோவில் அமைந்திருப்பது ஊருக்கு சற்றே வெளிப்புறத்தில் உயர்ந்த கண்மாய் கரையில்.கோவிலின் முகப்பு கண்மாயை நோக்கி இருக்க,பாதை நோக்கி இருப்பது பின்புற வாசல்.அதனை சுற்றிக்கொண்டு கண்மாய் கரையில் அமர்ந்து ஆட்சி புரியும் பில்லத்தி  கருப்பனை வழிபட கோவில் உட்புகுந்தோம். முதலில் வாசலுக்கு நேரே  இருக்கும் சன்னதி பில்லத்தி  கருப்பன்.ஆனால் அங்கே கருப்பன் நமக்கு நேரெதிர் கட்சி தராமல் இடப்புறம் சன்னதியில் வீற்றிருக்க அவரது தங்கையாம் ராக்காயி அம்மன்  அவருக்கு எதிர்புறம் நமக்கு வலப்புறம் அமர்ந்து அருள் புரிந்தார்.இங்கு உள்ள கருப்பன் அவ்வளவு சக்தி மிக்கவன் நேரெதிர் தரிசிக்க இயலா உக்கிரம் கொண்டவன்.அதனாலே இந்த சன்னதிகளின் அமைப்பு இவ்வாறு உள்ளது. இடப்புறமும்,வலப்புறமும் இவர்கள் வீற்றிருக்க,கோவில் வாசலின் நேரே இருப்பது சன்னதி வாசல்,அதன் நேரே மற்றொரு வாசல் உட்புறம் நோக்கி இருக்க,அதன் வழியாய் நமக்கு காட்சி தந்தவர் ஐயனும்,சாஸ்தாவும்.

                           பில்லத்தி  கருப்பன் சன்னதிக்கு புறம் சென்று வலம்  வந்தால் ஐயனை காணலாம், அங்கே அருமையான தேஜசுடன் ஐயனும் அவருடன் பூர்ணகலா தேவி,சந்திரகலா தேவிஅருள்பாலித்தனர்.அவர்களுடனே அங்கே சாஸ்தாவும் அமர்ந்து தன அருள் நோக்கை தருகின்றார்.

                              அங்கே பரிவார தெய்வங்களாக வீற்றிருந்தார் எங்கள் முத்தையா.அழகிய குதிரை மீது அழகனாய்  ஆக்ரோசமாய் எங்கள் முத்தையன்.நின்ற திருமேனியாய் கோச்சடையில் கண்டுள்ளோம்,
அருஉருவமாய் குறுச்சியில் கொண்டுள்ளோம் ஆனால் வெட்டருவாள் தாங்கி குதிரைமீது பாய்ந்துவரும் கோச்சடையானாய் மாவடி கருப்பனாய்  பில்லத்தி  கருப்பன் கோவிலில் கண்டு சிலிர்த்தோம்.

                      இன்னும் இக்கோவில் இருக்கும் பரிவார தெய்வங்கள் ஒவ்வரு கிராமத்திலும் உள்ள காக்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கூடியிருந்தார் போல் இருந்தது.
     
                    அங்கே இருந்த ஒரு மரம் மற்றுமொரு அதிசயம்.திருகுவாச்சி என்ற பெயர்கொண்ட இந்த கோவிலின் தலமரம்.அதில் மணியை கட்டி இருந்தனர் அதனை மூடி  மறைத்து மரம் வளர்கிறது.பிரார்த்தனை மணி உள்ளே செல்லும் போது  அவர்கள் பிரார்த்தனை நிறைவேறும் நம்பிக்கை. 
              
                  இப்படி அதிசம் அநேகம் நிறைந்த அத்தனை தெய்வங்களும் கூடி அருள் பாலிக்கும் பில்லத்தி கருப்பனை வழிபட்டு இந்த காவடி முருகன் திருவடி அடைய அருள் புரிய வேண்டி வணங்கி புறப்பட்டோம் குறிச்சியை  நோக்கி.






