Wednesday, 25 June 2014

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-7

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-7

              கொடுமுடி தீர்த்த காவடி முருகன் இல்லம் வந்து அமர்ந்த விதம் குறித்து சென்ற பதிவில் பார்த்தோம்.இந்தபதிவில் நாம் எடுத்த இந்த காவடி திருவிழாவில் நம் காவல் தெய்வங்களும்,குல தெய்வங்களும்,வீட்டு தெய்வங்களும் நமக்கு தக்க துணையாய் இருந்து நம்மை வழி நடத்தி சென்ற அற்புதத்தை காண்போம்.

             காவடி எடுக்கும் இந்த பக்தி திருவிழா கங்கணம் கட்டும் சடங்குடனே தான் ஆரம்பம்.விரலி மஞ்சளை மஞ்சள் துணியில் வைத்து ,நம் நாடி துடிப்பை உணரும் இடமான மணிக்கட்டில் கட்டுகிறோம்.அந்த கங்கனமானது அன்று முதலே தன் ஆளுகைக்குள்,அதன் காப்பு வட்டத்துக்குள் நம் குடும்பத்தை அழைத்துக் கொண்டது.நம் துடிப்போடு இணைந்து காவடி என்னும் மந்திர சொல்லையும் ,அதன் மீது கொண்ட பக்தியையும் ,நமக்கு பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்திடம் இருக்கும் அசைக்க இயலா நம்பிக்கையயும் சுவாசமாக கொண்டு விட்டது.

           கங்கணம் கட்டும் நிகழ்வு மே 4 தேதி,அம்மை நகரில் இருக்கும் தெய்வங்களை வணங்கி,தோட்டத்தில் குடி கொண்டு இருக்கும் நம் பாட்டனையும் வணங்கி முறை படி வயதில் சிறுவன் என ஸ்ரீராமனிடம் தொடக்கி மூத்த தலைமுறை என அவன் தாத்தா பெரிய ராமரிடம் முடிந்தது,
கங்கணம் கட்டும் இந்த நிகழ்வு நடந்தேற நமக்கு இரண்டுமணி நேரங்கள் ஆனது.அந்த நேரம் அனுபவித்த மெய்சிலிர்க்கும் அனுபவம் இப்போதும் அதே உணர்வை தருகிறது.

           மூர்த்தி சித்தப்பா ஸ்ரீராமனிடம் 'காவடி எடுக்கும் இந்த பக்தி திருவிழாவுக்கு கங்கணம் கட்ட பெற்றவரிடமும்,பெரியவர்களிடமும் அனுமதியும்,ஆசியும் பெறச் சொல்ல',எங்கள் வீட்டு பசலை வாரிசு எங்கள் அனைவரிடமும் அதே வார்த்தைகளால் ஆசி வேண்ட அங்கிருந்த அவன் பாட்டன்மார்,
அப்பத்தாமார்,தந்தையர்,தாயார்கள் என எங்கள் அனைவருக்கும் இருந்த உணர்வு நிலை சொல்லில் அடங்காது. நம் குடும்பம் வழி வந்த பக்தி மார்க்கம் நம்முடன் முடியாது,அது வாழையடி வாழையாய் தொடந்து வர அடுத்த தலைமுறை வந்த மகிழ்வு அது.

                    அடுத்து ராஜேஷுக்கு கட்டப்பட்ட கங்கணம்....எத்தனை சோதனை வந்தபோதும்,அதை கடக்க கந்தன் அருள் உண்டு,எடுத்த செயல் அத்தனைக்கும் உற்ற துணையாய் எங்கள் அன்னையர் இருவர் உண்டு,என்ற நம்பிக்கை பலம் கொண்ட கங்கணம்.

                       ரஞ்சித் அண்ணனுக்கு கட்டப்பட்ட கங்கணம்....பக்தியின் பெயரால் ஒன்றிணைந்த இந்த சுப்பன் கூட்டத்தில் சொந்தம் என்றிருந்தால் மட்டுமே சேரமுடியும் என்பதில்லை,முருகன் அடிமை என்ற பந்தம் ஒன்றே போதும் என அனைவருக்கும் உணர வைத்த கங்கணம்.

             கோபி அண்ணனுக்கு ....ராமர்,சீதையாய் அவர் அண்ணன் அண்ணி துணையிருக்க தம்பி லட்சுமனனாய் என்றும் உடனிருந்து வாழ்வில் உயர்ந்து சகல செல்வங்களும் பெற்று உயர்ந்து வாழ அந்த ஆறுமுகக் கடவுளிடம் வேண்டி கட்டப் பட்ட கங்கணம்.

               சக்தி வழி வந்த அந்த மங்கைக்கு கட்டப்பட்ட மங்கள கங்கணம்.ரேவதி அத்தாச்சி மேல் வந்து நம் பாட்டன் கேட்ட வாக்கு...இளைய தலைமுறை ஒன்றிணைந்து இனி வரும் காலம் எல்லாம் நம் குடும்பம் வழிநடத்தப்பட வேண்டும் என்பதே.
                 
கூடு விட்டு பிரிந்து இரை தேடி செல்லும் பறவைகள் போல் நாம் திசை எட்டும் பறந்து இறைந்து கிடக்கின்றோம்.அது காலத்தின் கட்டாயம்.நம் வசிப்பிடத்தின் தொலைவு வேண்டுமானால் அதிகம் இருக்கட்டும்.ஆனால் நாம் மனதளவில் அருகில் இருப்போம்.

                  முருகனுக்கு எடுபிக்கும் திருவிழா....பாதயாத்திரையா ,அன்னதானமா ,காவடியா எதுவாக இருப்பினும் அதில் முழுமையாய் தன்னை புகுத்தி,
சிந்தையில் எப்போதும் பக்தியை சிரத்தையாய் ஏந்தி நிற்கும் தும்பிக்கை நாயகனின் பக்தனுக்கு எங்கள் பாசமிகு ராஜா மாமாவிற்கு அவர்களின் தொழில் சிறக்க எங்கள் அனைவராலும் வேண்டப்பட்டு கட்டப் பட்ட வெற்றி கங்கணம்.

                         நான் இந்த பதிவில் கோவில்களை வலம் வந்தது பற்றியே எழுத ஆரம்பித்தேன் ,ஆனால் என் விரல்களை ஆண்ட சக்தி எழுதுவித்தது கங்கணம் கட்டியதை.இரண்டு மணி நேரத்திற்கும் மேற்பட்ட நிகழ்வு அடுத்த பதிவிலும் தொடரும்.

