காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-26
அன்பருக்கு அன்பனே நீ வா வா சண்முகா
ஆறுபடை வீடுடையாய் வா வா சண்முகா
இன்பமய சோதியே நீ வா வா சண்முகா
ஈசனுமை பாலகனே வா வா சண்முகா
உரகசயனன் மருகனே நீ வா வா சண்முகா
ஊமைக்கருள் புரிந்தவனே வா வா சண்முகா
எட்டுக்குடி வேலவா நீ வா வா சண்முகா
ஏறுமயில் ஏறியே நீ வா வா சண்முகா
ஐங்கரனுக் கிளையவனே வா வா சண்முகா
ஆறுமுக வேலவனே வா வா சண்முகா
ஒய்யாரி வள்ளலோலா வா வா சண்முகா
ஓங்கார தத்துவமே வா வா சண்முகா
ஓளவைக் குபதேசித்தவா வா வா சண்முகா
அகிலலோக நாயகனே வா வா சண்முகா
ஆடி வா நீ, ஓடி வா வா சண்முகா
ஓடி வா நீ ஆடி வா வா சண்முகா
காவடி பெருவிழா என்றும் நீங்கா நினைவு பசுமையாய் நிறைந்தது . இரு வருடங்கள் கடந்துவிட்ட நிலை, நினைவலைகள் பயணப்பட இப்பதிவுகளை நிறைவிக்க இதோ ஓர் பதிவு. ஆடி வா,நீ ஓடிவா என அவனை அழைத்த வண்ணம் ஏறுமயில் ஏறிவரும் அழகனை தரிசிக்க காவடிகளும் அதனை சுமந்த அடியார்களும் பேருந்தில் ஏறி பழனியம்பதி நோக்கிய புண்ணிய பயணம். இதில் அழகு காவடிகளுக்கெனவே தனியாய் ஓர் வாகனம் . இருமருங்கும் மயில் பீலி அலங்கரிக்க ஒவ்வொரு இருக்கையிலும் இருக்கைகளில் தாங்கிய பன்னிரு கைகள் கொண்டவனின் பக்திக் காவடிகள். காற்றில் அவை அசைந்தாட இளம் மாலைப் பொழுதில் இறங்கும் சூரியனின் மென் ஒளி மிளிரல் வாயுதேவனின் இதமான வருடலில் அசைந்தாடும் மயில் பீலிகள் , பால் மனமும், சந்தனமும், சவ்வாது விபூதியும் கமழ கந்தன் காவடிகள் சென்றடைந்தன பழனியம்பதி . இடும்பனார் தூக்கியது, முதல் காவடி, எனவே காவடிகள் முத்தக் தரிசனம் செய்வதும் முக்கண் மைந்தர் பதம் பணிந்த இந்த மூத்த அடியாரையே. இடும்பன் சன்னதியில் பதினாறு காவடியும், இரு தீர்த்த காவடிகளும் வரிசை,வரிசை என முருகன் தரிசனத்தின் முன்னே இடும்பன் தரிசனத்தை நோக்கி குவிந்திருந்தது. தீப மங்கள ஜோதி நமோ நம என அவர் தம் அருள் பெற்று. அங்காளஈஸ்வரி மண்டபம் அடைந்தது காவடிகள்.
திருமணம் பல நிகழும் மண்டபம், அதன் மணமேடை அன்றும் பூக்களால் நிறைந்திருந்தது , ஆனால் இன்று மேடையில் வீற்றிருந்தது கந்தன் காவடிகள்.வரிசையாய் ,கம்பீரமாய் ,கண் நிறைத்த வேலவர் வில் போலே, எம் குலத்தவர் நெஞ்சம் நிறைந்த கவலைகளை எல்லாம் சுமந்து நின்று, கந்தன் காலடியில் சேர்பித்து, அவன் விமோசனம் தந்து அருள் பாலிக்க நாங்களே சாட்சி என சொல்லாமல் சொல்லும் சொர்ண காவடிகள், காவி உடுத்தி காத்திருந்தன.