Wednesday, 9 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-10

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-10

நம் முன்னோர்கள்,குலதெய்வங்களை வணங்கி அவர்கள் துணை கொண்டு முருகப்பெருமான் பாதங்களை பற்றுவோம்.

சென்ற இருபதிவிலும் சைவ சித்தாந்தம் வழி நின்று விணை    மற்றும் விணைப்பயனை பற்றி பார்த்தோம் மேலும் சில சிந்தனைகள் .

விணை  மூன்று வகையாய் நின்று  புரியும் என பார்த்தோம்.
1.ஆகாமியம்,2.சங்சிதம் மற்றும் 3. ப்ராப்தம்.

 இன்று இதில் மூன்றாம் வகை ப்ரப்தம் பற்றிய மேலும் சில விவரங்கள்.

ப்ராப்தம்-நாம் செய்த விணை யினை  அனுபவிக்கும் பகுதி.இதில் நல்லதும் கெட்டதும்  அடக்கம்.இந்த ப்ராப்தம் மூன்று வகையில் நம்மை வந்து அடையும்.அவை...

1.ஆதி ஆன்மிகம்,ஆதி பௌதீகம்,ஆதி தைவீகம்.

ஆதி ஆன்மிகம்-
நாம் செய்த விணை யின் பயன் பிற உயிர்கள் மூலம் நமை வந்து அடைவது. பிற உயிகள் என்பது ஓர் அறிவு முதல் ஆறு அறிவு பிராணியான மனிதன் வரை எத்தன மூலமாகவும் வந்து நம்மை அடையும் .இதிலும் துன்பம்,இன்பம் இரண்டும் உண்டு.

ஆதி பௌதீகம்
நாம் செய்த விணையின் பயன் ஜடப்பொருள் மூலம் வந்து அடையும்.ஜடப்பொருள் என்பது இந்த உலகினையும் ,அதில் உள்ள உயிரற்ற பொருட்களையும் சாரும்.
ஒரு ஜடப்பொருளை நாம் அடையும் போது மகிழ்ச்சியும்,அது கிடைக்காவிடின் அல்லது தொலைந்த பின் வரும் துன்பமும் இதில் அடங்கும்.

ஆதி தைவீகம் 
இது முற்றிலும் இறைவனால் நமக்கு அளிக்கப்படுவது.பிறப்பு,இறப்பு இந்த இரண்டும் இறைவனால் நமக்கு அளிக்கப்படும் விணைப்பயன் .
இறைவன் ஐந்தொழில் செய்வதாக சித்தாந்தம் விவரிக்கிறது.

படைத்தல்,காத்தல்,அழித்தல் ,மறைத்தல்,அருள் செய்தல்- இவையும் நம் விணையை பொறுத்தே அமையும்.

நியதி; அவரவர் வினை  அவரவர்க்கே வரும் என்பதும்.அவர் செய்த பாவ,புண்ணியப் படியே - நற்குடியில்,நற் சார்பில் அவரை பிறக்க செய்வித்து பலன் தரும் என்பதும் நியதி.

மேற்கண்ட நியதி படி நாம் நோக்கின்... இறைவன் நமை நற்குடியில் பிறப்பித்து,நற் சார்பில் வாழ்வித்து நமக்கு நல்  வழியும் கட்டுகிறார் என்பதில் ஐயம் இல்லை.
நாம் செய்த சில தீவிணையின் பயனாய் இன்னல்கள் வந்த போதும்,அவற்றை கடக்க நம் நல்விணை  பயனாய் நல்லதொரு குடுபத்தை அளித்துள்ளான்.இறை வழிபாடு என்னும் ஒப்பற்ற வரத்தை அருளியுள்ளான்.இருளில் தவிக்கையில் ஓர் கீற்று ஒளி தென்பட்டாலும் அதனை கூர்ந்து நோக்கி அதன் வழி சென்று வெளிச்சத்தை அடைவது மனித இயல்பு.அதே போல் நமக்கு கிடைத்த இந்த a s pillai குடும்பத்தையும்,
அதன் வழியே பக்தி மார்கத்தையும், சிக்கென பிடித்தால் சிக்கல்களை களையலாம்.