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-6

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-6

                 காவடி உருவாகி,வடிவாகி,மெருகேற்றி அமைந்த விதம் பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம்.நான் முதலில் குறிப்பிட்டபடி காவடி வீதிஉலா கிளம்பும் நேரம் வரை மெருகு ஏறிக்கொண்டே தான் இருந்தது.அதன் வர்ணனையிலிருந்து சற்றே கடந்து இந்த பதிவில் "தீர்த்த காவடி" அமைந்தவிதம் பற்றி பார்ப்போம்.
"அதிசயம் அநேகம் காட்டி, அனுதினமும் நம்மை நடத்தி,தக்க துணையாய் தான் இருப்பதை உணர்த்தி, பழனி மலை வரை நமை செலுத்தி,பக்தி எனும் பாலினில் நீராடி,பக்தன் வேண்டும் வரமும் மறவாது தந்த தண்டபாணி தெய்வம் தனை போற்றி அவன் பாதம் பற்றி வாழ்வில் முன்னேறுவோம்"

                         நம் குடும்பம் எடுத்து செலுத்திய இந்த காவடி தகப்பன் சாமியின் ஆணைப்படியே ,அவன் தன் திருவுள்ளப்படியே நடந்தேறியது.இதனை மெய்ப்பிக்கும் மற்றொரு நிகழ்வு இந்த பதிப்பில்.

                  காவடி அலங்காரம் செய்த பின் தன் பயணத்திட்டத்தில் இல்லாத ஒரு பயணத்தை மேற்கொண்டது சுலோச்சனாதேவி ,ஆம் காவடி முடிந்த பின்பே திரும்பி செல்லும் எண்ணம் கொண்டு ஈரோட்டில் இருந்து ஒரு மாதம் முன்பே மதுரை வந்துவிட்டது. ஆனால் அவள் கையால் தீர்த்த காவடி இங்கு வந்து சேரவேண்டும் என்ற இறைவனின் திருவிளையாடல் இங்கு நடந்தேறியது.
மீண்டும் வேறு வேலை காரணமாக ஈரோடு பயணப்பட்டது.

                 ஈரோட்டில் இருந்து வரும் வழியில் ,கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்துவர சொல்லி விஜய் மாமாவிடம், அத்தான்[என்னவர்] வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு பழனி முருகனுக்கு காவடி சுமந்து செல்வது தொன்று தொட்ட வழக்கம்.ஆனால் நாம் நினைத்தது, கொடுமுடி முதலான புனித தீர்த்தங்களை நிரப்பி ஒரு தீர்த்த காவடி சுமக்கலாம் என்பதே.

                 நாம் ஒரு எண்ணத்தை சுமந்தால் அதனை இன்னும் சிறப்பித்து நமக்கு அருளும் சுப்ரமணிய கடவுள் நமக்கு இந்த ஒப்பற்ற தீர்த்த காவடியை அளித்தார்.

'கற்றவர் தொழுதேற்றும் சீர்கறை பாண்டி கொடுமுடி
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே'.
                                         என சுந்தரரின் நமச்சிவாய பதிகம் பெற்ற பதி.கொடுமுடி நாதரும்,வீரநாராயண பெருமாளும்,பிரம்மதேவரும் ஒருங்கே குடி கொண்ட திருமூர்த்தி ஸ்தலம். வன்னிமரம் விசேசமாய் உள்ள இடம்,தெற்கு நோக்கி பாய்ந்த காவிரித்தாய் கிழக்கு நோக்கி திரும்பிய புண்ணிய தலம்.
ஆதிகாலம் தொட்டு தீர்த்த காவடி சுமந்து பழனியம்பதியை தரிசிக்கும் வழக்கம் உண்டு.அந்த பாக்கியம் நமக்கும் கிட்டியது.

           காவடி சுமக்கும் முன் அந்த வாரம் வியாழன் அன்று, கொடுமுடி சென்ற தேவியும்,விஜய் மாமாவும், அங்கு இருந்த தெரிந்தவர் துணைகொண்டு, நாம் வழிமுறைகள் அறியாவிடினும் ,அதனை அறிவுறுத்த ஒரு மனிதனை அனுப்பி முறைப்படி தீர்த்த காவடி கட்டப்பட்டது.

          காவிரிக்கரையில் உள்ள வன்னிமரத்தடி விநாயகப்பெருமானை வணங்கி ,
புது குடம் தனில் நடுஆற்றில் இறங்கி ,தெள்ளிய சுத்தமான புனித நீரை நிரப்பி,கொண்டு வந்து குருக்களிடம் தர,அதில் வன்னி இலை இட்டு,தொந்தி கணபதி ஆசியுடன் இரண்டு துணிகள் கொண்டு மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்டது தீர்த்த காவடி.

                  முழுமுதற் கடவுள் ஆசி பெற்ற ,தீர்த்தம் அவன் அப்பன் ,ஆதி அந்தம் இல்லா அற்புதக்கடவுள்,மனிதர் விணை அகற்றி முக்தி தர கருணையுடன் காத்திருக்கும் கொடுமுடி நாதரின் திருப்பாதம் அமர்ந்தது. அங்கும் என் அப்பன் அவன்தன் மைந்தனுக்கு,நீராட்ட செல்லும் இந்த காவடியை,அதனை சுமக்க இருக்கும் எம் குலபெண்களுக்கு ,இதனை சுமந்ததனால் ,அவர் சுமக்கும் கவலைகளை முற்றிலும் களைந்திட ஒரு வாய்ப்பும் அளித்தான்.
பின்னர் கொடுமுடி கொண்ட தீர்த்தம்,ஊதியூர் கண்ட பின்னே அவன் மைந்தனை சென்றடைய வேண்டும் என்பது மரபு.

           எனவே இந்த புண்ணிய காவடியை மடிசுமந்த அந்த தம்பதியும் மறவாமல் சென்றடைந்தது ஊதியூர் சிவன் கோவில். அங்கு அருள் பாலிக்கும் முனீஷ்வரரை முதலில் வணங்கி அந்த காவடி மற்றவர் கைபடாமல் சென்றடைந்தது சிவன் சேவடி.