பொழுது புலர்ந்தது, அன்று அருணன் வரும் முன்னே எம் மக்கள் யாவரும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நீராடி, புத்தாடை புனைந்து, நெற்றியில் நிறைந்த வெண் திருநீறு அணிந்து, சந்தனமும், குங்குமமும் கமழ , இதோ எம் குல காவடி செலுத்த யாம் முன்னேறுகிறோம் என்றே உள்ள உவப்புடன் கிளம்பிவிட்டோம். வேடனாய் வந்த வேலவரைக் காண விண்முட்டும் அரோகரா கோசத்துடன் கிளம்பியது சுப்பன் காவடி, கண்ணுதல் தெய்வமாம் கலிவரதனை கண்டிட கிளம்பியது கருப்பன் காவடி, முத்தான முத்துக் குமரனின் முக வடிவை தரிசிக்க முன்னேறுகிறது முத்தையன் காவடி, ஆதிநாயகியின் அரும் தவப் புதல்வனை தரிசிக்க சித்தமாகியது சக்தி காவடி, கோபம் கொண்ட பழனியாண் டியை குளிர்விக்க குடத்தோடு புறப்பாடானது கொடுமுடி தீர்த்த காவடி.
நாரதர் கலகம் , பழம் கொண்டு நிகழ்த்த ,பழம்பெரும் நாடகக்காரர் அதனை முன்னின்று நடத்த, தாயவள் முன்னே நடந்தேறிய திருவிளையாடல் , ஞானமே வடிவாய் வந்த நாயகன் ஞானபண்டிதன் ஒன்றும் அறியா குழந்தைபோல் மயில் வாகனத்தில் உலகத்தை வலம் வர, முன்னவர் அவர் தும்பிகைநாயகர் ,நம்பிக்கையாய் தம் தாய் தந்தையரை வலம் வந்து கனியை பெற, சினம் கொண்ட முருகு குன்றில் குடியேற, குன்றெல்லாம் அழகன் அருள் நிறைக்க வென நடந்தேறிய விளையாட்டில் ,அருள் பெற்ற முதல் இடம் பழம் நீ, என தண்டம் தாங்கி அருள் நின்ற இடம் பழனியம்பதி, ஆவினன்குடி சிறக்கும் முருகா என திரு முருகாற்றுப் படை படைக்க நக்கீரர் வாய் மொழியில் சிறப்பு பெற்ற தலம் அதன் வீதிவழி ஆடிவாறோம் , நாங்கள் ஆடிவாறோம் நின் புகழ் பாடி காவடி தூக்கி ஆடிவாறோம் என அங்காளஈஸ்வரி மண்டபம் விட்டு ஆவினன் குடி கோவில் நோக்கி தரிசிக்க புறப்பட்டது காவடி.
திருஆவினன்குடியில் கொலு வீற்றிருக்கும் குழந்தை,வேல்தாங்கிய சுவாமி, அவர் தம் திருப்பாதம் தரிசிக்க வென்றே ,காவடிகள் தவம் இருந்து ஆடி வந்தன. என்ன தவம் செய்தனை என்ற வார்த்தை, யசோதைக்கு மட்டும் அன்று பொருந்தும், இவுலகில் அன்பராய் ஆண்டவன் அடிமையாய் கோலம் பூண்டு விரதம் இருந்து பக்தி செய்து பரவசத்தில் மூழ்கி தனை மறந்து ஆடித்திரியும் அத்தனை அடியார்க்கும் பொருந்தும் வார்த்தைகள் அவை. பிறந்தோம், இருந்தோம், வாழ்ந்தோம் , வந்தோம், சென்றோம் என்ற வாழ்வில், என்றேனும் ஓர் நாள் சிறப்புடையது என்றால் அது , தன்னையே இறைக்கு ஒப்புவித்து, அந்த ஆன்மீகக் சாகரத்தில் மிதந்து மெய் சிலிர்த்து, உள்ளம் உருகி நின்ற சில பொழுதுகளை கூறலாம்.அன்றும் அது போன்ற ஓர்நாள் , மெய்யடியார்கள் மேனி சிலிர்த்து, தன்னை மறந்து, நான் எனும் அகந்தை அகன்று ,அவன் குழந்தை நாம் எனும் பாவனையில், தாய் மடித் தேடி ஓடும் கன்றினைப் போல் கந்தன் கருணை மழையில் தாகம் தீர்த்து, பரவசம் உற்ற நாள்.
இந்த நாள் காணவே இத்தனை நாள் காப்பு கட்டி விரதம் பூண்டோம் என்றே ,சுப்பன் குடும்பம் ஒன்று கூடி அப்பனை தரிசிக்க சென்றது காவடி தூக்கி.ஆவினன் குடியில் குழந்தை வேலாயுதரை கண்டப் பின்னே,கிரிவலம் வந்து மலை ஏற வேண்டும். கிரிவலம் வரும் முன்னே, மலையடிவாரத்தில் அமர்ந்திருந்த முன்னவர், யானை முகத்தானை வழிபட்டு ,கிரிவலப் பாதையில் முன்னேறியது காவடி.
No comments:
Post a Comment