"தெய்வம் என்றால் அது தெய்வம்,வெறும் சிலை என்றால் அது சிலை தான்".
கவிஞரின் வாக்கு.

நம் நம்பிக்கை தான் வெற்றியை தரும்.நமக்கு நம்பிக்கை வைக்க,அது எல்லாவற்றையும் தீர்க்கும் என்ற உறுதியை தந்து நம்மை இட்டு செல்ல அந்த இறைநம்பிக்கையால் மட்டுமே இயலும்.எனக்கு மேல் இருக்கும் சக்தி என்னை வழிநடத்தும் என்ற உறுதியை இறைவன் மட்டுமே தர இயலும்.
என் இறைவனை நான் சிவமாய் பார்ப்பேன்,உங்கள்  இறைவனை சக்தியாய்,விநாயகனாய் ,முருகனாய் ,பெருமாளாய்,அவரவர் விருப்பபடி வணங்கலாம்.நம் கண் முன் இருக்கும் சிலை வடிவம் எவ்வுருவாய் இருப்பினும் நம் வழிபாட்டு தெய்வமாய் அதை வணங்கலாம்.

அதன்படி மே 4 ஆம் தேதி கட்டப்பட்ட மூத்த கங்கணம் ,எந்த விழாவாக ஆனாலும் முன் நின்று சாரதியாய் அதை வழி நடத்தி செல்லும் எங்கள் மாமாவிற்கு,வயது எழுபதை கடந்த பின்னும் இளமை கூட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு,அவர்களுக்கும் சவாலாய் முன்னே செல்லும் இந்த சிவனடியார்க்கு ,அவர் விருப்பபடி கட்டப்பட்ட கங்கணம். அவர்களின் மூத்த தலைமுறை என்ற முறைப்படி அவர்களின் சிறிய தந்தையார் கங்கணம் கட்ட முன்னே வந்து யார் கட்ட வேண்டும் உனக்கு என கேள்வி எழுப்ப,அந்த அங்காலேஸ்வரி வந்தாலும் சரி என் அன்னை வந்தாலும் சரி எனக் கூற,எங்கள் முத்துக்குமார் தாத்தாவின் வடிவில் அகிலமெல்லாம் ஈன்றடுத்த அன்னை பராசக்தி வந்து வாழ்த்தி கட்டியது கங்கணம்.

அன்றைய நிலையில் 11 கங்கணங்கள் அம்மை நகரில் முருகன் இல்லத்தில் கட்டப்பட, 
அதே பொழுதில் இன்னும் மூவருக்கு கட்டப்பட்டது கங்கணம் அன்பே சிவம் என்று பெயர் தாங்கி நிற்கும்  அன்னை இல்லத்தில்.சிவனும்,சக்தியும் இணைந்து உலகை செலுத்துவது போல், இவர்களின் அன்பான ஆசியினால் வளர்கிறது சொந்தங்கள்.நம் மூத்த தலைமுறை பொக்கிசங்கள் கருப்பையா தாத்தாவும்,கோமதி அப்பத்தாவும்.

நம் குடும்பத்தின் மூத்த தலைமுறை தம்பதிகள் அம்சமுடன்,அன்புடன் அம்மை அப்பன் வடிவாய் நின்று இந்த காவடி இச்சமயம் எடுப்பிக்க மூலமாய் கரு விதைத்து,அதை கொண்டு செலுத்த துணையும் புரிந்து,முழுதாய் தங்களை ஈடுபடுத்தினர் காவடியில்.

பாட்டனை தாங்கி,கருப்பனையும்  தாங்கி ,நிற்கும் சிவக்குமார் சித்தப்பாவின் வடிவில் தான் நமக்கு முருகா தாத்தா நமக்கு பரிச்சயம்.அவர்களை நேரில் காணாத பெயரன் பேத்திகளுக்கு,முருகா தாத்தா என்ற ஒரு சக்தியை மனதில் பதிய வைத்த பெருமை சிவகுமார் சித்தப்பாவையே சேரும்.அவர்களுக்கு கட்டப்பட்டது கங்கணம் அவர்களின் குடும்ப ஆணி வேறாய் திகழும் அவர்களின் அன்னையின் கரத்தினால்.