        சிவம் அது இந்த தீர்த்த காவடிக்கு தன் முழு ஆசியையும் தந்தது.ஊதியூர் சிவன் கோவில் கட்டிடத்தால் ஆனது, முழுதும் உத்திரம் அமைந்த இடம்.அங்கு அன்றைய தினம் கோவில் முழுதும் சாற்றப்பட்டு இருந்தது வெள்ளை நிற நந்தியாவட்டை மலர்கள்.இவர்கள் சென்ற பொழுது குருக்கள் தவிர வேறு யாரும் இல்லை.அவரும் தீர்த்த காவடியை சிவன் பாதத்தில் வைக்க சொல்லி ஆராதனை காட்டி, பின்னர் எடுக்க சொன்னார்.

        தேவி குனிந்து தீர்த்த குடத்தை தூக்க எங்கிருந்தோ வந்து அவள் கை சூடியது வண்ண கதம்ப மலர். இதை கண்ட குருக்களும் திகைக்க,இவர்கள் இருவரும் சிலிர்த்தனர். காய்ந்த மலரும் அல்ல அது,அங்கு அணிவித்த மலரும் அல்ல அது. அது நமிடம் வந்து சேர்ந்த மாய மலர். உமை என்றும் ஆசீர்வதிப்பேன் என உரைத்த அற்புத மலர்.வேண்டிய வரம் பாரிஜாத மலர் .ஈசன் சிகை அமர்ந்த கொன்றை மலர் , நமது குலம் காக்க வந்த செண்பக மலர் .எதுவானாலும் அது அருள் பாலிக்கும் அற்புதமலர்.இந்த காவடி எடுக்கும் உத்தேசம் ஈடேற இறைவன் தந்த ஆசி மலர்.

தீர்த்தகாவடி அங்கிருந்து அதிசயம் அநேகம் சுமந்து வந்து சேர்ந்தது முருகன் இல்லம்.மீண்டும் வளரும் காவடி நினைவுகள்.

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-5

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-5

                 காவடியை பற்றி எழுதும் இந்த முயற்சியை ஆதரித்து பாராட்டிய உள்ளங்களுக்கு நன்றி. நமக்கு பிடித்த ஒரு நிகழ்வை அடிக்கடி பேசி மகிழ்வது மிகுந்த மகிழ்வை தரும்,நாம் உணர்ந்ததை அடுத்தவர் பரிமாறும் போது சொல்ல வந்த எண்ணமும் முழு அளவில் சென்றடையும்.இங்கும் நம் அனைவரையும் ஒன்றிணைத்த மந்திரச்சொல் "காவடி".

                      மீண்டும் காவடி உருவான தினத்தை சற்று திரும்பிப் பார்ப்போம்
காவடி அலங்காரம் செய்ய என அமர்ந்த தினம்,மதியம் இரண்டு மணி வரை செய்து முடிக்கப்பட்டது இரண்டு மட்டுமே! அதனை பார்த்த முத்துகுமார் தாத்தா கூட காவடி நாள் வரை இதனை தொடர்வீர்களா என ஐயம் எழுப்பினார்கள். ஆனால் இதிலும் கந்தன் கருணை இருந்தது, அன்றைய தினம் உறங்கச் செல்லும் முன் நாங்கள் முடித்திருந்தது ஏழு காவடி. அதிலும் எதனிலும் எந்த சமரசமும் இன்றி எண்ணத்தில் இருந்து கந்தன் உரைத்த வண்ணம் உருவானது. அடுத்த நாள் வண்ணம் தீட்ட பெரியத்தானும் உடன் சேர அன்றே முடிந்தது அத்தனை காவடி அலங்காரமும் முதற்கட்டமாய்.
        ஏன் முதற்கட்டம் எனில் காவடி சுமக்கும் அன்றைய தினம் காலை வரை தொடர்ந்தது மெருகூட்டும் வேலை.

                  அடுத்தநாள் ரேவதி அத்தாச்சி மயில்பீலியும் ,சாமி பட ஸ்டிகர்களுமாக வந்திணைதார்கள்.இதில் மஞ்சளும் என்னையும் சேர்த்த குளியல் கொண்டிருந்த காவடிகளின் உட்புறம் அவரவர் இஷ்ட தெய்வம் வந்து குடியேறியது அடுத்த அற்புதம்.

           முருகா தாத்தா முருகனை வழிப்பட்டது போல் சீரடி பாபா மேலும் மிகந்த பக்தி கொண்டிருந்தார்கள் என்றும் முன்பே ஜெயலக்ஷ்மி அம்மாச்சி சொல்லியிருக்கிறார்கள். மதுரையில் தாத்தா வசிக்கும் போது மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கதம்ப பூக்கள் நிறைந்த மனம் வாய்ந்த பூ பந்து வாங்கி வருவார்கள் என்றும் அதை தான் சாமி படங்களுக்கு மாலையாக போடுவேன் என்றும், அந்த கதம்பம் அத்தனை சிறப்பாக இருக்கும் என்றும் அம்மாச்சி தன் சிறுவயதை பற்றி பகிர்ந்திருக்கிறார்கள்.

                அதனால் முருகா தாத்தாவின் அருட்பார்வையில் உருவான காவடி என்பதால் சீரடி பாபாவின் ஆளுகையும் நம் காவடியில் நிறைந்திருந்தது.
பாபாவை 
தம் இஷ்ட தெய்வமாய் கொண்டவர்க்கு அவர் தம் காவடியில் வந்து அருளினார் சீரடி பாபா.

             ஒவ்வருவர் காவடியிலும் அவரவர் வீட்டு பூஜை அறையில் அதிகம் ஆட்சி செய்யும் கடவுளர் வந்து அமர்ந்ததும் அதிசயமே!

            அதுவும் ராஜேஷுக்கு சமயபுரம் மாரியம்மன் குலதெய்வம் அதே அம்மன் படமும் இருந்தது. மாமா தனக்கு யோகநிலை சிவனும் அம்மனும் வேண்டும் என காவடி பொருள் வாங்க கிளம்பும் முன்னே சொன்னார்கள்.
             அதே போல் அமைந்தது ஸ்டிக்கர் வடிவில்.நினைத்தவர்க்கு நினைத்த படியும்,அதனை அறியாதவர்க்கு அவர் தம் மனதிற்கு உகந்தபடியும் அமைந்தது ,தெய்வங்களின் அம்சம் பொருந்திய வடிவங்கள்.

சந்தன மாலை 
           அதன் பின் சந்தனபிரியனுக்கு அவன் தன் காவடியில் மணக்க சந்தனமாலை வேண்டாமோ....அதுவும் அமைந்தது,சண்முகக் கடவுள் போற்றி என்று அப்பனவன் நாமத்தை எக்கணமும் உரைத்து,அவன் சக்திவடிவேலனாகவும் ,சங்கரி மைந்தனாகவும் வந்து நம் குலம் தழைக்க வழிகாட்டுவான் எனவும் உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் எனவும் சிக்கென சிங்கார வடிவேலவனின் திருப்பாதம் பற்றிய மூர்த்தி சித்தப்பாவின் கைகளினால்.

            காவடியின் மேல் துணியில் அதிகம் அலங்காரம் வேண்டாம் என நினைத்து அடையாளம் காண உதவும் வகையில் எளிமையாய் இருக்க வேண்டும் என மாலைகளில் வரும் பூக்களை பெரியவர்கள் சுமக்கும் காவடியில் வைக்க, மெல்ல மெல்ல சிறியவர்களின் காவடிகள் ரேவா அத்தாச்சியின் கைகளினால் தன்னை சிறிது பளபளப்பாய் அலங்கரித்து கொண்டன.

மயில் பீலி 
         பாட்டன் வைத்த பெயர் எங்கள் அத்தைமார்களுக்கு தங்கமயில், செல்லமயில் ,சொர்னமயில் என்று அதனால் தானோ மயில் பீலி ஒயிலாய் வந்தது முதலில் குறுச்சியில் இருந்தும்,பசலையில் இருந்தும். அதன் பின்னே வந்து இணைந்தது அண்ணாமலையில் இருந்து ....அப்பன் அவன் தன் மகனுக்கு சுமக்கும் காவடிக்கு மெருகூட்ட என நட்சத்திரமாய் மின்னும் இந்த அருணாச்சலம் தன் அன்புமகளின் மூலம் அனுப்பிவைத்தான்.

          தனை எதிர்த்த சூரனையும் ஆட்கொண்டு சேவலும் ,மயிலுமாய் ,கொடியும், வாகனமுமாய் கொண்ட பெருந்தகைக்கு ,அவன் காவடி சுமந்து வரும் வழியில் கட்டியம் கூறி எம்குல சிறார்கள் தாம் சுமக்க சேவலும் ,வேலும் ,மயிலும்,வேலனும் அமர்ந்த பேனரும் அழகிய கொடியும் உருவானது. அதுவும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் ,விசிறியும் ஆனது சேவற் கொடியாய்.
பாசமுடன் வளரும் பிள்ளை போலே, பக்தியுடன்,பக்குவமாய் படிப்படியாய் மெருகேறியது காவடி.இன்னும் அருள் சேரும் இந்த காவடியில் வரும் பதிவில்.

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-4.

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-4.
காவடியில் வண்ணக்கலவை
                      எந்த ஒரு விசயத்திலும் வண்ணங்கள் மிக முக்கிய பங்களிப்பை தருகின்றன.அதனால் தான் காவடி எடுப்பதில் சிறுவனான ஸ்ரீராம் காவடியை முருகனதாக பச்சை வண்ணமும் ,சக்தி காவடியை மஞ்சள் வண்ணமும் மற்ற அனைத்தையும் உயர்ந்த காவியிலும் அமையப்பெற்றது.
                    
                    அதன் பின்னர் முதலில் சொன்னது போல் ஒரே வகை கருப்பன் படம் இரு விதங்களில் வண்ணப் படுத்தப் பட்டது.இந்த பணி முதலில் வித்யாசப்படுத்தி காட்ட என்று மட்டுமே மூன்று வண்ணங்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்டது.அதன் பின்னே அழகே உருவாய் உருமாறியது.

              அச்சடிக்கப்பட்ட கருப்பனசாமிப் படம்.....கருப்பு வேட்டியும்,மலர் வண்ண மாலையும், மின்னும் வீச்சரிவாளுமாக கண்டவுடன் மிரட்டும் ,காண காண திகட்டும் பார்த்திபனூர் கருப்பனாக மாறினார்,தேவியின் கை வண்ணத்தில்.
மொத்தமாய் 7 காவடிகளில் வண்ணம் தீட்டப் பட்டு வரிசையாய் முருகன் இல்ல பூஜை அறையினில் ஒன்று சேர்ந்து நின்ற கோலம்- நீ ஏழு பிறவி எடுத்தாலும் உன்னை சுற்றி,சுற்றி வந்து காப்பேன் என்று அவன் சிரித்து சொன்ன செய்திதானோ!

               கருப்பன் கருப்பில் கவர்ந்திழுக்க.....முத்து விஜயன் அவன் காவடியில் கண்ணை குளுமைபடுத்தும் பச்சையில்,வண்ண வண்ண மாலை தாங்கி,பகை விரட்டும் வீச்சரிவாள் தான் மிளிர குறிச்சி திட்டின் கோச்சடையான்,எங்கள் மாவடியான் வந்திறங்கினான்.

          ஓருருவாய் அதுவும் அரு உருவாய் எம் அப்பனை போல் குறிச்சியில் இருந்து என்குலத்தை காத்திடும் மாவடியானை ,கோச்சடையில் வீற்றிருக்கும் அண்ணன் தம்பியாய் காண ஆசைப்பட்டு ஒரு பக்கத்தில் அருகருகே அமைத்து ஆனந்தம் கொண்டோம் என் தங்கையும் நானும்.ஆனால் அதனை மாவடிகருப்பனும்,
பார்த்திபனூர் கருப்பனும் ஒன்றாய் இணைந்திட்ட கனமான காவடி என்று சிலிர்திட்டனர் சித்தப்பாவும்,பெரியத்தானும்.
இரட்டை வாள் தாங்கி கடினமான சவால்களையும் களைந்திடுவேன் என சொல்லும் இரட்டையராய் வீற்றிருந்த கருப்பர்கள் தம் அழகை காண இந்த கண்கள் தாம் செய்த பாக்கியம் என்ன! கல்லாய் நிற்கும் மாவடியானை எம் கண் முன்னே உருவாய் கொண்டு வரும் பெரியத்தான் அன்று வண்ணங்களால் முறுக்கு மீசைக்கு இன்னும் முறுக்கேற்றி கம்பீரமாய் சன்னதம் வந்து ஆடும் எங்கள் பெரியமாமாவை கண் முன் கொண்டு வந்தார்கள்.