அடுத்து பஞ்ச பாண்டவராய் ,அம்மை நகர் வாரிசுகள் காவடி எடுக்க, அதற்கென இந்த நகுல,சகாதேவனாய் பாலாஜியும்,செந்திலும் கங்கணம் கட்டி கொண்டனர்.

மொத்தம் கட்டப்பட்ட கங்கணம் எண்ணிக்கை 14 என்று இருந்தது....ஆனாலும் அனைவருக்கும் மனதில் வருடியது ஒற்றை இலக்கத்தில் ஈன் இல்லை என்று.கங்கணம் கட்டும் போதே மூர்த்தி சித்தப்பா ,அரவிந்த் அத்தானிடம் ,அபினவ் கை காட்டினால் நீயும் எடுக்கிறாய் காவடி என சொல்ல அத்தானிடம் மௌனம்.சில நேரம் நம் மனதின் உள்ளுணர்வு நமக்கு கட்டளை இட்டால் தான் செய்வோம்.அதன் படி முருகன் அவர்களுக்கும் உணர்த்திட்டான்,அத்தானும் உணர்ந்து கட்டி கொண்டனர் கங்கணத்தை இரண்டு நாள் சென்று.

காவடி நினைத்து பார்த்து மனம் நிறைவடையும் ஒரு ஆன்மீக பயணமானது.மீண்டும் பயணிப்போம்...

Thursday, 3 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-9

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-9

               ஒவ்வொரு பதிவும் எழுத ஆரம்பிக்கும் பொழுதும் எனக்கு தோன்றும். குறி சொல்லும் குறத்திகள் தங்கள் தெய்வமாகிய முருகப் பெருமானையும், தாய் ஜெக்கம்மாவைவும் துணை கொண்டு வணங்கி தன் வாக்கில் அவர்கள் வந்து குடியேறி நல்ல சொல்லை சொல்லி அருள் புரிய வேண்டுவார்கள்.அது போல நானும் எழுதும் எழுத்துக்கள் சரியானதாக அமைய என் அம்மையப்பனை மனதில் நினைத்தே சொல்லில் வடிக்கின்றேன்.

             சென்ற பதிவில் விணை  மற்றும் வினை பயனை பற்றி சில வற்றை பகிர்ந்தேன்,
மேலும் சில விவரங்கள் சைவ சித்தாந்தத்தில் இருந்து.
நாம் செய்யும் செயல்கள்,மனதில் நினைப்பது,சொல்லாய் உதிர்ப்பது இவையே விணையாக ,கர்மாவாக மாறுகிறது.இதனை மூன்று நிலைகளில் வகைப்படுத்துகிறது  சித்தாந்தம்.
1.ஆகாமியம்,2.சஞ்சிதம்,3.ப்ராப்தம்.

ஆகாமியம் ;
இது நாம் அன்றாடம் செய்யும் விணை -நல்விணை ,தீவிணை  இரண்டுமே.இதன் அடிப்படையில் தான் நம் விதி அமைகிறது.

சஞ்சிதம்;
நாம் செய்த விணையானது ,செய்து முடித்த உடன்...தொல்வினையாக மாறி சூட்சமமாய் சஞ்சரித்து கொண்டே இருக்கும்.இந்த சஞ்சாரம் காலம் எதுவரை என்றால் அதனை நாம் அனுபவிக்கும் வரை.இது நொடி பொழுதில் தொடங்கி .....ஜென்மங்கள் வரையும் தொடரும்.

ப்ராப்தம்;
இது சூட்சமமான சஞ்சித விணை  பயனாய் வருவது. இங்கு தான் நமது நல்விணை -புண்ணியமாய் மாறி இன்பத்தையும், தீய வினை பாவமாய் மாறி துன்பத்தையும் தருகிறது.

              துன்பம் தரும் தீவினையின் பயனை குறைக்க வழி வேண்டுமே ?அது தான் வழிபாடு. நம்முடைய இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து ,நம்பிக்கையுடன் வழிபாடு செய்வதே பக்தி.