                  எல்லாம் முன் நின்று செய்யும் சித்தப்பாவிற்கு,சிறப்பாய் ஏதேனும் செய்யவேண்டும்,உன்னை ஒழிய ஒருவரை நான் நம்புகிலேன் என மாறாத சிந்த கொண்டவர்க்கு,முருகனை தவிர ஒரு பரிசு உண்டோ? எனவே அவர்களது காவடியில் மட்டும் முருகனை வண்ணம் தீட்டி தனது எண்ணத்தை சிறப்பாய் ஈடேற்றினார் பெரியத்தான்.

          ஒருகால் தாங்கி நின்று ஓங்கி வாள் வீசும் மதுரை வீரன்,அழகிய பகவதியாய் சிவப்பு வண்ண சேலை தாங்கி பகவதி அம்மன்,அங்காள ஈஸ்வரியாய்,அருள்மிகு இருளாயி அம்மையாய் சக்தி வடிவில் அம்பிகை,அரு உருவாய் நின்று உலகம் உய்விக்கும் அம்மையப்பன் லிங்க வடிவில், ஈசன் குடும்பம் சுமக்கும் பேரு பெற்ற நந்திஎம்பெருமான்.என வரிசையாய் வண்ணம் கொண்டனர் தேவி மற்றும் பெரியத்தான் துரிகையில்.

                        காவடியில் அலங்கரிக்க என அமர்ந்த இரு நாளும் நானும்,தேவியும் தோரணம் அமைக்க வடிவம் அமைக்க,அதை செயல் படுத்த மங்கைசித்தி,
செல்வி,இந்து,வர்ஷினி இவர்களுடன் எங்கள் சுட்டி சிவராமனும் இணைந்து கொண்டான்.ஓடியாடும் பிள்ளைகள் ஓரிடத்தில் நாள் முழுதும் அமர்ந்து பாசி கோர்த்த அழகு என்று மறவாது.

             இதோடு மழலைகளும் ...நான் என்ன செய்ய என அடிக்கடி பர்வேசும், எல்லோரும் மும்மரமாய் வேலை செய்யும் போது தாம் மட்டும் உறக்கம் கொள்வதா ,என தூக்கம் மறந்து எங்களுடன் வேலை செய்யுமிடம் வந்து பள்ளி கொண்ட சக்திவேலும்,மாலை பூஜைக்கு வந்து நாங்கள் செய்த காவடியை கண்டு மகிழும் அபினவும் என காவடி அனைவரையும் ஆர்வமுடன் பங்கெடுக்க வைத்தது.

      சிந்திக்க சித்திக்க இன்னும் நிறைய விஷயங்கள் மனதை நிறைத்தவை வலம் வருகின்றன.மீண்டும் அடுத்த பதிவில்

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-3

காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-3
                          காவடி என்ற பக்தி மிக்க நிகழ்வில் இன்னும் எத்தனை நாள் வேண்டுமானாலும் அமிழ்ந்து இருக்கலாம் அதனால் ஆனந்தமே.நான் இங்கே மிக முக்கியமாய் வலியுறுத்த நினைப்பது ,நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்த பக்திக்கு வலிமை அதிகம். நாம் ஒன்றுகூடி அந்த ஷண்முக கடவுளிடம் கோரிக்கை ,அதுவும் 100% நம்பிக்கையுடன் வைக்கும் பொழுது அவன் நம்மை கைவிட மாட்டன் இது உறுதி.அதன் அச்சாரம் தான் காவடியில் நடந்த ஒவ்வரு செயலும்.

                 காவடி அமைந்த விதம் முன் பதிவில் பகிர்ந்தேன்.நாங்கள் மனதில் நினைத்ததை புரிந்து, காவித்துணியாகவும்,அச்சுப் படமாகவும் ,அலங்கார லேசாகவும் இருந்ததை தனித்தன்மை வாய்ந்த காவடியாக மாற்றி தந்த பெருமை ,அம்மைநகர் டைலர் அண்ணன் ஆரோன் அவர்களை சாரும்.சித்தப்பா சொல்லுக்காக,அவர் தன் அலுவல்களை விடுத்து காவடிக்கு முக்கியத்துவம் தந்து ,மிகுந்த ஆர்வத்துடன் நேரம் காலம் பார்க்காது தைத்து தந்தார்.
                   
                  அடுத்து காவடி அலங்காரம்.... சிறிய பெரிய பாசிகள்,மணி,உல்லன் நூல்,சாட்டின் ரிப்பன் ,வண்ணங்கள் என்று எந்த யோசனையும் இல்லாமல் கைக்கு எடுக்க தோன்றிய பொருட்களை கொண்டு வந்தோம்.அவை யாவும் செவ்வனே தோரணங்களாய் உரு பெற்று காவடியை அலங்கரிக்கும் பாக்கியத்தை பெற்றுக்கொண்டன.

1.சிறு பாசிகள் ,பெரிய பாசிகள் கொண்ட ஒரே போன்ற தோற்றம் தோரணங்கள் 8 அமைந்தது வயதில் சிறியவர்க்கு.
2.உள்ளன் நூல் கொண்டு குஞ்சம் அமைந்து மணிகள் கோர்க்கப்பட்ட காவடிகள் -3. பெரியவர்க்கு.[இதில் சிவகுமார் சித்தப்பா,மாமா,மற்றும் பஞ்ச பாண்டவரில் தருமருக்கு]
3.சாட்டின் ரிப்பன் கொண்டு வடிவமைக்கப்பட்ட காவடி 2.[சமகால மாமன் ,மச்சினன் என்பதால் சித்தப்பா மற்றும் பெரியத்தானுக்கு]
4.நாங்கள் வாங்கிய மணிகள் பத்தாதோ என ஐயம் தோன்ற ராஜா மாமா அன்று மாலை சில ரெடி மேட் தொங்கட்டான் வங்கி வந்தார்கள்.எப்போதும் பிள்ளையாருக்கு ஒரு வழக்கம் ,ராஜா மாமாவிடம் இருந்து தனிச் சலுகையாய் சில வற்றை பெற்று கொள்வார் ,அதில் இருவருக்கும் தனி மகிழ்ச்சி. இங்கும் அப்படித்தான் நாங்கள் வைத்திருந்த பொருட்களில் இல்லாமல் தனியாய் தனெக்கென அவருடைய செல்லப் பிள்ளையிடம் பெற்றுக்கொண்டார் பிள்ளையார்.
5.அழகர் காவடி என்று நாமகரணம் கொண்டதனால் அரவிந்தத்தானின் காவடியும் சிறப்பாய் தன்னை அலங்கரித்து கொண்டது. அழகர் காவடி மணிகளால் [பெல்] நிறைய வேண்டும் என முதலிலேயே வெண்ணிலா சித்தி ,எங்களிடம் சொன்னார்கள்.
                   அதன்படி நாங்கள் வாங்கி வைத்திருந்த அலங்கார மணிகள் கொண்ட பாக்கெட்டில் 100 மணி இருந்தது.ஒவ்வரு காவடிக்கும் 6 மணி என பக்கிட்டு மிச்சம் இருக்கும் மணிகள் 16 மணிகளை இதில் சேர்க்கலாம் என முடிவு செய்தோம்.அதனால் கடைசியாய் இந்த காவடியை தொடங்க 28 மணிகள் மிச்சம் இருந்தது. நமக்கு கணக்கில் பிழை என்று எண்ணி 24 மணிகளை கொண்டு முழுதும் மணிகளால் நிறைந்த ஓசை காவடியாய் அதை அமைத்தோம்.அதன் பின் அறியவந்தது முன் செய்து முடித்த இரண்டு காவடிகளில் இந்த அலங்கார மணி பொருத்தப்பட வில்லை என்பது. அலங்கார பிரியரான அந்த பெருமாள் என்றுமே ஒரு விளையாட்டை செய்து தான் முருகனுக்கே மாமன் என்பதை நிரூபிப்பார்.
                    நீ எதை வேண்டுமானாலும் செய் அதில் ஒரு கணக்கு வந்துவிடும் என்று சித்தப்பா ஒவ்வொரு முறையும் சொல்வார்கள்.ஆம் அவன் போடும் கணக்கு முன்னே நாம் எம்மாத்திரம்.இதையெல்லாம் பார்த்த பொழுது தோன்றிய வார்த்தைதான்...செய்த கரங்கள் எங்களது சிந்தை கந்தனது

காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-2

காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-2
                 காவடி எடுத்ததின் ஈர்ப்பு இன்னும் குறையாமல் அப்படியே உள்ளது.இரவில் நாம் உறங்கும் போது உள்ளுணர்வு விழித்திருக்கும் என்பது இப்போது உறுதியாகிறது. பகல் பொழுதில் பிற சில வேலைகள் நம்மை ஆக்ரமித்து காவடி நினைவுகளை ஒதுக்கி வைக்கிறது,மீண்டும் இணையத்தில் புகைப்பட வழியாக மீண்டும் எழுகிறது.ஆனால் கனவில் வருவதெல்லாம் காவடியும்,காவி வேட்டியும்,சாமியார்களுமே.இது ஒருபுறம் எனில் நம் வீட்டு சாமியாடிகள் இன்னும் முறுக்கு குறையாமல் இருப்பார்கள் என்பது உறுதி.
மீண்டும் காவடிக்கு முன் நோக்குவோம்.
                பௌர்ணமி அன்று [14.5.14] முதல் காவடி செய்யப்பட்டு ஸ்ரீராம் காவடி என்ற அடைமொழியுடன் பூஜைக்கு வைக்கப்பட்டது.பச்சை வண்ணத்தில் படாக்கை போர்த்தப்பட்டு முருகன் காவடி,முத்தையன் காவடி எங்கள் வீட்டு முத்துவிஜயன் காவடி என்று சித்தப்பாவால் தங்கள் முதல் பேரனுக்கு என்று சிறப்புடன் முதல் காவடி பூஜையில் அமர்ந்தது.
                   அன்றிரவு ராஜா மாமாவிற்கு கனவில் வந்து இது முத்தையன் காவடி என்னுடையது என்று ஒரு சிறுவன் சொல்வது போலும் ,எங்கே கருப்பன் காவடி என்று சிவகுமார் சித்தப்பா வடிவில் வந்து கருப்பன் கேட்பது போலும் கனவு.இந்த செய்திகள் எம்மை அடைந்தது செய்தியாக அலைபேசி மூலம்.

                    வெள்ளிகிழமை அன்று மாலை நாங்கள் அம்மைநகர் அடைந்த சமயம் சுமார் 5 மணி இருக்கும்.அதன் பின் அன்றே கருப்பன் காவடி செய்து பூஜை செய்ய வேண்டும் என்ற ராஜா மாமாவின் எண்ணப்படி அதன் பின் டைலரை அழைத்து ஒருபுறம் கருப்பன் படமும்,மறுபுறம் கந்தன் படமும் வைத்து அழகிய காவடியாய்
எங்கள் அன்பு தம்பிக்காக,அம்மைநகரில் சுமக்க இருக்கும் அழகு காவடிக்காக அமெரிக்காவில் மாலையிட்டு,அநேகமான சிரமங்கள் பல இருந்தும் ,அவன் தனது வரவு இங்குள்ள உற்றவருக்கு எத்துனை மகிழ்ச்சி தரும் என்பதில் எண்ணம் வைத்து தனது வரவின் மூலம் அனைவரையும் பிரசன்னம் செய்யவிருந்த தம்பிக்காக உருவானது.இந்த காவடி வைத்து வணங்கும் போது அன்று மணி 9 ஆகியிருந்தது.ஆனாலும் அதை செய்து முடித்த போதே வந்தது மன நிறைவு.

            அடுத்த நாள் காலையில் ஆசாரியல் செய்யப்பட அத்தனை காவடியும் அளவு எடுக்கப்பட்டது.உயரம் ,அளவு வகையாக பிரித்து அதனை சுமப்பவர் வலு கொண்டு பிரித்தெடுத்தோம்.ஒவ்வரு காவடியும் தனிஉரு பெற்றது.