           சிறுபிள்ளையாக கைகூப்ப தெரிந்து ,சொற்கள் மழலையாக வரும் போது கைகூப்பி கடவுள் முன் நிற்கும் குழந்தைக்கு, நம் பெரியவர்கள் "எனக்கு நல்ல புத்தியை கொடு ,நல்ல படிப்பை கொடு " என்று தான் சொல்லி சொல்லித்தருகிறார்கள்.இதே வேண்டுதலை எப்போதும் தொடர்ந்தால் இன்னல்கள் ஏன் வருகிறது.

                        கூட்டு பிரார்த்தனைக்கு வலிமை அதிகம், நமக்காக வேண்டாமல் அடுத்தவர் நலனுக்கு வேண்டும் போது அதன் வலிமை இன்னும் அதிகரிக்கும்.ஒரு பொழுது செய்யும் பிரார்த்தனைக்கே இவ்வளவு வலிமை எனில்....கங்கணம் எனும் மங்கள நாண் கட்டி இருபத்துஒரு நாட்கள் சிந்தை முழுதும் மங்களம் நிரப்பி,அனைவர் குடிகளும் சிறக்க,
குறைகள் களைய கந்தனிடம் வேண்டிய அந்த பிரார்த்தனை எத்தனை சிறப்புற்றது.

           இந்த காவடி திருவிழா சிறப்பாக நடந்தேறும் என்று அன்றே சூளுரைக்கப்பட்டது. ஆறுபேருக்கு கங்கணம் கட்டிய பின் அடுத்தது...எங்கள் குல தெய்வமதை  சுமந்து நின்றாடும் பெரியத்தானுக்கு.அன்று கட்டப்பட்ட அந்த கங்கணம் எங்கள் பெரிய மாமாவின் மகனுக்கு அல்லமாவடியானுக்கு.என்றும் வழி நடத்தும்  மருதமரத்து அரசன் அன்று உடன் வந்து காவடியை முருகன் சேவடியில் சமர்பிக்க உற்ற துணை இருப்பதற்கு சத்திய வாக்கு தந்தான்.

          அம்மை நகரில்,நம் குடும்பம் காணும் நான்காவது காவடி திருவிழா இது.சிலவற்றை சிலர் தான் வழிநடத்த விதித்திருப்பான் வேலவன்.அது போல் காவடியை கட்டுமிடம் என்றெ  என்றும் முருகன் இல்லம் தான்.தலைமுறைகள் கடந்தாலும் அதன் வாரிசுகள் வசம் தான் ஒப்புவித்தான் அந்த புண்ணிய பொறுப்பை.தீர்க்க தர்சி நம் பாட்டன் ,அதில் ஐயம் இல்லை,அதனால் தான் தம் வம்சத்தில் இருவருக்கு குல தெய்வம் பெயரிட்டார்கள்
.காவடி பொறுப்பையும்  கருப்பையாக்களின் தலைமையில் அமைத்தார்கள்.

உருவானது காவடி-மூத்த கருப்பு வெளியிட்டகாவடி எடுப்பித்தல் என்ற  விருப்ப படி.

செயலானது காவடி-இளைய கருப்பு அதில் காட்டிய ஸ்ரத்தையினால்.
அம்மைநகரில்  அவர்களை மீண்டும் அமர்த்தி ஆன்மிகம் நம்வீட்டில் தழைக்க வைத்தது முருகன் அருள்.

                இந்த இளைய கருப்பையா விற்கு கட்டப்பட்டது கங்கணம்.ஒருவர்க்கு கட்டினால் அது நால்வர்க்கு கட்டியதாய்  ஆகுமோ?ஆகும். சித்தப்பா கட்டி கொண்டது இரண்டு கங்கணங்கள். 

                     தனக்கு ஒன்று,பிரசன்னாவிற்கு ஒன்று என. ஆனால் கட்டும் போது -
கட்டியது இராமநாதபிள்ளை [முத்துகுமார் தாத்தா வடிவில்]கட்டப்பட்டது-சுப்பையா  பிள்ளைக்கு.
            