கருப்பன் காவடி.
நம்மையெல்லாம் வழி நடத்தும் நம் பாட்டனாரை வழி நடத்திய தெய்வம்.பார்வையினாலே நமை சூழ்ந்து வரும் பகைகளை பறந்தோட செய்யும் பார்திபனூராண்டி,அவனை சுமக்கும் கருப்பன் காவடி.
கருப்பன் குலதெய்வம் என கொண்டவர்க்கு ஒருபுறம் முருகனும்,மறுபுறம் கருப்பனும் என இவிதமாக 7 காவடி.சித்தப்பா இருவர் மற்றும் அந்த பஞ்ச பாண்டவர்க்கு என உருவானது.
பிள்ளையார் காவடி.
ராஜா மாமா முருகனுக்கு காவடி என்றாலும் அவர் தம் மூத்தவரை மறக்குமோ என பிள்ளையாரை ஒரு புறம் வேண்டும் என சொல்ல... நாமும் முதற்கடவுள்,ஓங்காரத்துள்ளே உதிக்கும் பரம் பொருளை ஒரு புறமும் மறுபுறம் இன்முக சிரிப்பால் இன்னல்களை களையும்
ஆருமுகப்பெருமானை ஒருபுறமும் வைத்தோம்.
சிவன் காவடி.
அப்பன் அவன் அனைவருக்கும் மேலானவன்,தேவர்கெல்லாம் தேவன் மகாதேவன்...
தென்னாடுடைய சிவனே போற்றி!என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
என்று தென்னகம் முழுதும் கோசமிடும் அடியார் கூட்டத்தில் ,அவன் தன் அருளாலே அவனை பூஜிக்க தீட்சை பெற்ற எங்கள் மாமாவை விட அவன் பெயர் கொண்ட காவடியை தூக்கும் பேறு பெற்றார் யார்? எனவே காவடி தூக்கும் நம் வீட்டு அடியவர்களில் மூத்தவரே ஆதிசிவன் காவடி தூக்க உற்றவர் என ஒருபுறம் அரு உருவான அதிசய லிங்கமும்,மறு புறம் அவனையே சுமக்கும் நந்திஎம்பெருமானும் அமைந்த காவடியானது.
சக்தி காவடி.
அம்மையும்,அப்பனும் அமைந்ததே உலகு.அப்பன் காவடி வடிவில் வர அம்மை அடியவரை நாடி வரமாட்டாலோ.அதுவும் தனி ஒரு பெண்ணாய்,எங்கள் மாதர்குல வடிவாய் ஒன்றிணைந்த சக்தியாய் ரேவா அத்தாச்சி காவடி சுமக்கையில். வழி வழியாய் உயிர் சுமந்த இந்த பொன்னடி மக்கள் கூட்டம் இன்னும் எத்தனை காலம் சுமை சுமக்கும்...அதற்கு ஒரு தீர்வு நிச்சயம் வேண்டும்,அதனை தருவதற்கு ஆதி சக்தி ஒருபுறமும்,அவள் திருக்கர சூலம் ஒருபுறமுமாய் அமைந்தது சக்தி காவடி.
அழகர் காவடி.
அம்மையும்,அப்பனும் வந்தாகியது.....மாமன் வரவேண்டாமோ?
சைவம் வைணவம் மத இணைப்பை திருமலை மன்னன் தான் செய்வாரோ? இந்த சுப்பன் குடும்பம் செய்யாதோ?.செய்தது காவடியில் புரட்சி.மதுரை நகர் அழகரை நாமம் வடிவில் தாங்கி வந்தது அபினவின் காவடி.அதன் பின் அத்தனின் விருப்பப் படி பிள்ளத்து கருப்பனும்,கார்த்திகை
மைந்தனும் உடன் அமைந்தனர்.
மாவடியான் காவடி.
எங்குல தெய்வமாம் மாவடியானை ஒருபுறமும்...பச்சை மயில் வாகனனை மறு புறமும் கொண்டு அமைந்தது ஸ்ரீராமனின் காவடி.
"கோச்சடை விட்டு வந்த கோபக்கனலே போற்றி"-இந்த வரிக்கு சொந்தமான எங்கள் பெரியவருக்கு...கனமான காவடி வேண்டிய மாவடியானை சுமக்கும்
சாமியாடிக்கு....இரட்டையராய் கோச்சடையில் நிற்கும் மாவடி கருப்பர்களை ஒன்றிணைத்தோம் ஒரு புறம்,மற்றொருபுறம் வினை தீர்க்கும் வேலவன்.
மதுரைவீரன் காவடி.
மதுரை வீரன் -இது என் தந்தை வழி குல தெய்வம் மட்டும் அன்று.....எண்களின் அடையாளமும் மதுரைவீரன் பிள்ளை வம்சம் என்பதுதான்.இந்த வம்சத்தின் வினைகள் தீர்ந்து குலதெய்வ வழிபாடு தொடர்ந்து அனைவரின் வாழ்வு சிறக்க என் தம்பி ராஜேஷ் எடுத்த காவடி.
ஒருபுறம் பாலசுப்ரமணியனும் ,மறு புறம் மதுரை வீரனுமாய் அமைந்தது.
பகவதி அம்மன் காவடி.
விட்ட குறை,தொட்ட குறை ,ரஞ்சித் அண்ணனுக்கும் நமக்கும் உண்டு.நம்மோடு பாத யாத்திரையில் பங்கேற்ற பல நண்பர்கள் உண்டு,ஆனால் காவடியில் இணைந்த பாக்கியம் ரஞ்சித் அண்ணனுக்கு மட்டுமே..ஒரு குடும்பம் பங்கேற்கும் காவடி எடுக்கும் விழாவில் அவர்களும் ஒரு அங்கம் என அமைந்தது பகவதி அம்மன் ஒரு புறமும்,முருகன் ஒரு புறமுமாய் அமைந்த காவடி.

          காவடிகள் எத்தனையோ விதம்,ஆனால் நம் வீட்டில் எடுத்த காவடியில் நமது முன்னோர்கள்,குல தெய்வம் மற்றும் பெருந்தெய்வங்களின் ஆசி கட்டாயம் உண்டு.இது நமது காவடிகள் அமைந்த விதத்தில் தெரியும்.இப்படி துணியில் அச்சடிக்கப்பட்ட தெய்வங்கள் நமை அடைந்தது எப்படி?அதிலும்,அவரவர் குலதெய்வங்கள் வந்தமைந்தது எப்படி? இவை யாவும் கந்தனது விந்தையன்றி வேறு ஏது?
                         இன்னும் எம் மனதில் பதிந்த விந்தைகள் பல..அவற்றை மீண்டும் பகிர்வேன்.என்னை விட இதனை இன்னும் சிறப்பாய் சித்தப்பாவோ அல்லது பெரியத்தானோ இன்னும் விளக்கமாய் சொல்ல இயலும் எனும் போது நான் ஏன் இதனை இங்கே பகிர்கிறேன் என கேள்வி எழுந்தது என்னுள்ளே? அதுவும் அவன் கட்டளைதானோ என எண்ணம் தோன்றியது .செய்கிறேன்.

காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-1

ஓம் சரவணபவ 

             எல்லாம் வல்ல முருகபெருமான் அருளால் A.S.Pillai family என்ற நம் குடும்பம் செய்த மாபெரும் பக்தி திருவிழா 2014 ஆண்டு மே மாதம் 25,26 தேதிகளில் நாம் எடுத்து பழனிமலை தண்டாயுதபாணி தெய்வத்துக்கு செலுத்திய காவடி.

             இந்த நிகழ்வை என்றும் நம் மனதில் பதித்து பத்திரப்படுத்தி வைத்திருப்போம் அது உறுதி.அதற்க்கு உறுதுணை செய்யவும் இந்த நிகழ்வை ஆவணப்படுத்தவும் ,நான் எடுக்கும் சிறு முயற்சி இந்த blog .

          இதில் நம் நினைவுகளை பதித்து வைப்போம்.வேண்டும் பொது திருப்பி புரட்டி மகிழலாம்.என்னோடு இணைய எம் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்.


காவடி சில நினைவுகளும்,பகிர்வுகளும்-1
               காவடி இந்த மூன்று எழுத்து நம்மை ,நம் சிந்தையை முற்றிலும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறது. நாம் அனைவரும் அதன் நினைவுகளில் சஞ்சாரித்துகொண்டேதான் இருக்கிறோம்.
                காவடி எடுப்போம் என்பது மார்கழியில் பாதயாத்திரை சமயத்தில் கருவாக தோன்றி ,பல தடைகள் வந்த போதும் அவற்றை வெற்றிகரமாய் தகர்த்து ,நமக்கு மனதில் சந்தோசம்,நெகிழ்ச்சி,நம்பிக்கை,உறுதி,ஒற்றுமை இன்னும் வார்த்தைகளில் வடிக்க இயலாத பல உணர்வுகளை நமக்கு கொடுத்து இனிதாக நிறைவடைந்துள்ளது.
                     ஒரு செயல் தொடங்கியபின் ,கிரீஸ் இட்ட இயந்திரம் போல் வழுக்கிக்கொண்டு அதன் பாதையில் செவ்வனே செல்லும் போதே அதன் உத்தேசியமும் முழுதாய் நிறைவேறும், இதில் எவ்வித ஐயமும் வேண்டியதில்லை.அதன்படி இந்த காவடி கங்கணம் கட்டப்பட்ட நாள் முதல் ,அவன் அருளாலே அவன் நினைத்தபடி முடிந்தது.
            இதில் நான் உணர்ந்த சிறு பகுதியை இங்கே பகிர்கிறேன்.சில விஷயங்கள் பகிரப்படும் போது இந்த காவடியின் முழு அடையாளமும் தெரியவரும்.என்னால் முடிந்தவரை சில நிகழ்வுகளை பதிவுசெய்கிறேன்.
           
              காவடி அலங்காரம் செய்ய என அதன் சம்மந்தப்பட்ட பொருள் சேகரிக்க சித்தப்பாவுடன் தேவியும்,நானும் புறப்பட்டோம்.முதலில் பால் சுமக்கும் செம்பு வாங்க என...மீனாட்சி அம்மன் கோவில் புற வீதிகளில் அலைய நாம் நினைத்த அளவில் ,எண்ணிக்கையில் செம்புகள் கிடைக்கவில்லை. புதுமண்டபத்தில் உறவினர் கடை இருப்பது நினைவில் வர....தேவி நேராக சென்று நின்ற இடம்..."கதிர்வேல் பிள்ளை பாத்திரக்கடை" அங்கு நாங்க கேட்டது கேட்டபடி அரைமணியில் தருவதாய் சொன்னார்கள்.அங்கேயே காவடியில் கட்ட மணியும்,கச்சையில் கோர்க்க சலங்கையும் வாங்கினோம்.
               
         அடுத்து காவடியில் வைக்க சாமிப்படம் வேண்டும் என மண்டபத்தை சுற்றும் போது கண்ணில் பட்டது சாமி ஊர்வலம் வரும் போது முன்னே வரும் குடையும்,அதில் இருந்த படங்களும்.அந்த துணியில் அச்சடிக்கப்பட்ட முருகன் படங்களை கேட்க....முதல் முறையாக நமக்கு அந்த படங்களை தனியாக விற்பனை செய்தார் அந்த கடைகார்.
               
               ஒருபுறம் முருகன் படம் என முடிவு செய்து....அங்கிருந்த மற்ற படங்களை பார்த்தபோது....பிள்ளையார்,மயில்,சேவல்,அம்மன்,சிவலிங்கம்,நந்தி,நாமம்,சூலம் என வரிசையாய்...எடுத்து வைத்தோம்..அதன் பின் கருப்பணசாமி படம் கிடைத்தது. நாங்கள் முத்தையா படம் வேண்டும் என கேட்க ,சித்தப்பா சிரித்தார்கள்...கடைகாரர் முத்தையா படம் இல்லை எனவும் ,நாங்கள் கருப்பனை பச்சை வஸ்திரமிட்டு முத்தையாவாக மாற்றுவதாய் சொன்னோம்.அதன் பின் மதுரை வீரனும் எளிதில் கிடைத்தார்.
                    
                அடுத்து கச்சை....எடுக்க அடுத்த கடை நாட.. அதற்குள் அண்ணன் தம்பி வந்து இணைந்தனர்.கச்சை பொதுவாக கருப்பும் ,சிவப்பும் தான் உண்டு.கருப்பனுக்கு கருப்பு என எட்டு கச்சை தயார்.ஆனால் மாவடியானுக்கு பச்சை கச்சை தான் வேண்டும் என ராஜா மாமா அடம்பிடிக்க ,அந்த கலரில் கச்சையே இல்லை என கடைகாரர் சத்தியம் செய்தார்.பின்னர் பலத்த யோசனைக்கு பின்னே சிகப்பு கச்சையின் நடுவே பச்சை ஜரிகை வைத்து மாவடியான் கச்சை தயாரித்தோம்.
அடுத்த பதிவில்.....கவை உருவானவிதம் வளரும்.