            பிரசன்னாவிற்கு கட்டியது ஒன்று-அது தம்பிக்கு மட்டுமா இல்லை அவன் வடிவில் நின்ற பார்த்திபனூர் கருப்பனுக்கு.தம் பிள்ளைகளை எல்லாம் வழி நடத்தி காவடியை நல்முறையில் செலுத்த வேண்டிகொண்டனர் எங்கள் அத்தைமார்.

                       அன்றே சத்தியம் செய்தார்கள் நம் பாட்டன் பிரச்சனைகள் ஒவ்வன்றாய் சரி செய்யப்படும் என்று- அதன் படி கங்கணம் கட்டிய 12 ஆம் நாள் நல்ல முடிவை எட்டியது ஒரு பிரச்சனை.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை ! அந்த துணை என்றும் கைவிடாது!

மீண்டும் அடுத்த பதிவில்.




Wednesday, 2 July 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-8

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-8

                  காவடியை பற்றிய நினைவுகளை எழுதுவதற்கே கூட நேரம் கூடி வர வேண்டியுள்ளது.ஒருமித்த சிந்தையுடன்,எந்த தடைகளும் இன்றி இதனை எழுதவே இத்தனை காலம் பிடிக்கின்றது.நடந்தவற்றை எழுதுவதற்கே இப்படி என்றால்,நடந்த செயல் தடையின்றி நடந்ததற்கு இறைவன் அருள் எவ்வளவு இருக்க வேண்டும்.

                  இறைவன் மிகவும் கருணை வடிவானவன்,நமக்கு உதவுவதே அவரின் தலையாய கடமை.அப்படி இருக்கையில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை? இந்த எண்ணங்கள் நம் யாவருக்கும் தோன்றும்.

                  அதற்கும் சைவ சித்தாந்தம் பதில் கூறுகிறது. உயிர்களாகிய நம்மை உய்விக்க ,முக்தியை தரவே இறைவன் எப்போதும் முயல்கிறான்.நாம் செய்த விணை....நல்விணை,தீவிணை இரண்டும் நம்மை வந்து சேரும்.இந்த விணை பயன் எப்போது வந்து சேரும்....காலம் பார்த்து நம்மை வந்தடையும். மனதால்,செயலால்,சொல்லால் எவ்விதம் நாம் செய்திருந்தாலும்,அவ்விதமே நம்மை வந்து அடையும்.

                  நல்விணை பயன்கள் நமை வந்து அடையும் போது மிகவும் மகிழ்வோம்,தீவிணை பயன் நமை வந்து அடையும் போது துவண்டு விடுவோம். நாம் அனுபவிக்கும் அத்தனைக்கும் அந்த,அந்த  தனி உயிர் மட்டுமே காரணம்.முதலில் இதனை மனதார ஒத்துக்கொள்ளும் மனம் வேண்டும் நம்மிடம்.அப்போதுதான் அதன் பிரயச்சித்தம் செய்ய இயலும்.

                நான் செய்த விணை தான் என்னை வந்து அடையும் எனும் போது,இறைவனையோ, இன்னொருவரையோ குற்றம் சொல்வது எப்படி பொருந்தும்?.இதனை பற்றிய சிந்தனை நமக்கு வேண்டும்.

               அப்போது கடவுளிடம் என்ன வேண்டுவது? எதற்காக வேண்டுவது? எப்படியும் நடப்பது நடந்தேறும் எனும் போது எதற்கு இந்த பக்தி?என்ற கேள்விகள் எழும் நம்முன்னே!
              தவறு செய்பவர்க்கு தண்டனை,தண்டனை காலத்தில் நல்ல நடத்தை என்றால் தண்டனை காலம் குறைப்பு. என மனிதனே சட்டம் வகுத்திருக்கும் போது ,அவனையே ஆட்டுவித்து சகலமும் ஆனவனுக்கு தெரியாதா நமை என்ன செய்வது என்று?
               அதை உணர்த்தவே நம் முன்னோர் நமக்கு காட்டும் பாதை இது.                      
நான் செய்த விணைக்கான பயனை நான் மனதார ஒப்புகொள்கிறேன், அதன் பயனையும் ஏற்றுகொள்கிறேன் ,ஆனால் அதற்கான மன தைரியம் ,வலிமை அத்தனை காலம் காத்திருக்கும்  பொறுமை,நம்பிக்கை இவற்றை எல்லாம் எமக்கு அளித்து எமை வழிநடத்து என்பதுவே!
   
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்.
              
            நாம் நல்லவற்றை நினைக்க,நல்லவற்றை செய்ய,நல்லவற்றை பேச நமக்கும் எல்லாம் நால்லதாய் அமையும்.இவை அனைத்தும் இந்த காவடி மூலம் நிறைவேறியது.எல்லாருடைய குறைகளும் தீர ஒருமித்து செய்த பக்தி திருவிழா இது.
              
           இதில் ஒவ்வருவரும் தன் நிலை ,பதவி மறந்து சரிசமமாய் இறைவனுக்கு அடிமை பூண்டது, அம்மைநகரில் கல்வி மேலும் சிறக்க பொருளுதவி செய்தது, நம் குடும்பம் அனைத்து ஒற்றுமையாய் அணிதிரண்டது, அன்று ஒரு பெண்ணின் திருமணம் நிகழ சிறு கருவியாய் நாம் இருந்தது,பக்தியின் பயனை நாம் மட்டும் அனுபவித்து மகிழாமல் அம்மைநகர் முழுமைக்கும் பக்தி எனும் மங்கலத்தை பங்கிட்டது என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
             இவை அனைத்தும் நம் நல்விணை பட்டியலில் சேரும் போது இறைவன் நம் கணக்கை தவறாமல் சரி செய்வார்.
           
             களப்பிரர் காலம் என்பது நம் தமிழக வரலாற்றில் உண்டு அதனை,மாற்றி தழைக்க செய்தது நாயன்மார்களின் பக்தி.அதே போல் நம் இல்லங்களில் உள்ள இருளை களைந்து ஒளிமயமான வாழ்வு தரும் காவடி.வெப்பம் தாளாமல் ,பயிர் பச்சை முதல் மனிதன் வரை வாடி வறண்டு தவிக்கையில் தவறாமல் வருணனை அனுப்பி குறை தீர்த்திடுவார்  அப்பன்.அதே போல் நமை காக்க வந்தது  கந்தன் காவடி .

             சென்ற பதிவில் ஐவரின்  காப்பு கட்டியதை பார்த்தோம் ,அதன் வழியில் அடுத்து வருவது அம்மைநகர் முருகன் இல்லம் கண்ட அடுத்த தலைமுறை மூத்த வாரிசு பாசமிகு அண்ணன் மருது  பாண்டியனுக்கு.
            
பழனியாத்திரை, பாதயாத்திரையாக தொடங்கும் போது அண்ணன் தம்பிகளில் தனி ஒருவராய் இந்த அத்தான்களிடம் அகப்பட்டு ,அத்தனைக்கும் ஈடுகொடுத்து,பழனியில் மண்டபம் அமர்த்துவதில் தொடங்கி சாப்பாட்டு ஏற்பாடுவரை சளைக்காமல் செய்யும் இந்த தர்மருக்கு,இந்த முறை பாண்டவர் ஐவராய் காவடி எடுப்பதில் மகிழ்ச்சி.
                  இந்த வருட பிறந்தநாள் எங்கள் அண்ணனுக்கு சிறந்த நாளாய் அமைந்தது காப்பு கட்டப்பட்டு தொடங்கியதால்.இத்தனை வருடம் எத்தனை சோதனை வந்த போதும்,சுப்பன் குடும்பம் கொண்ட நம்பிக்கை மாறாமல் ஆறுமுக அப்பனை எப்போதும் நம்பும் மூத்த வாரிசுக்கு,வாரிசு தருவேன் என்று கீழ சேவல் பட்டியில் வாக்கு தந்த சக்திமைந்தன் அதை சாத்தியமாக்க தந்த கங்கணம் அது.
 மீண்டும் அடுத்த பதிவில்.